Showing posts with label நாய். Show all posts
Showing posts with label நாய். Show all posts

Monday, February 13, 2012

புதுக்கவிதை - 147






நாய்களும் 
நாய்கள் நிமித்தமும்....



காதலர் தினம் கொண்டாடுவதில்லை...

காதலியை மயக்கமாக்கி
சகாக்களுடன் நாசமாக்குவதில்லை...

அதையும் படம் பிடித்து
இணையத்தில்
காணொளி ஆக்குவதும் இல்லை...

நாய்கள்.
 
 
குறிப்பு: நாளை (பிப். 14) காதலர் தினம் என்கிறார்கள்....

Thursday, August 5, 2010

உருவக கவிதை - 55



நடுநிசி நாய்கள்



ஒன்றை ஒன்று மோப்பம் பிடித்தபடி,
ஒன்றை ஒன்று உறுமியபடி,
வாலைக் குழைத்தபடி,
அங்கும் இங்கும் அலைகின்றன தெருநாய்கள்.

இருபுறமும் வெறிக்கப் பார்த்தபடி
தலையைச் சொறிந்துகொண்டு நடக்கும்
பித்தனைக் கண்டு காதை விரைக்கும் நாய்களை
கல்லெடுத்து விரட்டுகிறாள்
இடுப்பில் கை வைத்தபடி நிற்கும் அரவாணி.

மிதிவண்டியை உந்திச் செல்லும்
கூர்க்காவின் தடிவீசலுக்கு
பயந்து பம்முகின்றன
சிரங்கு பீடித்த தெருநாய்கள்.

ஒதுக்குப்புறமாய் கோணி விரித்துப் படுத்திருக்கும்
பிச்சைக்காரியை நோட்டமிடும்
மர்ம ஆசாமியைக் கண்டு குரைக்கிறது
ஜோடி கிடைக்காத தெருநாய் ஒன்று.

சற்றுத் தள்ளி இருக்கும் கடைத் திண்ணையில்
சுருண்டு கிடக்கும் தொழுநோயாளியின்
இருமல் சத்தம் எங்கும் எதிரொலிக்கிறது;
அருகில் படுத்திருந்த தெருநாய்
விருட்டென எழுந்து வேறிடம் நகர்கிறது.

வானம் மப்பும் மந்தாரமுமாக இருக்கிறது.
தெரு விளக்குகள் மந்தமாக எரிகின்றன.
நகரமே தூங்குகிறது தெருநாய்களைத் தவிர.

போர்வை போர்த்தியது போல
இருளுடன் பின்னிப் பிணைந்திருக்கிறது
லேசான நடுநிசிப்பனி.

இரவு ரோந்தை சபித்தபடி
தெருமுனையில் நாற்காலியில் அமர்ந்து
பூனைத் தூக்கத்தில் இருக்கும் காவலரை
நெருங்கி முகர்ந்துவிட்டு நகர்கிறது
இன்னொரு தெருநாய்.

இரவுத் தொழிலாளிகளுக்காக
பீடியும் தேநீரும் கொண்டு செல்லும்
இருசக்கர வாகனத்தை சிறிது தூரம் விரட்டிவிட்டு
மூச்சிரைக்கத் திரும்புகின்றன தெருநாய்கள்.

திடீரென்று எங்கோ ஒரு நாய் குரைக்கிறது.
தொடர்கிறது இதர நாய்களின் குரைப்பு.
பத்து நிமிடத்திற்குப் பிறகு அமைதி.

விடியும்வரை தொடரும்
நாய்களின் ராஜாங்கத்தில்
நிம்மதியாகத் தூங்குகிறது நகரம்.

சாக்காட்டில் ஆழ்ந்துவிட்ட நகரின் உயிர்த்துடிப்பாக
முன்னங்கால்களை முன்னே பரப்பி
இருளைக் கிழித்தபடி ஊளையிடுகிறது,
கைவிடப்பட்ட ஜாதிநாய்.

வேசை வார்த்தைகளால் ஏசியபடி
கம்பெடுத்து துரத்துகிறான்
கோயில் வாசல் பிச்சைக்காரன்.
.

Thursday, April 15, 2010

உருவக கவிதை- 41


விபத்து


சாலையில்
சிதறிக் கிடக்கும்
தெருநாயைப்
பார்த்தபடி
கடக்கிறது
சொறிநாய்.
.

Thursday, March 25, 2010

மரபுக் கவிதை - 87


நாய்

நன்றிக்குச் சான்றாக ஞாலத்தில் வாழுகிறாய்
என்றிக்கும் அதிர்ந்திடவே ஏற்பாகக் குரைத்திடுவாய்
என்றைக்கும் வீட்டுக்குக் காப்பாக இருந்திடுவாய்
தன்னுயிரும் ஈந்திட்டு உடைமைகளைக் காத்திடுவாய்
நன்றிக்கு நாயகனாய், ஞாலத்தின் காவலனாய்
என்றைக்கும் வாழ்ந்திடுக - என்னன்பு நாய் நீயே.

.

Friday, February 12, 2010

புதுக்கவிதை - 75


ஐந்தறிவு

எனக்கும்
அண்டை வீட்டுக்காரருக்கும்
சண்டை.
அவர் வீட்டு நாய்
என் வீட்டு வாசலிலேயே
காவல் இருக்கிறது.
.

Sunday, January 31, 2010

புதுக்கவிதை - 68


அகாரணம்

எங்கள் வீட்டு நாய்
பால்காரர் வந்தால்
குரைக்கிறது
தபால்காரர் வந்தால்
குரைக்கிறது.
சமயத்தில்
நான் வந்தாலும் கூட.
இரவில் மட்டும் அது
தூங்கிப் போய்விடுகிறது.

நன்றி: விஜயபாரதம் (21.05.1999)
.

Thursday, January 28, 2010

புதுக்கவிதை - 66


கறை


அன்புடன் தொற்றிய நாய் மீது
வள்ளென விழுந்தேன்.
சட்டையில் மட்டுமா கறை?


நன்றி: விஜயபாரதம் (13.11.1998)


.

Monday, January 25, 2010

உருவக கவிதை - 26



எல்லை

எல்லை முடிந்ததும்
திரும்பிவிட்டது
'வள்வள்' என்று
குரைத்த
எங்கள் நாய்.
.