பின்தொடர்பவர்கள்

Saturday, December 26, 2009

வசன கவிதை - 34நுரை

நதி ஓடிக்கொண்டிருக்கிறது.
நெளிந்து நெளிந்து ஓடும் நதி ஆழமான சுழலில் திக்கித் திணறிக் கடக்கும்போது நுரை பொங்கித் தெறிக்கிறது.
நுரையின் வெண்மையும் மினுமினுப்பும், அதன் சட்டென முடிந்துபோகிற வாழ்க்கையும், நதியின் ஓட்டத்தில் நடந்துகொண்டே தான் இருக்கின்றன.
நிறையப் பேருக்குத் தெரிவதில்லை- நதிநீரில் கலந்துள்ள மாசுக்களின் தோற்றம் தான் நுரை என்பது.
தன்னை மாசுபடுத்தும் மானிட குலத்துக்குக் கூட நதி இங்கே ஓர் நிலையான உண்மையைச் சுட்டிக்காட்டவே விரும்புகிறதோ?
பாறைகளிலும் ஆழமான சுழல்களிலும் தன்னை மோதி, தன்னைத் தானே சுத்திகரிக்கும் நதியின் வெளிப்பாடு, மானிடர்க்காகத் தான்.
சென்ற நிமிடம் உருவான நுரைமொட்டு, நதியின் போக்கில் வளைந்த நாணலில் பட்டு வெடிக்கிறது; நாணல் சிலிர்க்கிறது.
நதிநீரில் மீன்கள் துள்ளி விளையாடுகின்றன. அதன் செதில்களில் படிந்த நுரை நமக்கு அழகாகத் தெரிகிறது. மீனுக்கு அது அச்சத்தை ஏற்படுத்தியிருக்கும்.
நதிநீரில் தண்ணீர்ப் பாம்புகள் நீச்சலடித்து அளவளாவுகின்றன. தன் நச்சுத் தன்மையை விட்டு விட்டு வாழும் அதைக் கண்டு மனம் மகிழ்கிறது. ஆனால்-
நதிக்கு வெளியே ஆசை என்னும் நச்சுப்பல் கொண்ட மானிடர்களின் நடமாட்டம் அச்சப்படுத்துகிறது.
கழிவுநீர்க் கால்வாயையும் வேதிச் சாய நீரையும் நதியோடு சேர்த்துவிட்டு நடந்துபோகிறான் மானிடன். நதியின் கதறல், நுரை தள்ளிய அலறல், அவனுக்கு சிறுபிள்ளை விளையாட்டு.
நிர்மலமான நீலவானின் பிரதிபலிப்பைத் தன் நிறம் ஏறிவிட்ட நீரில் காட்டும் நதியின் சோகப் புன்னகை தான் நுரையோ?
எழுதிய நாள்: 26.07.1998

.

No comments:

Post a Comment