Saturday, August 21, 2010

வசன கவிதை - 74




புத்தரின் புன்னகை


குயில்களின் இன்னிசை எங்கும் நிறைந்திருக்கிறது.
நறுமண மலர்களின் சுகந்தத்தை சுமந்தபடி
மெல்லிய தென்றல் எங்கும் தவழ்கிறது.
ஓங்கி உயர்ந்த அரசமர நிழலில்
மோன நிலையில் இருக்கிறார் புத்தர்.
மயில் ஆடிக்கொண்டிருக்கிறது;
அமைதி எங்கும் விரிந்திருக்கிறது.

ஊர்க்கோடியில் வீற்றிருக்கும்
காவியுடைத் துறவியைக் காண
கூட்டம் குழுமுகிறது; நோட்டமிடுகிறது.
வணங்கிய மக்களை வணங்கி,
அமுத மொழிகளைப் பகர்கிறார் புத்தர்:

ஆசையை விட்டொழியுங்கள்; அகிலத்தை ஆளுங்கள்.
தர்மம் செய்யுங்கள்; தர்மப் பாதையில் செல்லுங்கள்.
சங்கம் ஆகுங்கள்; சங்கமம் ஆக்குங்கள்.
புத்தன் ஆகுங்கள்; புது உலகைக் காணுங்கள்.

கூறிய புத்தனை பணிகிறது கூட்டம்.
மலர்களைத் தூவுகின்றனர் மக்கள்.
தூவிய மலர்களை திருப்பி வழங்கி
ஆசி அளிக்கும் புத்தனைக் கண்டு
ஒருவன் மனதில் குமுறும் கோபம்.

இத்தனை நாட்கள் கட்டிக் காத்த
ஆசைகள் பொய்யா? பூசைகள் பொய்யா?
சீறும் கோபம் சொல்லினில் தெறிக்க
நிந்தனை மொழிகளால் அர்ச்சனை செய்தான்.
கோபத்தாலே நரம்பு புடைக்க
கத்திய அவனை கருணை தவழ
புத்தர் பார்த்தார்; புன்னகை புரிந்தார்.

பலமணி நேரம் வசைமொழி கூறியும்
புன்னகை மாறா புத்தனைப் பார்த்து,
ஓய்ந்தான் எளியவன்; புத்தர் சிரித்தார்.
மெல்லிய குரலில் உறுதியாய் ஒலித்தார்:

பக்தர்கள் தூவிய நறுமண மலர் போலவே
உனது குறுமொழி மலர்களை
புன்னகையாலே திருப்பித் தந்தேன்;
ஆசை இல்லா உள்ளம் இருந்தால்
புகழால் போதையும், இகழால் வாதையும்
நிகழ்வது இல்லை; நித்திய உண்மை.

என்றார் புத்தர்.
எளியவன் உணர்ந்தான்.
கண்ணீர் வழிய
கரங்கள் குவித்தான்.

புத்தரின் புன்னகை எங்கும் பரவுகிறது.
உலகில் அமைதி தவழ்கிறது.
மாலைச் சூரியனின் பொற்கிரணங்கள் வருட
மான்கள் மருண்டோடுகின்றன.
உடன் புலிகள் விளையாடுகின்றன.

குயில்களின் இன்னிசை எங்கும் நிறைந்திருக்கிறது
நறுமண மலர்களின் சுகந்தத்தை சுமந்தபடி
மெல்லிய தென்றல் எங்கும் தவழ்கிறது.

.

No comments:

Post a Comment