Tuesday, August 31, 2010

சிந்தனைக்கு



கருவூலம்




மாணிக்கம்கட்டி வயிரம்இடைகட்டி
ஆணிப்பொன்னால்செய்த வண்ணச்சிறுத்தொட்டில்
பேணிஉனக்குப் பிரமன்விடுதந்தான்
மாணிக்குறளனே... தாலேலோ...
வையமளந்தானே... தாலேலோ...
-பெரியாழ்வார் திருமொழி
(மூன்றாம் திருமொழி -1)
.

Monday, August 30, 2010

எண்ணங்கள்


உங்களுக்கும் பிடிக்கும்...


செம்மொழி மாநாடு குறித்த திரு. சேக்கிழான் எழுதிய 'இனியவை இருபதும் இன்னா இருபதும்' கட்டுரை, அவரது வலைப்பூவில் வெளியாகியுள்ளது. அது எனது வலைப்பூ நண்பர்களுக்காக.

-----------------------------------------------------------------------

.

Sunday, August 29, 2010

சிந்தனைக்கு




பாரதி அமுதம்



வெள்ளை நிறத்தொரு பூனை -எங்கள்
.....வீட்டில் வளருது கண்டீர்;
பிள்ளைகள் பெற்றதப் பூனை- அவை
.....பேருக் கொரு நிறமாகும்;

சாம்பல் நிறமொரு குட்டி- கருஞ்
.....சாந்தின் நிறமொரு குட்டி,
பாம்பின் நிறமொரு குட்டு- வெள்ளைப்
.....பாலின் நிறமொரு குட்டி.

எந்த நிறமிருந்தாலும் -அவை
.....யாவும் ஒரே தரமன்றோ?
இந்த நிறம் சிறிதென்றும் - இஃ
.....தேற்றமென்றும் சொல்லலாமோ?

வண்ணங்கள் வேற்றுமைப் பட்டால் - அதில்
.....மானிடர் வேற்றுமை இல்லை;
எண்ணங்கள் செய்கைகள் எல்லாம் - இங்கு
.....யாவர்க்கும் ஒன்றெனல் காணீர்!...

ஊருக்கு நல்லது சொல்வேன்- எனக்கு
.....உண்மை தெரிந்தது சொல்வேன்...

-மகாகவி பாரதி
(முரசு)
.

Saturday, August 28, 2010

எண்ணங்கள்

முதுகெலும்பு இல்லாதவர்களா மக்கள்?
- வ.மு.முரளி

மத்திய அமைச்சர் ஒருவரின் வாரிசு அவர். 'இந்தியாவின் எதிர்காலமே வருக' என்று அவருக்கு 40 அடி உயர பிளக்ஸ் விளம்பரம். பின்னலாடை நகரமான திருப்பூரில் சில வாரங்களுக்கு முன் பல இடங்களில் இத்தகைய கட்அவுட்களைக் காண நேர்ந்தது. இத்தனைக்கும் அவர் மாவட்ட நிர்வாகியோ, வார்டு கவுன்சிலரோ கூட இல்லை.

அதற்கு இரு வாரங்கள் முன்னர்தான், துணைமுதல்வர் வருகைக்காக, திருப்பூர் நகரில் எங்கெங்கு பார்த்தாலும் வரவேற்பு வளைவுகளும், பிரமாண்ட பேனர்களும் ஆளும் கட்சியினரால் வைக்கப்பட்டிருந்தன. அவற்றில் ஒன்று சரிந்து விழுந்ததில், வாகனத்தில் சென்றவர் காயமடைந்தார்.

இதுபற்றி பத்திரிகைகளில் செய்தி வெளியானவுடன், விளம்பர பேனர்களை அகற்றுமாறு துணைமுதல்வரே உத்தரவிட்டதாகக் கூறினார்கள். உடனே, சில பேனர்கள் மட்டும் அகற்றப்பட்டன. அதற்கே நகர மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டார்கள்.

ஆளும்கட்சிதான் என்றில்லை; பிரதான எதிர்க்கட்சியான அதிமுக திருச்சியில் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்திலும் பிரமாண்ட பிளக்ஸ் விளம்பரங்கள் பார்வையாளர்களை மிரட்டின.

ஒருவகையில் மக்கள் திரளைக் கூட்டுவதிலும், உற்சாக மனோபாவத்தை உருவாக்குவதிலும், இத்தகைய பிரமாண்ட விளம்பரங்கள் பெரும்பங்கு வகிக்கின்றன. ஊடகங்களும்கூட, இத்தகைய பிரமாண்டங்களையே படங்களாகப் பிரசுரிக்கின்றன.

சாதாரண கொண்டைக்கடலைச் சுண்டலானாலும், 'சூடான, சுவையான, மசாலா சுண்டல்' என்று கூவும்போதுதானே, பழைய சுண்டலும்கூட விலை போகிறது? அரசியல்கட்சிகள் மக்களை ஆச்சரியப்படுத்துவது வியப்பளிக்கவில்லை. ஆயினும், அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சாகிவிடும் என்பதை அரசியல்கட்சியினர் உணர்வதில்லை.

நமது அரசியலில் தவிர்க்க முடியாத அம்சமாக, பிரமாண்ட கட்அவுட்கள் இடம் பிடித்து பல ஆண்டுகளாகிவிட்டன. நவீனத் தொழில்நுட்பத்தின் வரவால், இந்த உத்தி இப்போது பல மடங்காகி இருக்கிறது எனலாம். துணி பேனர்களும், சுவரொட்டிகளும் இப்போது வழக்கொழிந்துவிட்டன. அந்த இடத்தில், கவர்ச்சிகரமான பிளக்ஸ் விளம்பரங்கள் அசுரபலத்துடன் ஆட்சி செய்கின்றன.

அரசியல் தலைவர்களுக்கு தொண்டர்கள் விளம்பரம் வைப்பதும், கொடி கட்டுவதும் புதிதல்ல. ஒருவகையில், கட்சி மீதான அபிமானத்தை வெளிப்படுத்த, தங்கள் உழைப்பை தொண்டர்கள் வழங்க இது ஒரு வாய்ப்பாக இருந்ததுண்டு.

ஆனால், இப்போது கட்சித் தொண்டர்கள் யாரும் பேனர் வைக்க மெனக்கெடுவதில்லை. இதற்கென்று பிரத்யேக ஒப்பந்ததாரர்கள் இப்போது உள்ளனர். இதுவும் ஒரு நல்ல தொழிலாகிவிட்டது. ஒரே ஒப்பந்ததாரரே, எல்லா கட்சியினருக்கும் இத்தகைய விளம்பரப் பணிகளைச் செய்து விடுகின்றனர்.

தேர்தல் காலம் மட்டுமல்லாது, அமைச்சர் வருகை, ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டங்களிலும் இப்போது விளம்பர மோகம் தலைவிரித்து ஆடுகிறது. இந்த விளம்பரங்களுக்கு எவ்வளவு செலவாகிறது? இந்தச் செலவுகளை யார் செய்கிறார்கள் என்பது புரியாத புதிர். இத்தகைய விளம்பரங்கள் முறைகேடுகளுக்கும் ஊழல்களுக்குமே வழிவகுப்பது அனைவரும் அறிந்தது தான்.

விளம்பர பேனர்கள் தொடர்பான நீதிமன்ற உத்தரவுகள் அரசியல்கட்சிகளால் மதிக்கப்படுவதில்லை. ஆளும்கட்சியினர் சாலையை மறைக்கும் அளவுக்கு பேனர்கள் வைப்பதால் விபத்துக்கள் ஏற்படுவது சகஜமாகிவிட்டது. இதைக் கண்டிக்க வேண்டிய எதிர்க்கட்சியினரும், தங்கள் பங்குக்கு போட்டியிட்டுக் கொண்டு பேனர்கள் வைக்கின்றனர்.

சமீபகாலமாக, சாலைகளில் இயந்திரத்தால் துளையிட்டு இரும்புக்குழாய்களில் கட்சிக்கொடிகளைப் பதிக்கும் கலாசாரம் அதிகரித்து வருகிறது. இதிலும் ஆளும்கட்சிக்குத்தான் முன்னுரிமை. அண்மையில் கோவை, சேலம் நகரங்களுக்கு முதல்வர் கருணாநிதி வருகை தந்தபோது, நெடுஞ்சாலைகள் பட்ட காயங்கள் இன்னும் ஆறவில்லை.

ஒருநாள் கூத்துக்காக சாலைகளில் துளையிட்டு, குழிபறித்து கொடி கட்டுபவர்கள், விழா முடிந்தவுடன் அவரவர் வேலைகளைப் பார்க்கக் கிளம்பி விடுகிறார்கள். ஏற்கனவே தரமின்றி இருக்கும் சாலை, கொடிக்கு வெட்டிய குழிகளால் மேலும் சிதைந்து, வாகனஓட்டிகளை பதம் பார்க்கிறது.

சாதாரணமாக, குடிநீர்க்குழாய் இணைப்புக்காக விண்ணப்பிக்கும்போது, சாலையில் குழி பறிக்கவும், குழாய் பதித்த பிறகு சாலையைச் செப்பனிடவும் உள்ளாட்சி நிர்வாகங்கள் தனிக்கட்டணம் வசூலிக்கின்றன. ஆனால், தோண்டப்படும் குழிகள் சரியாக மூடப்படுவதில்லை.

இந்நிலையில், முக்கிய பிரமுகர்களின் வருகை காரணமாக சாலைகள் மேலும் பாழ்படுத்தப்படுகின்றன. இந்தப் பள்ளங்களில் தண்ணீர் தேங்கி, தார்ச்சாலையின் ஆயுளைக் குறைக்கின்றன.

சாலைகளின் இருபுறமும் இயந்திரத்தால் துளையிட்டு கட்சிக்கொடிகளை இரும்புக் கம்பிகளில் ஊன்றிவைக்கும் நடைமுறை உடனடியாகத் தடை செய்யப்பட வேண்டும்.

சாலைகள் மேடு, பள்ளமாக இருப்பது, வாகனஓட்டிகளின் முதுகெலும்பை கடுமையாகப் பாதிக்கும் என்று எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்.
இதனால்தான், முக்கிய பிரமுகர்கள் வரும் சாலைகளில் வேகத்தடைகள் அகற்றப்படுகின்றன: பள்ளங்கள் மேவப்பட்டு புது தார்ச்சாலைகள் அமைக்கப்படுகின்றன.

அதே பிரமுகர்களுக்காக வரவேற்பு விளம்பரம் வைக்கத் தோண்டப்படும் குழிகளால், மக்களின் முதுகெலும்பு பாதிக்கப்படுகிறது.

ஆட்சியாளர்களுக்கு ஒரு நீதி; சாமானிய மக்களுக்கு ஒரு நீதி. இதைக் கண்டிக்கும் "முதுகெலும்பு' யாருக்கும் இல்லை என்று அரசியல்வாதிகள் எண்ணுகிறார்கள் போலிருக்கிறது.
----------------------------------------------------------------------
நன்றி: தினமணி (27.08.2010)
காண்க: தினமணி
.

Friday, August 27, 2010

மரபுக் கவிதை - 105




முருகன் பெருமை




முருகா உன் புகழ்தனையே பாட முடியுமா?
...............முத்தமிழின் முதல்வா, என் குறையைப் போக்க வா!
சருகானேன் உனையெண்ணி சண்முகநாதா!
...............சங்கடத்தைத் தீர்த்திடவே சடுதியில் வாராய்!
(முருகா)
திருக்கயிலை வாசனுடைய குருவாய் ஆனாய்!
...............தினையுண்ணும் குறத்திக்கு கணவனும் ஆனாய்!
கருநீலக் கண்ணனுடைய மருகன் ஆனாய்!
...............கந்தா உன் தத்துவத்தை விளக்க முடியுமா?
(முருகா)
நான்முகனின் கர்வத்தைக் குட்டி ஒழித்தாய்!
...............நாசஉரு அரக்கர்களை நடுங்கிடச் செய்தாய்!
வேண்டியவர் குறை நீக்க வேலைத் தாங்கினாய்!
...............வேதங்களும் புகழுகின்ற முருகா! முருகா!
(முருகா)
எழுதிய நாள்: 28.06.1988
.

Thursday, August 26, 2010

புதுக்கவிதை - 113


நிகழ்

நிழலில் அமர்ந்து
அடிமரம் அறுப்பவன்
தலைமேல் சூரியன். .

Wednesday, August 25, 2010

சிந்தனைக்கு



கருவூலம்


வடாஅது பனிபடு நெடுவரை வடக்கும்,
தெனாஅது உருகெழு குமரியின் தெற்கும்,
குணாஅது கரைபொரு தொடுகடல் குணக்கும்,
குடாஅது தொன்றுமுதிர் பௌவத்தின் குடக்கும்,
கீழது முப்புணர் அடுக்கிய முறைமுதல் கட்டின்
நீர்நிலை நிவப்பின் கீழும், மேலது
ஆனிலை உலகத் தானும், ஆனாது,
உருவும் புகழும் ஆகி, விரிசீர்த்
தெரிகோல் ஞமனன் போல, ஒரு திறம்
பற்றல் இலியரோ! நின் திறம் சிறக்க!...
-காரிகிழார்
(புறநானூறு- 6 , வரிகள்: 1 -10)
.

Tuesday, August 24, 2010

வசன கவிதை - 77



ராக்கி



இந்த சின்ன நூல் கயிறா
நம்மை ஒன்றுபடுத்துகிறது?

சாதிகளால் பிளக்கப்பட்ட,
மொழிகளால் சிதைக்கப்பட்ட,
மதங்களால் காயம்பட்ட,
பரந்த பாரத தேசத்தை
இந்த சின்ன நூல் கயிறா
ஒன்றுபடுத்துகிறது?

பிணைக்கும் சக்தி
உருவத்தில் இல்லை;
பிணைப்பின் வலிமை
கட்டப்படும் பொருளிலும் இல்லை.
வாமனனின் சிறப்பு
பாரதத்துக்கு தெரியும்.

முத்தத்தில் வெளிப்படும்
தாயின் அன்பு போல,
ராக்கியில் வெளிப்படுகிறது
சகோதரத்துவ நேசம்.
எல்லைகளை உடைத்து
மூவுலகாளும் வல்லமை
அன்பிற்கு உண்டு.

வாருங்கள்!
ராக்கி கட்டிக் கொள்ளுங்கள்;
ராக்கி அணிவியுங்கள்!
விதைக்குள் உறங்கும்
விருட்சமாய் மாறுங்கள்!
நாட்டைப் பிணைக்கும்
ராக்கியாகவே மாறுவீர்கள்!
இன்று ரக்ஷா பந்தன் தினம்.
.

Monday, August 23, 2010

வசன கவிதை - 76



திருவோணம்
வந்தல்லோ...


தமிழக கல்லூரிகளில்
அத்தப்பூக் கோலங்கள்.

அண்டை மாவட்டங்களில்
உள்ளூர் விடுமுறைகள்.

நட்சத்திர விடுதிகளில்
ஓணம் சத்யா விருந்துகள்.

கேரளம் செல்லும்
பல டன் காய்கறிகள்.

மலையாளிகளுக்கு
அரசியல்வாதிகளின் வாழ்த்துக்கள்.

பெரியாறு அணையில்
தற்காலிகமாக
நிறுத்தப்பட்ட சோதனைகள்...

-இன்று திருவோணப் பண்டிகை; கேரள சகோதரர்களுக்கு வாழ்த்துக்கள்.

..

Sunday, August 22, 2010

வசன கவிதை - 75




பாமர மனிதர்கள்...





பாலக்காடு -பிளிச்சிமடாவில்
நிலத்தில் புதைத்த
கோலா கழிவுகள்;


கோவை -காரமடையில்
கப்பலில் வந்த
அமெரிக்க குப்பைகள்;


பொள்ளாச்சி அருகே
சாலையில் கொட்டிய
தோல் கழிவுகள்;


பல்லடம் அருகே
வாய்க்காலில் வீசிய
செத்த கோழிகள்;


நொய்யல் நதியில்
வண்ணமாய்ச் சேரும்
சாயக்கழிவுகள்;


ஈரோடு அருகே
இரவில் திறந்துவிடப்படும்
தொழிற்சாலையின் நெடி;


நீர், நிலம், காற்றில்
விஷத்தை விதைத்து
விளையாடும் 'புள்ளிகள்';


சாயம் கலந்த தேநீர்க்கடையில்
போபால் செய்தியை
படிக்கும் மக்கள்;


அமெரிக்க கனவுடன்
கோழிக்கறி தின்று கோலா குடிக்கும்
வண்ணஆடை அணிந்த பாமர மனிதர்கள்...
.

Saturday, August 21, 2010

வசன கவிதை - 74




புத்தரின் புன்னகை


குயில்களின் இன்னிசை எங்கும் நிறைந்திருக்கிறது.
நறுமண மலர்களின் சுகந்தத்தை சுமந்தபடி
மெல்லிய தென்றல் எங்கும் தவழ்கிறது.
ஓங்கி உயர்ந்த அரசமர நிழலில்
மோன நிலையில் இருக்கிறார் புத்தர்.
மயில் ஆடிக்கொண்டிருக்கிறது;
அமைதி எங்கும் விரிந்திருக்கிறது.

ஊர்க்கோடியில் வீற்றிருக்கும்
காவியுடைத் துறவியைக் காண
கூட்டம் குழுமுகிறது; நோட்டமிடுகிறது.
வணங்கிய மக்களை வணங்கி,
அமுத மொழிகளைப் பகர்கிறார் புத்தர்:

ஆசையை விட்டொழியுங்கள்; அகிலத்தை ஆளுங்கள்.
தர்மம் செய்யுங்கள்; தர்மப் பாதையில் செல்லுங்கள்.
சங்கம் ஆகுங்கள்; சங்கமம் ஆக்குங்கள்.
புத்தன் ஆகுங்கள்; புது உலகைக் காணுங்கள்.

கூறிய புத்தனை பணிகிறது கூட்டம்.
மலர்களைத் தூவுகின்றனர் மக்கள்.
தூவிய மலர்களை திருப்பி வழங்கி
ஆசி அளிக்கும் புத்தனைக் கண்டு
ஒருவன் மனதில் குமுறும் கோபம்.

இத்தனை நாட்கள் கட்டிக் காத்த
ஆசைகள் பொய்யா? பூசைகள் பொய்யா?
சீறும் கோபம் சொல்லினில் தெறிக்க
நிந்தனை மொழிகளால் அர்ச்சனை செய்தான்.
கோபத்தாலே நரம்பு புடைக்க
கத்திய அவனை கருணை தவழ
புத்தர் பார்த்தார்; புன்னகை புரிந்தார்.

பலமணி நேரம் வசைமொழி கூறியும்
புன்னகை மாறா புத்தனைப் பார்த்து,
ஓய்ந்தான் எளியவன்; புத்தர் சிரித்தார்.
மெல்லிய குரலில் உறுதியாய் ஒலித்தார்:

பக்தர்கள் தூவிய நறுமண மலர் போலவே
உனது குறுமொழி மலர்களை
புன்னகையாலே திருப்பித் தந்தேன்;
ஆசை இல்லா உள்ளம் இருந்தால்
புகழால் போதையும், இகழால் வாதையும்
நிகழ்வது இல்லை; நித்திய உண்மை.

என்றார் புத்தர்.
எளியவன் உணர்ந்தான்.
கண்ணீர் வழிய
கரங்கள் குவித்தான்.

புத்தரின் புன்னகை எங்கும் பரவுகிறது.
உலகில் அமைதி தவழ்கிறது.
மாலைச் சூரியனின் பொற்கிரணங்கள் வருட
மான்கள் மருண்டோடுகின்றன.
உடன் புலிகள் விளையாடுகின்றன.

குயில்களின் இன்னிசை எங்கும் நிறைந்திருக்கிறது
நறுமண மலர்களின் சுகந்தத்தை சுமந்தபடி
மெல்லிய தென்றல் எங்கும் தவழ்கிறது.

.

Friday, August 20, 2010

எண்ணங்கள்




படிக்க வேண்டிய கட்டுரை...



தமிழ் ஹிந்து இணையதளத்தில் வெளியாகியுள்ள, நண்பர் திரு ஜடாயுவின் கட்டுரை 'அகமதாபாதில் ஒரு நாள்' அற்புதமான படைப்பு. நட்புரிமையுடன் அக்கட்டுரையை இங்கு இணைத்துள்ளேன்.
காண்க: 'அகமதாபாதில் ஒரு நாள்'- ஜடாயு
.

Thursday, August 19, 2010

சிந்தனைக்கு


விவேக அமுதம்

மனிதன் எந்த அளவிற்கு உயர்ந்தவன் ஆகின்றானோ, அந்த அளவுக்கு அவன் சோதனைகளையும் கடந்து சென்றாக வேண்டும்.
-சுவாமி விவேகானந்தர்

.

Wednesday, August 18, 2010

சிந்தனைக்கு




கருவூலம்






வன்மை இல்லை, ஓர் வறுமை இன்மையால்;
திண்மை இல்லை, ஓர் செறுநர் இன்மையால்;
உண்மை இல்லை, பொய் உரை இலாமையால்;
வெண்மை இல்லை, பல் கேள்வி மேவலால்.
-கவிச்சகரவர்த்தி கம்பர்
(கம்ப ராமாயணம்- பாலகாண்டம், நாட்டுப்படலம்- 53)


.


Tuesday, August 17, 2010

உருவக கவிதை - 58



விளையாட்டு விபரீதம்



மூட்டைப்பூச்சிக் கடி பழகிவிட்டது.
தோல் மரத்துவிட்டது.
கொசுக்கடி சகித்து
சுகமாகத் தூங்குபவர்களுக்கு
அட்டைகள் உறிஞ்சும் ரத்தம்
சாதாரணம் தான்.

குளியலறைகளிலும்
சமையலறைகளிலும்
ஊரும் கரப்பான் பூச்சிகள்;
சுவர்களில் பல்லிகள்.
தண்ணீர்த் தொட்டியில் புழுக்கள்.
எல்லாம் பழகிவிட்டது.

வீட்டிலிருக்கும் சர்க்கரையை
கொள்ளையிடும் செவ்வெறும்புகள்;
அடுப்பிலிருக்கும் பாலை
கவிழ்த்து ருசிக்கும்
திருட்டுப் பூனைகள்;
எதிர்வீட்டைக் காவல் காக்கும்
நன்றியில்லா நாய்கள்-
எல்லாமே விளையாட்டாகிவிட்டது.

இப்போதெல்லாம்
எப்போதாவது தட்டுப்படும்
தேளும் பாம்பும் பூரானும்
கண்டால் மட்டுமே அச்சம்.

அடிக்கடி நடக்கும் ஊழல்களும்
எப்போதாவது நடக்கும் விபரீதங்களும்
அரியவர்களின் எளிய
பொழுதுபோக்காகிவிட்டன;
கரவொலி எழுப்பி
கரங்கள் சிவந்து விட்டன.

தோல் மரத்துவிட்டது;
மூட்டைப்பூச்சிக் கடி பழகிவிட்டது.
.

Monday, August 16, 2010

மரபுக் கவிதை - 104




அறிஞரை அறிதல்



புரிதல், புரிந்தது போல் நடித்தல், பிற்பாடு
தெரிதல், தெரியாததையும் தெரிந்தது போல்
திரிதல், திரிந்தபடி அறிதல், அறியாத தெனினும்
சொரிதல் அறிஞர் தொழில்.
.

Sunday, August 15, 2010

சிந்தனைக்கு


சான்றோர் அமுதம்

எந்த நாட்டின் இளைஞர்கள் மனதில்
இறந்தகாலம் குறித்த பெருமிதம்,
நிகழ்காலம் குறித்த விசனம்,
எதிர்காலம் குறித்த பொற்கனவுகள்
நிறைந்துள்ளதோ,
அந்த நாடுதான் உயிர்ப்புடன் திகழும்.
-மகரிஷி அரவிந்தர்
(இன்று நாட்டின் 64-வது சுதந்திர தினம்; அரவிந்தர் நினைவுதினம்)
..

Saturday, August 14, 2010

வசன கவிதை - 73



உண்மையாய் வா!


பெருமைக்காக
காஷ்மீரில் ஊடுருவும்
சகோதரனே
பிரிவினையின் வேதனையை
உணர்ந்து பார்.

அமைதிக்காக
புறாக்களைப் பறக்கவிடும்
அன்பார்ந்த தன்மையை
அலட்சியப்படுத்தாதே,
அண்டைவீட்டானே!
'போக்ரான்' சக்திஸ்தலமும்
எங்களது தான்.

ஒற்றுமைக்காக
சமரசத்தை விழையும்
சகிப்புத்தன்மையை
சாதாரணமாய் நினைக்காதே!
சிறிது சிந்தி-
டிச. 6ஐ.

நட்புக்காக ஆரத்தழுவும்
பரந்த மனப்பான்மையை
பாழாக்க முயலாதே!
எம் கரங்களில்
'கார்கில்' நகங்களும் உண்டு.

ஏ, சகோதரனே!
வட்டமிடும் வல்லூறு
வல்லரசுகளுக்கு மத்தியில்
வண்ணமாய் மிளிரும்
பாரதத்தைப் பார்!
இனியேனும் உன்
பொறாமை அழுக்குகள்
பொசுங்கிப் போகட்டும்!

உலகுக்காக
ஒப்பந்தம் செய்வதால்
ஒரு பயனுமில்லை,
உண்மையாய் வா
சகோதரா!
உருக்கென இணைவோம்!
உவப்பாய் வாழ்வோம்!


நன்றி: விஜயபாரதம்
ó

Friday, August 13, 2010

சிந்தனைக்கு



குறள் அமுதம்



ஈதல் இசைபட வாழ்தல்; அதுஅல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு
-திருவள்ளுவர்
(புகழ்-231)
.

Thursday, August 12, 2010

உருவக கவிதை - 57






ஊசல்


புரிபடாத படிமத்திற்கும்
மலினமான மடக்கு வரிகளுக்கும்
இடையே ஊசலாடுகிறது
கவிதை.

புரிபடாத உருவகத்தைக் கொண்டாடும்
அறிவுலகத்துக்கும்,
எழுதுவதெல்லாம் கவியென்ற
எளியவர்களுக்கும்
இடையே ஊசலாடுகிறது
கவிதை.


இரண்டும் வேண்டாம் என்ற
தனிப்பாட்டை
எனது.

காலத்தை வெல்வது தான் கவிதை.
காலம் பதில் சொல்லும்.
.

Wednesday, August 11, 2010

சிந்தனைக்கு


குறள் அமுதம்

வறியார்க்குஒன்று ஈவதே ஈகை மற்றெல்லாம்
குறியெதிர்ப்பை நீரது உடைத்து.
-திருவள்ளுவர்
(ஈகை-221)
.

Tuesday, August 10, 2010

எண்ணங்கள்


படிக்க வேண்டிய கட்டுரை

தமிழ் ஹிந்து - இணையதளத்தில் வெளியாகியுள்ள திரு. சேக்கிழான் எழுதியுள்ள கட்டுரை: ஈரோட்டில் ஒன்றுபட்ட இந்து மக்கள் சக்தி: ஒரு விரிவான அலசல் - எனது வலைப்பூ நண்பர்களுக்காக.

.

Monday, August 9, 2010

சிந்தனைக்கு


குறள் அமுதம்


தாளாற்றித் தந்த பொருள்எல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு.
-திருவள்ளுவர்
(ஒப்புரவு அறிதல் -212)
.

Sunday, August 8, 2010

சிந்தனைக்கு



கருவூலம்


தாளாளன் என்பான் கடன்படா வாழ்பவன்
வேளாளன் என்பான் விருந்திருக்க உண்ணாதான்
கோளாளன் என்பான் மறவாதான் இம்மூவர்
கேளாக வாழ்தல் இனிது.

-நல்லாதனார்
(திரிகடுகம்- 12)

.

Saturday, August 7, 2010

புதுக்கவிதை - 112


சுட்ட பழம்


ஏதோ ஒரு கோபத்தில்
'காய்' விட்ட குழந்தை
கள்ளமின்றிச் சிரிக்கிறது
மறு நிமிடமே.
பதிலுக்கு சிரிக்கும்
உள்ளத்தின் கள்ளத்தை
சுள்ளெனச் சுடுகிறது
மழலையின் 'பழம்'.

Friday, August 6, 2010

உருவக கவிதை - 56



கயிற்றரவு



நேரம் சோரம் போகாமலிருந்தால்
அரவும் கயிறாகும்;
இரவும் பகலாகும்.

நெஞ்சில் உரமிருந்தால்
பாம்பும் ஏணியாகும்;
பரமபதம் சித்திக்கும்.

பாற்கடல் கடைந்த மேருவின்
முதுகில் பாம்பின் சுவடுகள்.
விடமுண்டு மீண்டால்
ஈசனாகலாம்.

பாம்பின் விடம் பல்லில்.
மனிதனின் விடம் எதில்?

படையும் நடுங்குவது தெரியாமல்
உயிராசையுடன் விரையும்
அரவின் அரவம்
காதுள்ளவர்களுக்குக் கேட்பதில்லை.

வாலைப் பிடித்து சுழற்றி அடித்த
வீரத்தைப் பறை சாற்றுபவர் எவரும்
பாம்பின் பாவத்தைச் சொல்வதில்லை.

விடமில்லா மண்ணுளியை
ருசிப்பதில் தலையென்ன?
நடுக்கண்டம் என்ன?

பாம்பின் ஜீவன் எதில்?
மனிதனின் பயத்தில்.
எல்லாம் நேரம் தான்.

இரை விழுங்கிய மலைப்பாம்பு
நகராமல் நகர்கிறது.
யானையைப் பிணைக்கும்
வடக்கயிறாய்க் கிடக்கிறது.

இது பாம்பா, பழுதா?
கவிதையா, கழுதையா?
கயிற்றரவு பிடித்து
கரை சேர்ந்தால் தெரியும்.
..

Thursday, August 5, 2010

உருவக கவிதை - 55



நடுநிசி நாய்கள்



ஒன்றை ஒன்று மோப்பம் பிடித்தபடி,
ஒன்றை ஒன்று உறுமியபடி,
வாலைக் குழைத்தபடி,
அங்கும் இங்கும் அலைகின்றன தெருநாய்கள்.

இருபுறமும் வெறிக்கப் பார்த்தபடி
தலையைச் சொறிந்துகொண்டு நடக்கும்
பித்தனைக் கண்டு காதை விரைக்கும் நாய்களை
கல்லெடுத்து விரட்டுகிறாள்
இடுப்பில் கை வைத்தபடி நிற்கும் அரவாணி.

மிதிவண்டியை உந்திச் செல்லும்
கூர்க்காவின் தடிவீசலுக்கு
பயந்து பம்முகின்றன
சிரங்கு பீடித்த தெருநாய்கள்.

ஒதுக்குப்புறமாய் கோணி விரித்துப் படுத்திருக்கும்
பிச்சைக்காரியை நோட்டமிடும்
மர்ம ஆசாமியைக் கண்டு குரைக்கிறது
ஜோடி கிடைக்காத தெருநாய் ஒன்று.

சற்றுத் தள்ளி இருக்கும் கடைத் திண்ணையில்
சுருண்டு கிடக்கும் தொழுநோயாளியின்
இருமல் சத்தம் எங்கும் எதிரொலிக்கிறது;
அருகில் படுத்திருந்த தெருநாய்
விருட்டென எழுந்து வேறிடம் நகர்கிறது.

வானம் மப்பும் மந்தாரமுமாக இருக்கிறது.
தெரு விளக்குகள் மந்தமாக எரிகின்றன.
நகரமே தூங்குகிறது தெருநாய்களைத் தவிர.

போர்வை போர்த்தியது போல
இருளுடன் பின்னிப் பிணைந்திருக்கிறது
லேசான நடுநிசிப்பனி.

இரவு ரோந்தை சபித்தபடி
தெருமுனையில் நாற்காலியில் அமர்ந்து
பூனைத் தூக்கத்தில் இருக்கும் காவலரை
நெருங்கி முகர்ந்துவிட்டு நகர்கிறது
இன்னொரு தெருநாய்.

இரவுத் தொழிலாளிகளுக்காக
பீடியும் தேநீரும் கொண்டு செல்லும்
இருசக்கர வாகனத்தை சிறிது தூரம் விரட்டிவிட்டு
மூச்சிரைக்கத் திரும்புகின்றன தெருநாய்கள்.

திடீரென்று எங்கோ ஒரு நாய் குரைக்கிறது.
தொடர்கிறது இதர நாய்களின் குரைப்பு.
பத்து நிமிடத்திற்குப் பிறகு அமைதி.

விடியும்வரை தொடரும்
நாய்களின் ராஜாங்கத்தில்
நிம்மதியாகத் தூங்குகிறது நகரம்.

சாக்காட்டில் ஆழ்ந்துவிட்ட நகரின் உயிர்த்துடிப்பாக
முன்னங்கால்களை முன்னே பரப்பி
இருளைக் கிழித்தபடி ஊளையிடுகிறது,
கைவிடப்பட்ட ஜாதிநாய்.

வேசை வார்த்தைகளால் ஏசியபடி
கம்பெடுத்து துரத்துகிறான்
கோயில் வாசல் பிச்சைக்காரன்.
.

Wednesday, August 4, 2010

புதுக்கவிதை - 111



கிரிக்கெட் அகராதி - 7




கிரிக்கெட்:
சாகச விளையாட்டுக்களையும்
தடகளத்தையும் ஒழித்துக்கட்டிய-
மேன்மையான விளையாட்டு.
.

Tuesday, August 3, 2010

புதுக்கவிதை - 110



கிரிக்கெட் அகராதி - 6




கிரிக்கெட் 'கேட்ச்'
பறந்துவரும் பந்தை
குட்டிக்கரணம் அடித்துப் பிடித்து
கரவொலி வாங்குவது.

கிரிக்கெட் 'சீசன்'
பயிர் விளையாத கழனிகளில்
உள்ளூர் சிறுவர்கள், இளைஞர்கள்
உற்சாகமாய் விளையாடும் காலம்.
.

Monday, August 2, 2010

புதுக்கவிதை - 109



கிரிக்கெட் அகராதி - 5




கிரிக்கெட் 'பிட்ச்'
ஆடத் தெரியாதவர்கள்
கோணல் என்று சொல்வது;
களிமண்ணால் ஆனது.

கிரிக்கெட் 'பிக்சிங்'
ஆட்டத்தின் போக்கை
முன்கூட்டியே தீர்மானிப்பது;
களிமண்கள் அறியாதது.

கிரிக்கெட் 'விக்கெட்'
பந்து வீசுபவர் குறி பார்ப்பது;
மட்டையாளர் பாதுகாப்பது;
வெற்றி பெற்றவர் பிடுங்கிச் செல்வது.

.

Sunday, August 1, 2010

புதுக்கவிதை - 108



கிரிக்கெட் அகராதி - 4




கிரிக்கெட் அணி
இணைந்து ஆடுவதாக
தோற்றம் தருவது;
மேலாளர், மருத்துவர் கொண்டது.

கிரிக்கெட் தொடர்
ஒரு மாதத்துக்கேனும்
சோற்றுக் கவலை மறக்கவைப்பது;
ஆண்டுக்கு 12 முறை நடப்பது.

கிரிக்கெட் விளம்பரதாரர்
வாழவைப்பதாகக் கூறி
வாழ்வதில் வல்லவர்;
விதிகளை இயக்குபவர்.

கிரிக்கெட் 3-வது நடுவர்
தீர்மானிக்க முடியாத
சிக்கல்களை அவிழ்க்க
விஞ்ஞானம் அளித்த பரபரப்பு உத்தி.
.