Thursday, August 5, 2010

உருவக கவிதை - 55



நடுநிசி நாய்கள்



ஒன்றை ஒன்று மோப்பம் பிடித்தபடி,
ஒன்றை ஒன்று உறுமியபடி,
வாலைக் குழைத்தபடி,
அங்கும் இங்கும் அலைகின்றன தெருநாய்கள்.

இருபுறமும் வெறிக்கப் பார்த்தபடி
தலையைச் சொறிந்துகொண்டு நடக்கும்
பித்தனைக் கண்டு காதை விரைக்கும் நாய்களை
கல்லெடுத்து விரட்டுகிறாள்
இடுப்பில் கை வைத்தபடி நிற்கும் அரவாணி.

மிதிவண்டியை உந்திச் செல்லும்
கூர்க்காவின் தடிவீசலுக்கு
பயந்து பம்முகின்றன
சிரங்கு பீடித்த தெருநாய்கள்.

ஒதுக்குப்புறமாய் கோணி விரித்துப் படுத்திருக்கும்
பிச்சைக்காரியை நோட்டமிடும்
மர்ம ஆசாமியைக் கண்டு குரைக்கிறது
ஜோடி கிடைக்காத தெருநாய் ஒன்று.

சற்றுத் தள்ளி இருக்கும் கடைத் திண்ணையில்
சுருண்டு கிடக்கும் தொழுநோயாளியின்
இருமல் சத்தம் எங்கும் எதிரொலிக்கிறது;
அருகில் படுத்திருந்த தெருநாய்
விருட்டென எழுந்து வேறிடம் நகர்கிறது.

வானம் மப்பும் மந்தாரமுமாக இருக்கிறது.
தெரு விளக்குகள் மந்தமாக எரிகின்றன.
நகரமே தூங்குகிறது தெருநாய்களைத் தவிர.

போர்வை போர்த்தியது போல
இருளுடன் பின்னிப் பிணைந்திருக்கிறது
லேசான நடுநிசிப்பனி.

இரவு ரோந்தை சபித்தபடி
தெருமுனையில் நாற்காலியில் அமர்ந்து
பூனைத் தூக்கத்தில் இருக்கும் காவலரை
நெருங்கி முகர்ந்துவிட்டு நகர்கிறது
இன்னொரு தெருநாய்.

இரவுத் தொழிலாளிகளுக்காக
பீடியும் தேநீரும் கொண்டு செல்லும்
இருசக்கர வாகனத்தை சிறிது தூரம் விரட்டிவிட்டு
மூச்சிரைக்கத் திரும்புகின்றன தெருநாய்கள்.

திடீரென்று எங்கோ ஒரு நாய் குரைக்கிறது.
தொடர்கிறது இதர நாய்களின் குரைப்பு.
பத்து நிமிடத்திற்குப் பிறகு அமைதி.

விடியும்வரை தொடரும்
நாய்களின் ராஜாங்கத்தில்
நிம்மதியாகத் தூங்குகிறது நகரம்.

சாக்காட்டில் ஆழ்ந்துவிட்ட நகரின் உயிர்த்துடிப்பாக
முன்னங்கால்களை முன்னே பரப்பி
இருளைக் கிழித்தபடி ஊளையிடுகிறது,
கைவிடப்பட்ட ஜாதிநாய்.

வேசை வார்த்தைகளால் ஏசியபடி
கம்பெடுத்து துரத்துகிறான்
கோயில் வாசல் பிச்சைக்காரன்.
.

No comments:

Post a Comment