கயிற்றரவுநேரம் சோரம் போகாமலிருந்தால்அரவும் கயிறாகும்;இரவும் பகலாகும்.நெஞ்சில் உரமிருந்தால் பாம்பும் ஏணியாகும்; பரமபதம் சித்திக்கும்.பாற்கடல் கடைந்த மேருவின்
முதுகில் பாம்பின் சுவடுகள்.
விடமுண்டு மீண்டால்
ஈசனாகலாம்.
பாம்பின் விடம் பல்லில்.
மனிதனின் விடம் எதில்?
படையும் நடுங்குவது தெரியாமல் உயிராசையுடன் விரையும் அரவின் அரவம் காதுள்ளவர்களுக்குக் கேட்பதில்லை.வாலைப் பிடித்து சுழற்றி அடித்த வீரத்தைப் பறை சாற்றுபவர் எவரும் பாம்பின் பாவத்தைச் சொல்வதில்லை.விடமில்லா மண்ணுளியை
ருசிப்பதில் தலையென்ன?
நடுக்கண்டம் என்ன?
பாம்பின் ஜீவன் எதில்?
மனிதனின் பயத்தில்.
எல்லாம் நேரம் தான்.
இரை விழுங்கிய மலைப்பாம்பு
நகராமல் நகர்கிறது.
யானையைப் பிணைக்கும்
வடக்கயிறாய்க் கிடக்கிறது.
இது பாம்பா, பழுதா?
கவிதையா, கழுதையா?
கயிற்றரவு பிடித்து
கரை சேர்ந்தால் தெரியும்.
..
No comments:
Post a Comment