தூக்கம்
கொசுவிரட்டிச் சுருளின்
உபாதையின்றி,
முள்ளாய் உறுத்தும்
மெத்தையின்றி,
ஆடை விலகும்
பிரக்ஞை இன்றி,
ஆனந்தமான சயனம்.
விரைந்து செல்லும்
வாகனப் புகையுண்டு.
சுட்டெரிக்கும்
வெயிலுண்டு.
அதிரவைக்கும்
இரைச்சலுண்டு.
காலை நக்கும்
நாயோடு
அமைதியான நித்திரையும்
உண்டு.
மூட்டை தூக்கிய களைப்பு
மூன்று வேளைப் பசி
கட்டைவிரல் நகத்தில்
காய்ந்த ரத்தத்தில்
மொய்க்கும் ஈக்களை
மண்ணில் தேய்த்தபடி
நிம்மதியான உறக்கம்.
சயனம்
நித்திரை
உறக்கம்...
நண்பனே,
வேகமாக நகர்ந்துவிடு.
உன் பெருமூச்சில்
ஏழையின் தூக்கம்
கிழிந்துவிடப் போகிறது.
நன்றி: விஜயபாரதம் (14.07.2000)
.
No comments:
Post a Comment