பின்தொடர்பவர்கள்

Wednesday, June 30, 2010

உருவக கவிதை - 50பகுத்தறிவற்ற மரங்கள்உடனே வெட்டச் சொன்ன
அண்டை வீட்டுக் காரனுக்கே
தினமும் தேங்காய் தருகிறது
என் வீட்டு தென்னை மரம்.

முதல் கனிகளை
அணிலுக்கே தருகிறது
தினசரி நீர் பாய்ச்சி
நான் வளர்த்த கொய்யா மரம்.

மதிலில் விரிசலிட்டு
வீட்டிலும் வேரோடுகிறது
வாசல் முன் நிழலுக்காக
நட்டுவைத்த வேப்ப மரம்.


எல்லாவற்றையும் வெட்டிவிட்டு
வளர்க்க வேண்டும்
தொட்டியில் வளரும்
குட்டை மரம்.
.

Tuesday, June 29, 2010

உருவக கவிதை - 49தூங்குமூஞ்சி நகரம்


இரவானால் கூம்பும்
தூங்குமூஞ்சி மரங்கள்
சாலையின் இருபுறமும்.

இரவெல்லாம் கண்விழித்து
பகலில் கண்ணயரும்
எவருக்கும் தெரியாது
தூங்குமூஞ்சி மரங்களின்
துடிப்பான இயக்கம்.

பகலில் கிளை ஆட்டி
குதூகலிக்கும் மரமா
இரவில் தூங்குகிறது?

எப்போதும் மயக்க நிலையில்
இயங்கும் மனிதருக்கு
தெரிவதில்லை
தூங்குமூஞ்சி மரங்களின்
கனவற்ற உலகம்.
.

Monday, June 28, 2010

உருவக கவிதை - 48திரும்பும் சரித்திரம்...


ஓராண்டுக்கு முன்...
திருவிழா முடிந்த நகரம் போல
காட்சி அளிக்கிறது
போரில் வீழ்ந்த கிளிநொச்சி.
எங்கும் பரந்து கிடக்கின்றன
சிதிலமான பொருட்கள்,
உடைந்த, உருக்குலைந்த
தளவாடங்கள்.

ஓராண்டுக்குப் பின்...
போரில் வீழ்ந்த முல்லைத்தீவு போல
காட்சி அளிக்கிறது
செம்மொழி மாநாட்டுத் திடல்.
எங்கும் பரந்து கிடக்கின்றன
மக்கள் உபயோகித்து வீசிய
கழிவுப் பொருட்கள்,
பாலித்தீன் பைகள், காகிதங்கள்,
அறுந்த செருப்புக்கள்...

.

Sunday, June 27, 2010

ஏதேதோ எண்ணங்கள்


செம்மொழி மாநாட்டு ரசிகர்கள் பார்வைக்கு...

உலகம் தழுவிய தமிழ்ப் பார்வை
-வ.மு.முரளி.

உலகு தழுவிய பார்வை என்பது தமிழ் மொழிக்குப் புதியதன்று. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்று (புறநானூறு -192) ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னமே சங்கப் புலவர் கணியன் பூங்குன்றனார் பிரகடனம் செய்திருக்கிறார்.

'வட வேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறும் நல்லுலகத்தில்' (தொல்காப்பியம் - சிறப்புப் பாயிரம்) வாழ்ந்தாலும் ஆழிசூழ் உலகம் குறித்த பரந்த பார்வை தமிழர்களிடம் இருந்துள்ளது.

இலக்கியம் என்பது மனிதனை மேம்படுத்தவே; அந்த மக்களை 'உலகம்' என்ற ஆகுபெயரில் அழைப்பதும் தமிழ் இலக்கியங்களின் சிறப்பு. அதிலும் தமிழின் முதன்மையான இலக்கியங்கள் பலவும் 'உலகம்' என்ற சொல்லிலோ அதற்கு இணையான பிற சொற்களிலோ துவங்குவது, வியப்பும் மகிழ்ச்சியும் அளிப்பதாகும்.

தமிழின் இலக்கணத்தைச் செம்மைப்படுத்திய பவணந்தி முனிவரும்,
'மலர்தலை உலகின் மல்குஇருள் அகல
இலகு ஒளி பரப்பி யாவையும் விளக்கும்...'
-என்றே நன்னூலைத் துவங்குகிறார் (சிறப்புப் பாயிரம்).

பத்துப்பாட்டில் உலகம்:

சங்க இலக்கியக் கருவூலத்தில் முதல் நூலான திருமுருகாற்றுப்படையை,
'உலகம் உவப்ப வலன் ஏற்பு திரிதரு
பலர்புகழ் ஞாயிறு கடல் கண்டாங்கு...'
-என்றுதான் நக்கீரர் துவங்குகிறார்.

தனது இன்னொரு பத்துப்பாட்டு நூலான நெடுநல்வாடையிலும்,
'வையகம் பனிப்ப, வலனேர்பு வளைகிப்
பொய்யா வானம் புதுப்பெண் பொழிந்தென...'
-என்றே நக்கீரர் துவங்குகிறார்.

மற்றொரு பத்துப்பாட்டு நூலான மதுரைக்காஞ்சியை,
'ஓங்கு திரை பரயின்
ஒளி முந்நீர் வரம்பாகத்
தேன் தூங்கும் உயர் சிமைய
மலை நாறிய வியன் ஞாலத்து...'
-என்று துவங்குகிறார் மாங்குடி மருதனார்.

தொகை நூல்களுள் ஒன்றான கடவுள் வாழ்த்தை அடுத்த பாடல், உலகின் ஐம்பூதங்களை வியந்து பாடுகிறது.
'மண் திணிந்த நிலனும்
நிலம் ஏந்திய விசும்பும்
விசும்பு தைவரு வளியும்
வளித் தலைஇய தீயும்
தீ முரணிய நீரும், என்றாங்கு...'
-என்று முரஞ்சியூர் முடிநாகனார் (புறம்- 2 ) பாடிச் செல்கிறார்.

சங்க இலக்கியப் பாக்கள் பலவற்றின் உள்ளடக்கத்தில் உலகம் குறித்து வரினும், இலக்கியத்தின் துவக்கத்திலேயே 'உலகம்' இடம் பெறுபவை மட்டுமே சிறப்புக் கருதி இங்கு குறிப்பிடப்பட்டன.

காப்பியங்களில் ஞாலம்:

ஐம்பெரும் காப்பியங்களும் உலகின் முதன்மையை உணர்த்தியுள்ளன. முதன்மைக் காப்பியமான இளங்கோ அடிகளின் சிலப்பதிகாரம், உலகை வாழ வைக்கும் ஞாயிற்றைப் போற்றி, அடுத்ததாக திங்களையும் மாமழையையும் போற்றித் துவங்குகிறது.

உலகின் பசிப்பிணி அறுப்பதே தலையாய அறம் என்கிறது, பௌத்தக் காப்பியமான மணிமேகலை.

திருத்தக்கத் தேவரின் சீவக சிந்தாமணி, 'மூவர் முதலா உலகம் ஒரு மூன்றும் ஏத்த...' என்றே துவங்குகிறது.

முழுமையாகக் கிடைத்திராத வளையாபதியும்,
'உலகம் மூன்றும் ஒருங்குடன் ஏத்துமான்
திலகம் ஆய திறல் அறிவின் அடி...'
-என்று வணங்கித் துவங்குகிறது.

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் முதன்மையானதும், உலகப் பொதுமறை என்று போற்றப்படுவதுமான திருக்குறளில் 70 -க்கு மேற்பட்ட குறட்பாக்கள் உலகம் குறித்த கண்ணோட்டத்துடன் இலங்குகின்றன.
ஆதிபகவன் முதற்றே உலகு' என்ற தலைமைக் குறளே (குறள் - 1 :1 ) திருக்குறளின் அடிநாதமாக விளங்குகிறது.

பக்திக்காலக் காப்பியமான கம்பரின் ராமாயணம், 'உலகம் யாவையும் தாமுளவாக்கலும்' என்றே (பால காண்டம் -1) துவங்குகிறது. ஆழிசூழ் உலகம், மானுடம் வென்றதம்மா - போன்ற சொற்றொடர்கள் வாயிலாக உலகம் குறித்த கம்பரின் கனிந்த பார்வையை உணர முடிகிறது.

சைவக் காப்பியமான, தொண்டர்தம் பெருமை கூறும் பெரிய புராணம், 'உலகெலாம் உணர்ந்து ஓதற்கரியவன்' என்று துவங்குகிறது. இந்த முதலடியை சேக்கிழாருக்கு ஈசனே அசரீரியாய் எடுத்துக் கொடுத்ததாக நம்பிக்கை. இக்காப்பியம், 'உலகெலாம்' என்றே நிறைவடைகிறது.

வாழ்க வையகம்:

'யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' (திருமூலரின் திருமந்திரம்-147) என்று வாழ்ந்த சித்தர்களின் பூமி தமிழகம். உலகம் குறித்த அவர்களது பார்வை விசாலமானது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னமே, 'ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்' என்று அறைகூவியவர் திருமூலர்.

சைவத் தத்துவ விளக்கமான சிவஞானபோதம் நூலினை,
'மலர்தலை உலகின் மாயிருள் துமியப்
பலர்புகழ் ஞாயிறு பகரின் அல்லதை...'
-என்று மெய்க்கண்டார் துவங்குகிறார்.

இவ்வாறாக, வாழையடி வாழையென, தமிழ்ச் சான்றோர் பெருமக்கள் 'உலகம்' என்ற சொல்லையே முதன்மைப்படுத்தி, இலக்கியங்கள் உருவாக்கியது கண்டு உவகை மிகுகிறது.

இதன் தொடர்ச்சியாகவே, சென்ற நூற்றாண்டில் நாடகக் காப்பியம் படைத்த பேராசிரியர் சுந்தரம் பிள்ளையும், 'நீராரும் கடலுடுத்த நிலமடந்தை' என்று மனோன்மணீயம் நூலினைத் துவங்குகிறார்.

இந்த சிந்தனைப் பெருக்கால் தான், 'வல்லமை தாராயோ, இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே' என்று மகாகவி பாரதியால் வேண்ட முடிந்தது; 'புதியதோர் உலகம் செய்வோம், கேட்ட போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்' என்று பாரதிதாசனால் பாட முடிந்தது .

இத்தகைய மிக உயர்ந்த உலகு தழுவிய பார்வையுடன் இலக்கியங்கள் தழைத்தெழுந்த மண் தமிழகம்.

'எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே
அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே'
-என்று வாழ்ந்த தாயுமானவர் போன்ற மாமேதைகளின் அடியொற்றி, தமிழ் இலக்கியங்களின் உலகப் பார்வையை நம்முள் விரித்து, நாமும் தமிழ் வளர்ப்போம்.
.
நன்றி:
தினமணி (27 .06 .2010௦) பொங்கும் தமிழோசை இணைப்பிதழ் - கோவை.
.
குறிப்பு: தலைக்கு மேல் குண்டுகள் பறந்து கொண்டிருந்த நிலையிலும், உலகம் தம்மைக் கைவிட்டுவிடாது, யாரேனும் தம்மைக் காப்பாற்றுவார்கள் என்ற அற்ப ஆசையுடன் மண்ணில் புதைந்த லட்சக் கணக்கான ஈழ சகோதரர்களுக்கு இக்கட்டுரை அர்ப்பணம்.
.

Saturday, June 26, 2010

சிந்தனைக்குசெம்மொழிப் பேராளர்கள் நினைவுக்கு...

தமிழ்த்தாய் வாழ்த்துநீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ்பரத கண்டமிதில்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ் மணக்க இருந்தபெருந் தமிழணங்கே!பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்
எல்லையறு பரம்பொருள் முன் இருந்தபடி இருப்பதுபோல்
கன்னடமும் களிதெலுங்கும் கவின்மலையா ளமுந்துளுவும்
உன்னுதரத் துதித்தெழுந்தே ஒன்றுபல ஆயிடுனும்
ஆரியம்போல் உலகவழக் கழிந்தொழிந்து சிதையாஉன்
சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே!


-மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை.

குறிப்பு: இதுவே நாம் பாடும் தமிழ்த்தாய் வாழ்த்தின் முழு வடிவம்.
.

Friday, June 25, 2010

உருவக கவிதை - 47காற்றுக்குமிழிகள்
முன்னொரு காலத்தில்
கிரேக்க வீரன் அலெக்சாண்டர்.
இடைக்காலத்தில்
சீன செங்கிஸ்கான்.
18-ம் நூற்றாண்டில்
நெப்போலியன் போனபோர்டே
70 ஆண்டுகளுக்கு முன்
ஹிட்லர், லெனின், மாவோ, ஸ்டாலின்,...

வெற்றியில் திளைத்த நேரத்தில்
உலகத் தலைவர்களாக
முடிசூடியவர்களின் பட்டியல் இன்னும் நீளம்.

காற்றுக்குமிழிகளின் வனப்பில்
உலகம் சில நேரம் அதிசயித்தது.
குறுகிய காலத்தில் எவரையும்
புதைத்து எக்காளமிடுவது வரலாறு.
காற்றுக்குமிழிகளின் வாழ்நாள்
சாற்றுவதும் அரிதோ?


ஓராண்டுக்கு முன்பு
கொல்லப்பட்ட தம்பியை மறக்க
செம்மொழியில் திளைக்கும்
செஞ்சோற்று உதியலாத நெடுஞ்செழிய
விசயாலாய, மகேந்திர வர்ம, சேரமான்
அண்ணனுக்கு வந்தனம்!


உலகத் தமிழ்த் தலைவரென்ற
பத்திரங்கள் பத்திரம்!.
.

Thursday, June 24, 2010

மரபுக் கவிதை - 99
செம்மொழியின் காதலன்கண்ணனின் தாசனாய்ப் பெயர் புனைந்து
கடவுளின் தத்துவம் விளங்க வைத்து,


கன்னலின் சாறெனக் கவி புனைந்து
காவிய கண்ணியம் உணரச் செய்து,


திண்ணிய நூல்களை எழுதிவைத்து
திகைப்புறு தன்கதை நிலைகள் சொல்லி,


மண்டிய அரசியல் சேற்றினிலே
மலர்ந்திடு பங்கய மணம் பரப்பி,


தன்னது வாழ்வினைச் சுட்டிக்காட்டி
தவறான துணிச்சலை மறுக்கவைத்து,


தென்றலின் தேரென பவனி வந்து
தெவிட்டாத நற்றமிழ்க் கவிதை பெய்து,


மின்னலின் வேகமாய்ப் பிறந்திறந்து
மிளிர்ந்திடு ரத்தின ஒளி விரிந்து,


சென்றவர் புகழினை நினைந்து காண
செழிப்புறு பற்பல நூல் பிறக்கும்.குறிப்பு: இன்று கவியரசர் கண்ணதாசனின் 83-வது பிறந்த நாள்.


.

Wednesday, June 23, 2010

சிந்தனைக்கு


செம்மொழி மாநாட்டுக்கு வாழ்த்து

தமிழ்மொழி வாழ்த்து


தான தனத்தன தான தனத்தன
தான தந்தான

வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி
வாழிய வாழியவே!

வான மளந்த தனைத்து மளந்திடு
வண்மொழி வாழியவே!

ஏழ்கடல் வைப்பினுந் தன்மணம் வீசி
யிசைகொண்டு வாழியவே!

எங்கள் தமிழ்மொழி எங்கள் தமிழ்மொழி
என்றென்றும் வாழியவே!

சூழ்கடல் நீங்கத் தமிழ்மொழி யோங்கத்
துலங்குக வையகமே!

தொல்லை வினைதரு தொல்லை யகன்று
சுடர்க தமிழ்நாடே!

வாழ்க தமிழ்மொழி வாழ்க தமிழ்மொழி
வாழ்க தமிழ்மொழியே!

வானம் அறிந்த தனைத்தும் அறிந்து
வளர்மொழி வாழியவே!
-மகாகவி பாரதி

குறிப்பு: உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு அரசியல் நோக்கத்துடன் நடத்தப்படுவது என்றாலும், தாய்மொழியாம் தமிழுக்காக நடத்தப்படும் விழா என்பதால், மகாகவி பாரதியின் அர்த்தமுள்ள வாழ்த்து இங்கு இடம் பெறுகிறது. செம்மொழி மாநாட்டை வாழத்துவதற்கு அவரை விட யாருக்கு தகுதி உள்ளது?
.

வசன கவிதை - 70


செம்மொழி மாநாட்டை நோக்கி...23

செம்மாந்த கூட்டம்


சிங்கம் போல கிளம்பியது காண்
செந்தமிழ் இளைஞர் கூட்டம்-
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நோக்கி..
வழியில் பற்பல
அரசு மதுக்கடைகளைக் கடந்து.

செம்மொழி நம்பிக்கை

உலகத் தமிழ்ச் செம்மொழி
மாநாட்டுக்கு
இதுவரை செலவு
அரசு கணக்கில் ரூ. 400கோடி.
அத்தனையும் ஒரு வாரத்தில்
கிடைத்துவிடும்
அரசு மதுக்கடைகளில்.

செவ்வியல் ஏற்பாடு

உலகம் முழுவதிலும் இருந்து
வந்து குவிந்த விருந்தினர்களை
உபசரிக்க முன்னேற்பாடு-
அரசு மதுக்கடைகளில்
சரக்கு குவிப்பு.

செம்முழக்கம்

செம்மொழி செம்மொழி
செம்மொழியே!
எங்கள் தீராத் தமிழ்த் தாகம் தீர்த்த
செம்மொழி வாழியவே!
.

Tuesday, June 22, 2010

ஏதேதோ எண்ணங்கள்


செம்மொழி மாநாட்டை நோக்கி...22

செம்மொழியான தமிழ் மொழியே!


அன்பு நண்பர்களே!
வணக்கம்
நாளை கோவையில் கோலாகலமாகத் துவங்குகிறது 'உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு'
கடந்த 21 நாட்களாக செம்மொழி மாநாடு தொடர்பான கவிதை, கட்டுரைகளை எனது வலைப்பூவில் எழுதி வந்தேன். செம்மொழி மாநாடு குறித்த அரசியல் பார்வையுடன் அவை எழுதப்பட்டன. இன்று, தமிழ் குறித்தும், ஈழம் குறித்தும் ஏற்கனவே இதே வலைப்பூவில் வெளியான கவிதைகளை நினைவு கூர்கிறேன்.
கீழுள்ள இணைப்புகளில் சொடுக்கி, முந்தைய கவிதைகளை நீங்கள் காணலாம்.
நன்றி.
1: சபதம்
2: அருந்தமிழ் வாழி!
3: சூரியப் பரம்பரை
4: தீர்வுகளில் திளையுங்கள்!
5: பரிதாபிகளே, மன்னியுங்கள்!

.

Monday, June 21, 2010

உருவக கவிதை - 46


செம்மொழி மாநாட்டை நோக்கி...21

நல்ல முகூர்த்தம்


நிகழும் ஆனி மாதம்
ஒன்பதாம் நாள்,
புதன் கிழமை,
வளர்பிறை துவாதசி திதியும்
விசாக நட்சத்திரமும்
சித்த யோகமும்
கூடிய சுப தினத்தில்,
ராகு காலம், எம கண்டம் அல்லாத
சர்வ மங்கள முகூர்த்தமான
காலை 10.30 மணியளவில்,
அதாவது 2010 ஜூன் 23-இல்,
கோவையில் துவங்குகிறது
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு!
வாழிய செம்மொழி!
வாழிய தமிழ் மொழி!
வாழிய பகுத்தறிவே!!
.

Sunday, June 20, 2010

ஏதேதோ எண்ணங்கள்

செம்மொழி மாநாட்டை நோக்கி...20

கண்கட்டு வித்தை


செம்மொழி மாநாடு அறிவிக்கப்பட்டதே - அரசியல் நோக்கம் கொண்டது தான். என்றாலும், இதனால் கோவை நகருக்கு ஏதேனும் ஆதாயம் விளையும் என்று எதிர்பார்ப்பதில் தவறில்லையே! ஆயினும் - பஞ்சாங்க முறைப்படி சொன்னால் - ஆதாயத்தை விட விரயமே அதிகம் என்று தான் இதைச் சொல்ல வேண்டும்.


முகப்பு மாற்றங்கள்:
செம்மொழி மாநாட்டை முன்னிட்டு கோவை ரயில் நிலையத்தின் முகப்பு மாற்றப்பட்டுள்ளது; மகிழ்ச்சி. விமான நிலைய முகப்பும் பொலிவூட்டப்பட்டுள்ளது; மிக்க மகிழ்ச்சி. அதே சமயம் உக்கடம், சிங்காநல்லூர், காந்திபுரம் பகுதிகளிலுள்ள பேருந்து நிலையங்கள் முன்பு போலவே தொடர்கின்றன. குறிப்பாக கோவை மத்திய பேருந்து நிலையத்தில் பிளாட்பாரங்கள் கூட - இடிந்து கிடக்கின்றன - சரி செய்யப்படவில்லை. காந்திபுரம் நகரப் பேருந்து நிலையம் விரிவு படுத்தப்படும் என்ற அறிவிப்பு காற்றோடு போய்விட்டது.
இதைப் பற்றியெல்லாம் எந்த பத்திரிகையாளரும் கேள்வி கேட்பதில்லை. தினசரி செம்மொழி மாநாட்டை ஒட்டி நடக்கும் வளர்ச்சிப்பணிகளை பட்டியலிடவே பத்திரிகைகளுக்கு நேரம் போதவில்லை. இதையெல்லாம் பார்க்க யாருக்கு நேரம்?
கோவை- மேட்டுப்பாளையம் ரோட்டில் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையம் செம்மொழி மாநாட்டை முன்னிட்டு கட்டப்பட்டதாக கதைக்கிறார்கள். உண்மையில், அத்திட்டம் துவங்கி பல மாதங்கள் கடந்த பின்னர் தான் செம்மொழி மாநாடு அறிவிக்கப்பட்டது. நல்ல வேளையாக ஒண்டிப்புதூர் மேம்பாலம் முன்னரே திறக்கப்பட்டுவிட்டது. இல்லாவிட்டால், ஆறு வருடம் கட்டிய அதையும் செம்மொழி மாநாட்டுப் பட்டியலில் சேர்த்திருப்பார்கள்.
ஹோப் காலேஜ் பாலம் மூன்று ஆண்டுகளாகக் கட்டப்பட்டு வருகிறது. பாலத்தின் ஒரு (வலது) புறம் ஏற்கனவே திறக்கப்பட்டுவிட்டது. மறுபுறம் தற்போது பணி முடியும் தறுவாயில் உள்ளது. இதையும் செம்மொழி மாநாட்டுப் பட்டியலில் சேர்த்து செய்தி வாசிக்கிறார்கள்!
நெடுஞ்சாலையில் ஏற்கனவே இருந்த விளக்குத் தூண்களை அகற்றிவிட்டு புதிய தூண்கள் நடப்பட்டுள்ளன. இப்பணியும் கூட பல இடங்களில் இதுவரை முடியவில்லை. இன்றைய நிலவரப்படி, திருச்சி சாலையில், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர் பகுதிகளில் இன்னும் விளக்குத் தூண்கள் பொருத்தப்படவில்லை. அப்பகுதி இருண்டு கிடக்கிறது. அகற்றப்பட்ட விளக்குத் தூண்களின் கதியும் தெரியவில்லை.
செம்மொழி மாநாடு நடக்கும் கொடிசியா அரங்கம் உள்ள பகுதியிலிருந்து அவிநாசி ரோடு பளபளப்பாகி உள்ளது. அது மட்டும் தான் பாராட்டும் வகையில் உள்ளது.


அவசரக் கோலம்:
மின்கம்பிகள் அனைத்தும் புதைவடமாக புதைக்கப்பட்டது பாராட்டுக்குரியது. ஆனால், கடைசி ஒரு மாதத்தில் அவசர அவசரமாக செய்யப்பட்ட மின்கம்பி மாற்றப் பணி, பல இடங்களில் கம்பியைக் காட்டி இளிக்கிறது. மிகவும் அபாயமான மின்கம்பிகளை மண்ணுக்குள் புதைத்துக் கொண்டு செல்வதில் அலட்சியம் காட்டப்பட்டிருப்பது தெரிகிறது. பின்னாளில் ஏதும் ஆபத்து நிகழ்ந்தால், அதற்கு யார் பொறுப்பேற்பது?
பல இடங்களில் தார் ரோடுகளும் கூட அவசர கதியில் விரிவாக்கம் செய்யப்பட்டதைக் காண முடிந்தது. தார் ரோடு போடும் இடத்தை தோண்டி, செம்மண்ணால் கெட்டிப்படுத்தி அதன் மீது தார் ரோடு போடுவது தான் இதுவரை வழக்கம். சமீப காலமாக, சிமென்ட் கலவையால் கெட்டிப்படுத்தி அதன் மீது தார் ரோடு போடுகிறார்கள். அப்போது தான் மழைக்காலத்திலும் தார் ரோடு தாங்கும். ஆனால், பல இடங்களில், வெறும் மண் பரப்பின் மீதே தார் ஊற்றி அதன் மீது ரோடு அமைக்கப் பட்டுள்ளது. இப்பணியை கண்காணிக்க வேண்டிய அதிகாரிகளும், வேலை முடிந்தால் போதும் என்று காணாமல் இருக்கிறார்கள். இதன் விளைவை, பலமான மழை பெய்யும்போது தான் உணர முடியும்.


மறக்கப்பட்ட சின்னங்கள்
கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை துவங்கி நூறாண்டு கடந்து ஓராண்டு ஆகிவிட்டது. மிக நெரிசலான இடத்தில், சுகாதாரக் குறைபாடுகளுடன் இயங்கும் இம்மருத்துவமனை தரம் உயர்த்தப்படும்; அல்லது விசாலமான இடத்துக்கு இடம் மாற்றப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. செம்மொழி மாநாடு அறிவிக்கப்பட்ட போதே இதுகுறித்து அரசின் கவனத்துக்கு கொண்டுசெல்லப்பட்டது. ஆனால், வெளிப்புற அலங்காரங்களில் மூழ்கியிருந்த அரசு இதைக் கண்டுகொள்ளவில்லை. கடைசி நேரத்தில், அரசு மருத்துவமனை மேம்பாட்டுக்கு ரூ.50 கோடியை ஒதுக்கீடு செய்வதாக முதல்வர் கருணாநிதி அறிவித்திருக்கிறார்.
இது தான் கலைஞரின் சாமர்த்தியம். மாநாட்டு முழக்கங்களில் இனி, 'அரசு மருத்துவமனைக்கு நிதி ஒதுக்கிய நிதியே வாழி' என்ற பாடல் ஒலிக்கலாம். செம்மொழிப் பூங்கா கதை தான்.
கோவையின் முக்கிய சுற்றுலாத்தலங்கள் எதுவும் செம்மொழி மாநாட்டுக்காக மேம்படுத்தப்படவில்லை. பேரூர் பட்டீஸ்வரர் கோயில், அவிநாசி லிங்கேஸ்வரர் கோயில், திருமுருகன்பூண்டி முருகநாதர் கோயில் ஆகியவை தமிழுக்கு இறையம்சம் சேர்த்த திருத்தலங்கள். கோவை வரும் வெளிமாவட்ட மக்கள் கண்டிப்பாக செல்லும் இடங்கள் இவை. முதல்வருக்கு பிடிக்காவிட்டாலும் செம்மொழி மாநாட்டுக்கு வருபவர்கள் செல்லும் இடங்களை அவரால் தீர்மானிக்க இயலாது. தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்காக வரலாற்றுச் சின்னங்களை மூடி மறைக்க முடியாது. ஆனால், இக் கோயில்களில் எந்த மேம்பாட்டுப் பணியும் - மாநாட்டை முன்னிட்டு- செய்யப்படவில்லை.கலைக் கூத்து:
செய்ய வேண்டிய பணிகளை விட்டுவிட்டு, கவர்ச்சிகரமான நிகழ்வுகளில் தான் தமிழக அரசு கவனம் செலுத்துகிறது. இதற்கு, 'பிறப்பொக்கும்' தோழமை ஓட்டம் என்ற பெயரில் மாவட்டம் தோறும் நடத்தப்படும் மாரத்தான் போட்டிகளே உதாரணம். தமிழ் மையம் (அருள்தந்தை ஜெகத் கஸ்பார் நடத்தும் அமைப்பு) நடத்துவதாக அறிவிக்கப்படும் இந்த மாரத்தான் ஓட்டங்கள் பெரும்பாலும் மாவட்ட ஆட்சியர் உத்தரவால் தான் நடத்தப்படுகின்றன. இதில் அர்த்தமின்றி ஓடுகிறார்கள் ஆயிரக் கணக்கான மாணவ மாணவிகள். இதனால் செம்மொழி எப்படி சிறப்படையும் என்பது தெரியவில்லை. ஆங்கிலவழிக் கல்வி பயிலும் மாணவர்களை தமிழுக்காக ஓடச் செய்தது தான் ஒரே பெருமை. அடுத்ததாக, செம்மொழிச் சுடர் ஏந்தி ஓடி வருகிறார்கள். இதுவும் கவர்ச்சிக்கு உதவும்; மொழிக்கு உதவுமா?
இப்போது மூன்று நாள் செம்மொழி கலைவிழா துவங்கி இருக்கிறது. சங்கமம் மூலமாக ஏற்கனவே தொடர்பில் உள்ள கலைஞர்களுக்கு இது நல்ல வாய்ப்பு. இது கனிமொழியின் உபாயம் என்பதால் உபயங்கள் அதிகமாகவே கிடைக்கின்றன. நாட்டுப்புறக் கலைகள் வாழும் என்பதால் இதை வரவேற்கலாம். தமிழில் பள்ளிக் கல்வியை பயிலுமாறு மக்களைத் தூண்ட முடியுமானால் இதற்கு முழுமையான வெற்றி கிட்டும்.


-இவ்வாறாக, கவர்ச்சிகரமான நிகழ்ச்சிகளுடன், ஆடம்பரமான அலங்காரங்களுடன் துவங்க உள்ளது, உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு. மாநாட்டு அரங்கின் முகப்பில் அமைக்கப்பட்டுள்ளது தோரண வாயில்.
ஒரு லட்சம் சவுக்குப் பூட்டுகள் கொண்டு, 300 தொழிலாளர்கள் மூன்று மாதம் உழைத்து அமைத்த பிரமாண்டமான பனையோலை நுழைவாயிலை அண்ணாந்து பார்த்தபடி வியக்கிறார்கள் கோவை மக்கள். அரசியல்வாதிகள் வேண்டுவது இது தானே?
வெறும் ஐந்து நாள் மாநாட்டுக்கு பல கோடி செலவில் தோரணவாயில் எதற்கு என்று கேள்வி கேட்கும் விழிப்புணர்வு இல்லாத மக்களுக்கு இத்தகைய கண்கட்டு வித்தைகள் தானே பரிசாகக் கிடைக்கும்?
.

Saturday, June 19, 2010

ஏதேதோ எண்ணங்கள்


செம்மொழி மாநாட்டை நோக்கி...19

கண்துடைப்பு நாடகங்கள்


செம்மொழி மாநாடு கோவையில் நடப்பதாக அறிவிக்கப்பட்டு கிட்டத்தட்ட ஓர் ஆண்டுக்கு மேலாகிவிட்டது. சென்ற ஆண்டே நடந்திருக்க வேண்டிய வேண்டிய மாநாடு இது. இலங்கைப் பிரச்னை உச்சத்தில் இருந்தபொது அறிவித்துவிட்டு, பிரபாகரன் இறந்த சமயத்தில் நடத்தவேண்டாம் என்பதனால், 2010 ஜூன் 23- க்கு ஒத்திவைக்கப்பட்டது. அதற்கு காரணமாகச் சொல்லப்பட்டது, மாநாடு நடக்கும் கோவை நகரை மேம்படுத்த வேண்டும்; அதற்கு கால அவகாசம் வேண்டும் என்பது தான்.

சாலை மேம்பாடு:
இதனால், கோவை நகரம் மேம்பட வாய்ப்பு கிடைத்தது என்று கோவை மக்கள் மகிழ்ந்தது உண்மை. ஆனால், செம்மொழி மாநாட்டு நிகழ்வுகள் முழுவதும், ஏற்கனவே கோவை தொழில்துறையினரால் அமைக்கப்பட்ட கொடிசியா அரங்கிலேயே நடக்கும் அன்று அறிவித்துவிட்டது அரசு. பரவாயில்லை, நகர சாலைகளேனும் மேம்படும் என்று நகர் மக்கள் திருப்தி அடைந்தனர்.
அதற்கேற்ப, கோவைக்கு வரும் இரு பிரதான சாலைகளான அவிநாசி ரோடு (தே.நெ. 47), திருச்சி ரோடு (தே.நெ. 45) ஆகியவை அகலப்படுத்தப்பட்டன. ஆயினும் மிக நெருக்கடி உள்ள மேட்டுப்பாளையம் ரோடு, பொள்ளாச்சி ரோடு, சத்தியமங்கலம் ரோடு ஆகியவை மேம்படுத்தப்படவில்லை. அவிநாசி ரோடும் திருச்சி ரோடும் கூட, செம்மொழி மாநாடு அறிவிப்புக்கு முன்னரே அகலப்படுத்த திட்டமிட்டவை என்பது பலருக்கு தெரியாது.
ஆகமொத்தத்தில், தேசிய நெடுஞ்சாலைத் துறையினரால் செய்யப்படும் விரிவாக்கப் பணிகள், செம்மொழி மாநாட்டுக்காக நடத்தப்படுபவை போல முன்னிறுத்தப் படுகின்றன. உண்மையில், இப்பணிகளை வேகமாக நடத்தச் செய்ததைத் தவிர, மாநாட்டுக்கும் சாலை மேம்பாட்டுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது உண்மை.
கோவை நகரின் பல சாலைகள் இன்னும் மோசமாகவே உள்ளன என்பது நகருக்குள் உலா வந்தால் தான் தெரியும். ஆனால், மேம்போக்கான பணிகளிலேயே கவனம் செலுத்தப் படுவதால், இவை கவனம் கொள்ளப்படவில்லை. நகரின் பொது சுவர்களுக்கு வண்ணம் பூசவும், ஓவியம் வரையவுமே நேரம் போதவில்லை. அவை தானே வெளியூர், வெளிநாடுகளிலிருந்து வரும் தமிழர்களின் கண்களை முதலில் கவரும்?

பூங்காக்கள்:
மாநாட்டின் பேரில் நடந்துள்ள கொள்ளை என்று பூங்காக்கள் அமைப்பை சொல்லலாம். செம்மொழி மாநாட்டுக்காக 40 பூங்காக்கள் அமைத்துள்ளதாக கோவை மாநகராட்சி அறிவித்துள்ளது. இவற்றில் பல, ஏற்கனவே அமைக்கப்பட்டவை. அவை புதுப்பிக்கப்பட்டுள்ளன. சில இடங்களில் மட்டும் புதிய பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கான செலவினங்கள் எவ்வளவு? அந்த செலவு மாநகராட்சி சார்ந்ததா, செம்மொழி மாநாடு சார்ந்ததா? இது யாருக்கும் தெரியாது.
தவிர இந்த பூங்காக்களில் மரங்களே கிடையாது. அவசர உப்புமா போல செயற்கை புல்வெளிகள், குரோட்டன் செடிகளை கொண்டு பம்மாத்து செய்திருக்கிறார்கள். மாநாடு முடியும் வரை இந்த புல்தரைகளுக்கு தண்ணீர் பாய்ச்சப்படும். அதன்பிறகு, காய்ந்து சருகாகப் போகும் இந்த பசுமையான புல்தரைகளைப் பார்த்தால் பாவமாக இருக்கிறது.
மாநாடு நடக்கும் கொடிசியா அரங்கைச் சுற்றிலும் கூட இதே போன்ற அவசர ஒப்பனைகள் தான் செய்யப்பட்டுள்ளன. இன்னும் இந்த ஒப்பனைகள் தொடர்கின்றன. தொட்டிச் செடிகள் எங்கெங்கிருந்தோ வந்து குவிகின்றன. இவை வாடகைக்கு எடுத்து வந்தவை போலத் தான் தோற்றம் அளிக்கின்றன.
கோவை மதிய சிறை மைதானத்தில் பிரமாண்டமான தாவரவியல் பூங்கா அமைக்கப்படும் என்று முதல்வர் அறிவித்து ஓராண்டாகி விட்டது. அதற்கான எந்த ஏற்பாடும் செய்யப்படவில்லை. கடைசி நேரத்தில் யாரோ முதல்வருக்கு ஞாபகப்படுத்தி இருப்பார்கள் போல- சென்னையில் கூட்டிய கூட்டம் ஒன்றில், கோவையில் அமைய உள்ள செம்மொழிப் பூங்காவின் மாதிரி வரைபடங்களை முதல்வர் பார்வையிடுவதாக ஊடகங்களுக்கு செய்தியும் படமும், சில தினங்களுக்கு முன், செய்தி விளம்பரத் துறையால் விநியோகிக்கப்பட்டது. அதை பிரசுரித்து ஊடகங்கள் புளகாங்கிதம் அடைந்தன.

உள்கட்டமைப்புக்கள்:
செம்மொழி மாநாடு உலகு தழுவிய அளவில் நடப்பதால், குடிநீர், தொலைபேசி, பொது அரங்குகள், மின்சாரம் உள்ளிட்ட வசதிகள் மேம்படும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. கொடிசியா அரங்கில் மாநாடு நடப்பதால், பொது அரங்கம் நிறைவேறாது என்பது முதலிலேயே தெரிந்துபோனது. மாநாட்டின் முழு நிகழ்வுகளும் அங்கேயே நடப்பதால், அப்பகுதிக்கே அனைத்து கட்டமைப்பு வசதிகளும் செய்யப்பட்டன. பல லட்சம் லிட்டர் குடிநீர் பயன்படுத்தத் தேவையான குடிநீர்க் குழாய்கள், தொட்டிகள் கொடிசியா அரங்கை மையமாக வைத்து அமைக்கப்பட்டன. மின்சார வசதியும் அதே பகுதியில் புதுப்பிக்கப்பட்டது. தொலைதொடர்பு வசதிகளும் அங்கு தான் (இவையும் தற்காலிகமானவை) மேம்படுத்தப்பட்டுள்ளன.
தீயணைப்பு நிலையங்கள் 8 தற்காலிகமாக அமைக்கப்பட உள்ளன. சென்னைக்கு அடுத்தபடியாக உள்ள கோவை மாநகரில் உள்ள தீயணைப்பு நிலையங்களை விரல் விட்டு எண்ணி விடலாம். குறைந்தபட்சம், தற்காலிகமாக அமைக்கப்படும் தீயணைப்பு நிலையங்களில் பாதியை மட்டுமாவது நிரந்தமாக்கினால் கோவைக்கு பயன் கிடைக்கும்.
மாநாடு நடக்கும் இடம் அருகே தற்காலிக காவல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் நிரந்தரமான காவல் நிலையம் ஒன்று தேவை என்பது காவல்துறைக்குத் தெரியும். அவிநாசி ரோட்டில், பி.எஸ்.ஜி.கல்லூரி அருகே காவல்நிலையம் ஒன்றை அமைத்திருக்கலாம். அது காலகாலத்துக்கும் நகரின் பாதுகாப்புக்கு உதவியாக இருந்திருக்கும்.

எல்லாம் கண்துடைப்பு...
இவ்வாறு செம்மொழி மாநாட்டுக்காக நடக்கும் பணிகள் பலவும் கண்துடைப்பான (eyewash) செயலாகவே உள்ளன. கோவையில் அரசு சார்ந்த பல்கலைக்கழகங்களாக பாரதியார் பல்கலை, வேளாண்மை பல்கலை, கோவை அண்ணா பல்கலை ஆகியவை உள்ளன. இப்பல்கலைகளில் கூட எந்த மேம்பாட்டுப் பணியும் சொல்லிக் கொள்ளும்படி நடக்கவில்லை. சொல்லப்போனால், கோவை அண்ணா பல்கலை. வாடகை கட்டடத்தில் தான் இயங்குகிறது. அதை தரம் உயர்த்த சில கோடிகளை செலவிட்டிருக்கலாம்.
கோவையில் உள்ள தனியார் பல்கலைகளான அமிர்தா, காருண்யா, விவேகானந்தா, அவினாசிலிங்கம், கற்பகம் ஆகிய பல்கலைகளுக்கு இம்மாநாட்டில் என்ன பணி என்று தெரியவில்லை. உயர்கல்விக்கென இருக்கும் பல்கலைகளைப் புறக்கணித்துவிட்டு, செம்மொழி மாநாடு நடத்துவதால் என்ன பயன் என்றும் தெரியவில்லை.
இவை அனைத்தையும் விட நகைச்சுவை, பிரதான சாலைகளில் அமைக்கப்படும் பாவுக்கற்கள் (டைல்ஸ்) பாவிய நடைபாதை அமைப்பது தான். எந்த அஸ்திவாரமும் இன்றி, மண்ணில் எழுப்பப்படும் செங்கல் தடுப்புகளுக்கு இடையே மண்ணை நிரப்பி அதன் மேல் டைல்ஸ்களைப் பாவி சிமென்ட் பூச்சு பூசி விடுகிறார்கள். அநேகமாக, மாநாடு முடியும் வரை கூட இந்த நடைபாதைகள் (பிளாட்பாரம்) தாங்காது என்று தோன்றுகிறது. பல இடங்களில் இப்போதே நடைபாதையில் பதித்த டைல்ஸ்களை காணவில்லை. மக்களின் வரிப்பணம் மண்ணாவதற்கு இதைவிட சாட்சி வேறு இருக்க முடியாது.

(மீதி நாளை...)

.

Friday, June 18, 2010

வசன கவிதை - 69செம்மொழி மாநாட்டை நோக்கி...18


எல்லோரும் வாங்க!எல்லா அமைச்சர்களும்
கோவையில் முகாம்.
எல்லா அதிகாரிகளும்
கோவையில் முடுக்கம்.
எல்லா ஊர்களிலிருந்தும்
காவலர்கள் வருகை.
எல்லா ஊர்களிலிருந்தும்
துப்புரவுப் பணியாளர்கள் விஜயம்.
எல்லா மாவட்டங்களிலிருந்தும்
பேருந்துகள் வருகின்றன.
எல்லாப் பகுதியிலும் மின்வெட்டு-
கோவை தவிர.
எல்லாப் பகுதியிலும் வறட்சி-
கோவை தவிர.
ஆகவே
செம்மொழி மாநாடு
நடைபெறும் கோவைக்கு
வாரும் ஜெகத்தீரே!
வந்து தீரணும் ஜெகத்தீரே!
.

Thursday, June 17, 2010

வசன கவிதை - 68


செம்மொழி மாநாட்டை நோக்கி...17

மற்றுமொரு வாய்ப்பு...


புதிய நடைபாதை உருவாக்குவது
தார்ச்சாலை புதுப்பிப்பது
சித்திரங்கள் வரைவது
பூங்காக்கள் அமைப்பது
விளம்பரங்கள் வைப்பது
தெருவிளக்குகளை மாற்றுவது
புத்தகங்கள் வெளியிடுவது
விருந்தாளிகளை உபசரிப்பது
பொம்மைகள் தயாரிப்பது
விளக்கக் கூட்டம் நடத்துவது
ஆய்வரங்கு கூட்டுவது....
இன்னபிற பணிகள் எல்லாமே
அமர்க்களம்.

இந்தப் பணிகள் எல்லாமே நல்வாய்ப்பு-
செம்மொழித் தமிழ் புகழ் பரப்ப.
மட்டுமல்லாது,
கழகக் கண்மணிகளுக்கும்
மற்றுமொரு வர்த்தக வாய்ப்பு.
.

Wednesday, June 16, 2010

வசன கவிதை - 67

செம்மொழி மாநாட்டை நோக்கி...16


இடிபாடுகளை மறையுங்கள்!


எல்லாச் சாலைகளும் மாநாடு நோக்கி.
எல்லாச் சாலைகளிலும் ஆக்கிரமிப்பு அகற்றம்.
சாலைகள் விரிவு சந்தோஷம் தான்.
ஆனால் -
அரைகுறையாக நிற்கும் இடிபட்ட கட்டடங்கள்
ஆனையிறவு, கிளிநொச்சியை
நினைவுபடுத்துகின்றன.

இன்னும் ஒரு வாரம் இருக்கிறது-
அதற்குள் மாற்ற முடியாதா?
மனதைப் பிசையும் கொடூர ஞாபகங்களை
எப்படியாவது மறக்க வேண்டும்.
அல்லது இந்த இடிபாடுகளை மறைத்து
பிரமாண்ட விளம்பரங்கள் செய்யுங்கள்.

அதில்,
தமிழனின் வீரம், தன்மானம், ஈகை, பொதுநலம்
உள்ளிட்ட குணநலன்களை தூரிகை ஆக்கலாம்.
தமிழின் சிறப்புக்களை பொன்னெழுத்துக்களால் பொறிக்கலாம்.
தலைவரின் சரிதத்தை புகைப்படங்களால் விளக்கலாம்.

எதையாவது செய்யுங்கள்.
ஒருவார காலத்துக்குள்,
எப்படியாவது இடிபாடுகளை மறையுங்கள்.
இல்லாவிட்டால் புண்படும் மனது.
.

Tuesday, June 15, 2010

உருவக கவிதை - 45


செம்மொழி மாநாட்டை நோக்கி...15

குரங்கும் மருந்தும்


குரங்கை நினையாமல்
மருந்தை அருந்தினால்
குணமாகும் நோயென்ற
கதை ஒன்று உண்டு.

தெருவில் திரியும்
யாசகர்கள், நோயாளிகள்,
பிராந்துகளை நோக்குந்தோறும்
முள்வேலி முகாம்
நினைவில் வந்து தொலைக்கிறது.

ஈழத்தமிழ் வியாதியை
செம்மொழித் தமிழ் மருந்து
போக்குமா?

இதற்காகவேனும்
யார் கண்ணிலும் படாமல்
யாசகர்களை போஷியுங்கள்!
புண்ணிய காரியம் பாவம் போக்கும்-
எண்ணிய காரியம் கைகூடாவிடிலும்.
.


Monday, June 14, 2010

வசன கவிதை - 66

செம்மொழி மாநாட்டை நோக்கி...14

பரந்து கெடுக!
புத்தொளி வீசும் உற்சாக நகரில்
இலக்கியம் மணக்கும் இனிய தருணத்தில்
விருந்தாக வந்த உலக அறிஞர்கள்
கண்களில் விழுந்துவிடக் கூடாது
தெருவைக் கெடுக்கும்
பிச்சைக்காரர்கள்.

பொன்னுலகம் அஞ்சும்
மண்ணுலகம் சமைத்து
பதாகைகளால் வரவேற்கும்
பரவச கணத்தில் எதற்கு
உடை கிழிந்த பிச்சைக்காரி?

அலங்கார அரங்குகளில்
அணிதிரளும் மொழிஞாயிறுகளின்
கண்களைக் கலங்க வைக்கும்
சிக்குத்தலை யாசகர்களுக்குத் தெரியாது-
நடக்கப் போகும் நிகழ்வின்
வரலாற்று முக்கியத்துவம்.

ஆகவே-
பத்து நாளுக்கு
எங்காவது இவர்களை
ஒளித்து வையுங்கள்!
இரந்தும் உயிர் வாழ்தல்
செம்மொழிக்கு அவமானம்.

மாநாடு நன்றே! மாநாடு நன்றே!
யாசகர் ஒளித்தும் மாநாடு நன்றே!
நன்றி: விஜயபாரதம் (02.07.2010)
.

Sunday, June 13, 2010

வசன கவிதை - 65

செம்மொழி மாநாட்டை நோக்கி...13

வேவு விமானம்
..
..
..
செம்மொழி மாநாட்டைக் கண்காணிக்க
சிறிய பொம்மை விமானம் தயார்-
காவல்துறை அறிவிப்பு.

இது நன்கு இயங்கும்.
இலங்கையில் பிரயோகித்தது
இதே போன்ற விமானம் தான்.
இது நன்றாக இயங்கும்.

இந்திய அரசு உதவியாய்த் தந்தது
இதே போன்ற விமானம் தான்.
இது நன்றாகவே இயங்கும்.
.

Saturday, June 12, 2010

வசன கவிதை - 64

செம்மொழி மாநாட்டை நோக்கி...12அது போன வருஷம்...தமிழில் பெயர் வைத்த
திரைப்படங்களுக்கு
கேளிக்கை வரியில் விலக்கு
கிடைத்தது
போன வருஷம்.


தமிழில் பெயர்ப்பலகை வைக்கும்
நிறுவனங்களுக்கு
வணிக வரியில் விலக்கு
கிடைக்குமா
இந்த வருஷம்?
.

Friday, June 11, 2010

ஏதேதோ எண்ணங்கள்


செம்மொழி மாநாட்டை நோக்கி.. 11

இதழ்களின் மௌனம்

கடந்த இரண்டு மாதங்களாக, தமிழ் ஊடகங்கள் அளவுக்கு அதிகமாகவே உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டைப் பற்றிய முன்னோட்டச் செய்திகளை வாரி வழங்கி வருகின்றன. சில பத்திரிகைகள் திகட்டத் திகட்ட இச்செய்திகளை வழங்குவதற்கு உள்நோக்கமுண்டு. விளம்பர வருவாய் பெருக்க வாராது வந்த மாமணியாகவே இம்மாநாட்டை அவை கருதுகின்றன. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, அரசு, உள்ளாட்சி விளம்பரங்களை அள்ளி வருவாய் ஈட்டுவதே ஊடகங்களின் ஒரே குறிக்கோளாக இருக்கிறது.

முன்னணி தமிழ் நாளிதழ்களைக் கண்ணுறும் யாரும் இதை உடனே புரிந்துகொள்ள முடியும். தினசரி, செம்மொழி மாநாட்டு ஏற்பாடுகள் குறித்த செய்திகள் பிரதானப் பக்கங்களை ஆக்கிரமிக்கின்றன. ஏற்பாடுகள் சரியாக உள்ளனவா என்பதை ஒவ்வொரு அமைச்சரும் வரிசையாக வந்து ஆய்வு செய்கின்றனர்; செய்தி ஆகின்றனர்.

செம்மொழி மாநாட்டுக்காக கோவையில் தார்ச்சாலை புதுப்பிப்பதை ஒவ்வொரு நாளிதழும் ஒவ்வொரு வகையாக பிரசுரிக்கிறது. மாநாட்டுக்காக வரையப்படும் ஓவியங்கள், நாளிதழ்களின் வண்ணப் பக்கங்களில் கண்டிப்பாக இடம் பெறுகின்றன.

மாநாட்டு பந்தல் அமைப்பு, நீண்ட தொடர் ஓட்டங்கள், முகாம் நோக்கப் பாடல் வெளியீடு, மாநாட்டுத் தோரண வாயில்கள், பேரணியில் இடம் பெறும் அலங்காரச் சிலைகள் தயாரிப்பு, மாநாட்டுக்காக நடைபெறும் அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டங்கள், ... இவை தான் மக்கள் தெரிந்துகொள்ள வேண்டிய ஒரே செய்தி என்பது போல, அரைத்த மாவையே அரைக்கின்றன வெகுஜன ஊடகங்களும் மின்னணு ஊடகங்களும்.

விதிவிலக்குகள் இல்லாமல் இல்லை. தினமணி நாளிதழ் செம்மொழி மாநாட்டை வரவேற்றாலும், தலையங்கப் பக்கத்தில் செய்ய வேண்டிய கடமைகளை அரசுக்கு நினைவூட்டத் தவறுவதில்லை. தமிழ்வழிக் கல்வி குறித்த தினமணி தலையங்கம் (இந்த வசை எய்திடலாமோ - 5.6.10) சரியான நேரத்தில் வெளியானது. இதைப் படிக்க, செம்மொழி மாநாட்டு கிறுகிறுப்பில் இருக்கும் முதல்வருக்கு நேரம் இருக்குமா என்று தான் தெரியவில்லை.

இதே போன்ற அரிய கடமையை காலச்சுவடு மாத இதழ் செய்துள்ளது. இம்மாத இதழில் வெளி ரங்கராஜன் எழுதியுள்ள 'உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடும் தமிழ்ப் படைப்பாளிகளும்' கட்டுரை அற்புதம். 'குரங்கேற்றுக் கொள்ளாத கொம்புண்டோ?' என்று கேட்க இப்போதும் சில கம்பர்கள் உள்ளார்கள் என்பது நம்பிக்கை அளிக்கிறது.

சோ ராமஸ்வாமி அவர்களின் துக்ளக் மட்டும் வழக்கம் போல நையாண்டியுடன் செம்மொழி மாநாட்டை விமசித்து வருகிறது. மற்றபடி எந்தப் பத்திரிகையும் இதை விமர்சனக் கண்ணோட்டத்துடன் அணுகவில்லை. இது ஊடகங்களை நம்பியுள்ள மக்களை ஏமாற்றுவதாகும் என்பதை ஏனோ அத்துறையினர் உணரவில்லை.

செம்மொழி மாநாடு நடத்துவதாக முதல்வர் அறிவித்த நேரம், இலங்கையில் குழப்பம் நிலவிய நேரம். தமிழ் ஈழக் குழப்பத்திலிருந்து தமிழக அரசியலை மீட்டெடுக்க முதல்வர் கருணாநிதி ஏவிய அஸ்திரம் தான் இது. உலகத் தமிழ் மாநாடு நடத்துவதாக தன்னிச்சையாக அறிவித்து, உலகத் தமிழ் ஆராய்ச்சிக் கழகத்திடம் மூக்குடைபட்டு, பிறகு சாதுர்யமாக அறிவித்தது தான் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு. இதை ஆரம்பத்திலேயே அ.தி.மு.க, தலைவி ஜெயலலிதாவும், ம.தி.மு.க, தலைவர் வைகோவும், நெடுமாறனும் கண்டித்தனர். அவர்கள் முதல்வரின் அரசியல் வைரிகள் என்பதால் அந்த எதிர்ப்புகள் ஒதுக்கப்பட்டன.

மொழிப்பற்று என்ற வகையில் பலரும் இதை ஏற்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆட்பட்டனர். அரசை அண்டிப் பிழைக்கும் அறிஞர் குழுக்களுக்கு இது நல்ல நிலாக்காலம். அவர்கள் தங்கள் கடமையைச் செய்கின்றனர். சீட்டுக்கவிஞர்களுக்கு இது நல்ல மழைக்காலம். அவர்களும் தங்கள் கடமையை செவ்வனே செய்கின்றனர். அரசியல்வாதிகள் அவர்களுக்கே உரிய காற்றுக்காலமாக இதைக் கருதி தூற்றிக் கொள்கின்றனர்- வளர்ச்சிப் பணிகள் மூலமாக.

இந்நிலையில், ஊடகங்களை மட்டும் குற்றம் சொல்வதில் பொருளில்லை. ஆயினும், 'நாமார்க்கும் குடியல்லோம், நமனை அஞ்சோம்' என்ற திருநாவுக்கரசர் வாழ்ந்த மண்ணில், 'உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை' என்ற மகாகவி பாரதி பிறந்த மண்ணில், அரசியல் சுயலாபத்துக்காக நடத்தப்படும் மாநாடு குறித்து இவ்வளவு புளகாங்கிதம் அடைய வேண்டுமா என்ற கேள்வியைத் தவிர்க்க முடியவில்லை.

இதழ்களின் மௌனம் சங்கடப்படுத்துகிறது.
.

Thursday, June 10, 2010

புதுக்கவிதை - 100

செம்மொழி மாநாட்டை நோக்கி...10

பத்திரிகை செய்தி - 2


'தமிழ் வாழ்க' என

செம்மொழி மாநாட்டை வரவேற்று,

நியான் எழுத்துக்களில்

போர்டு வையுங்கள்!

- உள்ளாட்சிகளுக்கு

அரசு உத்தரவு.

..

Wednesday, June 9, 2010

வசன கவிதை -63

செம்மொழி மாநாட்டை நோக்கி...9பேரணி பொம்மைகள்கன்றுக்காக மகனைக் கொன்றது
அந்தக் காலம்;
மகனுக்காக மதுரை எரிந்தது
இந்தக் காலம்.

நட்புக்காக வடக்கிருந்தது
அந்தக் காலம்;
பதவிக்காக 'வடக்'கிருப்பது
இந்தக் காலம்.

புறாவுக்காக தசை அளித்தது
அந்தக் காலம்;
விழாக்களில் சதை ஆடுவது
இந்தக் காலம்.

முல்லைக்கு தேர் ஈந்தது
அந்தக் காலம்;
முதல்வரை பாரி என்பது
இந்தக் காலம்.

மயிலுக்கு போர்வை தந்தது
அந்தக் காலம்;
மக்களுக்கு பணம் தருவது
இந்தக் காலம்.

நெறி தவறின் உயிர் நீப்பது
அந்தக் காலம்.
நெறி தவறி உயிர் எடுப்பது
இந்தக் காலம்.

வாழ்வுக்கு வழி காட்டியது
அந்தக் காலம்;
இவற்றை பேரணியில்
பொம்மைகள் ஆக்குவது
இந்தக் காலம்.
.

Tuesday, June 8, 2010

வசன கவிதை - 62


செம்மொழி மாநாட்டை நோக்கி...8

நெருடல்


அலங்கார ஊர்திகள்
அணிவகுக்கின்றன-
செம்மொழிப் பேரணியில்.

ஐவகை நிலங்கள்
கடையெழு வள்ளல்கள்
சங்கப்புலவர்கள்
முப்பெரும் வேந்தர்கள்
காப்பியக் காட்சிகள்
வரலாற்று நிகழ்வுகள்
சமூக மாற்றங்கள்
எல்லாவற்றையும்
சித்தரிக்கும்
'இனியவை நாற்பது'
அணிவகுப்பு.

எனினும் ஒரு நெருடல்-
புறநானூற்றுத் தாயின்
மறக்களக் காட்சி
சமீபத்தில் நிகழ்ந்த
'இன்னா நாற்பது' அல்லவா?

இனியவை நினைக்க...
இன்னா மறக்க...
இது தானே நமது
செம்மொழிப் பண்பாடு?
.

Monday, June 7, 2010

வசன கவிதை - 61

செம்மொழி மாநாட்டை நோக்கி...7

விருந்தோம்பல்இலங்கை அதிபரை சந்திக்கும்
தமிழக மக்கள் பிரதிநிதிகளுக்கு
ஆலோசனை:

அவர் தந்த நினைவுப் பரிசை
கொண்டு செல்லுங்கள்-
இலங்கையில் அவர் அளித்த
வாக்குறுதியை நினைவுபடுத்த.

எதற்கும் நினைவுப்பரிசாக
புத்தர்சிலை கொண்டு செல்லுங்கள்-
தம்மபதம்
நினைவில் வரட்டும்.

அப்போதும் மறதி என்றால்
கவலைப் படாதீர்-
செம்மொழி மாநாட்டு அழைப்பிதழை
தந்துவிட்டு வாருங்கள்!
.

Sunday, June 6, 2010

வசன கவிதை - 60

செம்மொழி மாநாட்டை நோக்கி...6

வரையாத ஓவியங்கள்


கோவையே வண்ணமயமாகிறது.
எல்லாப் பெருமையும் செம்மொழி மாநாட்டுக்கே.

பொதுச் சுவர்கள், ஓவியங்களால் மிளிர்கின்றன.
ஆபாசச் சுவரொட்டி ஒட்டிய இடங்களில்
அழகான வண்ண வண்ண ஓவியங்கள்.
எல்லாப் பெருமையும் செம்மொழி மாநாட்டுக்கே.

தமிழின் தொன்மை;
தமிழகத்தின் கலாசாரச் சிறப்பு;
தமிழ்நாட்டின் வளர்ச்சி;
தமிழ்ப் பண்பாட்டின் பெருமிதம்;
தமிழர்தம் விவசாய ஆற்றல்;
தமிழர்தம் கலையுணர்வு;
தமிழர்தம் தொழில் சிறப்பு;
எல்லாம் வெளிப்படுத்தும் சுவர் ஓவியங்கள்.
எல்லாப் பெருமையும் செம்மொழி மாநாட்டுக்கே.

சுவர்கள் தென்படும் இடங்களில் எல்லாம் ஓவியங்கள்.
பார்க்கவே அழகாக இருக்கிறது.
வெளியூர்களில் இருந்து வரும் மக்கள்
பார்த்தால் மயங்கிவிடுவார்கள்.
எல்லாப் பெருமையும் செம்மொழி மாநாட்டுக்கே.

ஆனால்-
இடையிடையே,
வேலா முற்கள் படர்ந்த வயல்வெளிகள்;
கதவடைக்கப்பட்ட தொழிற்சாலைகளின் சிதிலங்கள்;
மூடப்பட்ட நூற்பாலைகளின் செங்கல் பெயர்ந்த சுவர்கள்.
இந்த இடங்களில் மட்டும்
ஓவியம் வரைய முடியவில்லை.

சுவர் இருந்தால் தானே சித்திரம் வரைய முடியும்?
நன்றி: விஜயபாரதம் (02.07.2010)
.

Saturday, June 5, 2010

வசன கவிதை - 59

செம்மொழி மாநாட்டை நோக்கி...5

'இன்விட்டேஷன்' தயார்!


செம்மொழி மாநாட்டு 'இன்விட்டேஷன்' தயார்!
சி.எம்.மிடம் வழங்கினார் ரிசப்ஷன் கமிட்டி தலைவர்.
கொடிசியா ஹாலில் ப்ரோக்ராம்.
சீப் கஸ்ட் ஜனாதிபதி;
சாவனிரை வெளியிடுகிறார் கவர்னர்;
இறுதியில் பேசுகிறார் சி.எம்.
மொத்தத்தில் 'இன்விட்டேஷன்' சூப்பர்!
.

Friday, June 4, 2010

புதுக்கவிதை - 99


செம்மொழி மாநாட்டை நோக்கி...4

பத்திரிக்கை செய்திதமிழில் பெயர்ப்பலகை வையுங்கள்:
கோவை மக்களுக்கு
'மேயர்' வேண்டுகோள்.
.

Thursday, June 3, 2010

உருவக கவிதை - 44


செம்மொழி மாநாட்டை நோக்கி...3

வாழிய செம்மொழி!


அகர முதல எழுத்தெல்லாம்; ஆயின்
ஆதிபகவனே உலகாம்; அதனால்
என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே
என மகிழ்ந்து;

எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே
அல்லாமல் வேறொன்றும் அறியேன்;
என்கடன் பணி செய்து கிடப்பதெனினும்,
நெற்றிக் கண்ணைத் திறப்பினும் குற்றமெனச்
சாற்றும் பரம்பரையினன்;
ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்
என்ற மந்திரம் மறவா சமதருமன்;
மாற்றான் தோட்டத்து மல்லிகை மணமும்
வாடும் பயிர் கண்டு வாடும் மனமும்
உணரும் பகுத்தறிவு கொண்டு;

விழுப்பம் கொல்லும் பசிப்பிணி அறுக்க
அமுதசுரபியை கவியினில் யாப்பேன்;
தமிழுக்கும் அமுதென்று பேர் என்பதனால்
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பச் செய்து;
படைப்பதனால் என்பேர் இறைவன் என்பேன்!

எனக்கு முன்னே சித்தர் பலர் இருந்தாரப்பா
யானும் வந்தேன் - இத்திரு நாட்டில்
வன்மை இல்லையோர் வறுமை இலாததால்
என்னும் நிலையை எய்திட வேண்டி;

அரைக்கால் புள்ளிகளுக்கும் அரும்பொருள்
வழங்கிய குறளோவியரின்
குருத்தெனத் திகழ்ந்து;

புல்லாய்ப் பூடாய் புழுவாய் மரமாகிடினும்
எல்லாப் பிறப்பிலும் எம்மொழி பேசி,
அறம் செய விரும்பி
ஊக்க...மது கைவிடேன்;

ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டுமெனினும்
தமிழோடு இசைபாட மறந்தறியேன்;
இம்மைக்கும் ஏழேழ் பிறவிக்கும்
உற்றோமே யாவோம்- செம்மொழியே!
உமக்கே நாம் ஆட்செய்வோம்!

வாழிய செம்மொழி! வாழ்க செந்தமிழர்!
வாழிய நாவலந் தீவெனும் உலகம்!
எத்திசையும் புகழ் மணக்க
இருந்த பெரும் தமிழணங்கே!
வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே!
.
குறிப்பு: இப்பாடலை செம்மொழி மாநாட்டின் நிறைவரங்கத்தில் பாடலாம். மாநாட்டு முகப்பரங்கப் பாடலை 'நெஞ்சுக்கு நீதியார்' எழுதிவிட்டபடியால், நிறைவரங்கப் பாடல் யாக்கப் பட்டுள்ளது.
இப்பாடலை பிரபலப்படுத்த பத்திரிகைகளில் விளம்பரப் படுத்தும்படியும், உலக இசைமேதை பி.ஆர்.ரக்மான் இசை அமைக்க ஏற்பாடு செய்யும்படியும், நவீன இயக்குனர் சவ்ரவ் மேனன் படம் எடுக்க ஏற்பாடு செய்யும்படியும், அனைவரையும் கேட்டுக் கொல்கிறேன்.
.

Wednesday, June 2, 2010

வசன கவிதை - 58


செம்மொழி மாநாட்டை நோக்கி...2

நினைவுச் சங்கிலியின் அறுபட்ட கண்ணிகள்


எல்லா மண்டபங்களும்
அரசு வசம்;
எல்லா முகாம்களும்
காவலர் வசம்.

அகதிகள் வெளியேற
அனுமதி இல்லை;
அரசாங்க மாநாடு
முடியும் வரையில்.

கருப்புச் சாலைக்கு
செம்மண் பூச்சு;
தொலைந்த தமிழுக்கு
செம்மொழிப் பூச்சு.

எல்லா இடங்களிலும்
வள்ளுவர் சின்னம்;
நினைவில் வந்தது
வேந்தமைவுக் குறள்.

.

புதுக்கவிதை - 98


செம்மொழி மாநாட்டை நோக்கி...1

இன்னும் 'ட்வென்டி டூ டேஸ்'நடைபாதையில் பாவிய
'பேவ்மென்ட் டைல்ஸ்'
அழகோ அழகு!
பொது சுவர்களில் வரைந்த
'கல்சுரல் டிராயிங்க்ஸ்'
பிரமாதம்!
மாநாட்டுக்கு அமைத்த
'ஸ்பெஷல் லோகோ'
அட்டகாசம்!
முதல்வர் எழுதிய பாடலுக்கு
'மியூசிக் மிக்சிங்'
கலக்கல்!
மாநாட்டுக்கு அமைத்த
'ரிசெப்ஷன் கமிட்டி'
தூள்!
விருந்தினர் நின்று பார்க்கும்
'கேலேரி ஸ்டேஜ்'
சூப்பர்!
வெளிநாட்டுக்காரர்கள் தங்க
'ஹோட்டல் ரிசர்வேஷன்'
முடிந்தது!
மாநாட்டுப் பந்தலில்
'லைட்டிங் அரேஞ்ச்மென்ட்ஸ்'
திருப்தி!
தினசரி வெளியாகும்
'மீடியா கவரேஜ்'
நன்று!
பேரணிப் பாதையில்
'பிளக்ஸ் பேனர்கள்'
தயார்!
இன்னும்
'ட்வென்டி டூ டேஸ்'
இருக்கிறது-
உலகத் தமிழ்ச் செம்மொழி
மாநாட்டுக்கு!


.

Tuesday, June 1, 2010

ஏதேதோ எண்ணங்கள்செம்மொழி மாநாட்டை நோக்கி...


அன்பு நண்பர்களே,
வணக்கம்.

தமிழ்நாட்டில் எல்லாருக்கும் எல்லா வசதிகளும் கிடைத்துவிட்டன; உலகம் முழுவதும் தமிழர்கள் மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள். எனவே இப்போது உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு தான் பேச வேண்டிய ஒரே விஷயம்.
தமிழ்நாடு முழுவதும் இப்போது மக்கள், அரசு, ஊடகங்கள் அனைவரும் ஒரே சிந்தனையாக இருக்கும் செம்மொழி மாநாடு வெல்ல, நானும் முயற்சி செய்ய வேண்டாமா? அதற்காகத் தான் இந்தக் கவிதைத் தொடர். (சத்தியமாக இதை மண்டபத்தில் யாரும் எழுதித் தரவில்லை).

தமிழக முதல்வர் அடியொற்றி, அவரது பாணியிலேயே;;;;;; இக்கவிதை யாக்கப் பட்டுள்ளது. இனி எனது வலைப்பூவில், மாநாடு முடியும் வரைக்கும், மற்ற சமூகப் பிரச்னைகளை ஒத்திவைத்து, செம்மொழி புராணம் பாடத் திட்டமிட்டிருக்கிறேன். ஏனெனில், எனது வலைப்பூவுக்கு அரசு விளம்பரம் தேவைப்படுகிறது.

இக்கவிதையை உங்கள் நண்பர்களுக்கும் அனுப்பி உதவினால், அரசு விளம்பரத்துக்கு இணையாக உங்களையும் கருதி தன்யன் ஆவேன்.
நன்றி.
- என்றும் உங்கள்
வ.மு.முரளி