பின்தொடர்பவர்கள்

Sunday, June 27, 2010

ஏதேதோ எண்ணங்கள்


செம்மொழி மாநாட்டு ரசிகர்கள் பார்வைக்கு...

உலகம் தழுவிய தமிழ்ப் பார்வை
-வ.மு.முரளி.

உலகு தழுவிய பார்வை என்பது தமிழ் மொழிக்குப் புதியதன்று. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்று (புறநானூறு -192) ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னமே சங்கப் புலவர் கணியன் பூங்குன்றனார் பிரகடனம் செய்திருக்கிறார்.

'வட வேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறும் நல்லுலகத்தில்' (தொல்காப்பியம் - சிறப்புப் பாயிரம்) வாழ்ந்தாலும் ஆழிசூழ் உலகம் குறித்த பரந்த பார்வை தமிழர்களிடம் இருந்துள்ளது.

இலக்கியம் என்பது மனிதனை மேம்படுத்தவே; அந்த மக்களை 'உலகம்' என்ற ஆகுபெயரில் அழைப்பதும் தமிழ் இலக்கியங்களின் சிறப்பு. அதிலும் தமிழின் முதன்மையான இலக்கியங்கள் பலவும் 'உலகம்' என்ற சொல்லிலோ அதற்கு இணையான பிற சொற்களிலோ துவங்குவது, வியப்பும் மகிழ்ச்சியும் அளிப்பதாகும்.

தமிழின் இலக்கணத்தைச் செம்மைப்படுத்திய பவணந்தி முனிவரும்,
'மலர்தலை உலகின் மல்குஇருள் அகல
இலகு ஒளி பரப்பி யாவையும் விளக்கும்...'
-என்றே நன்னூலைத் துவங்குகிறார் (சிறப்புப் பாயிரம்).

பத்துப்பாட்டில் உலகம்:

சங்க இலக்கியக் கருவூலத்தில் முதல் நூலான திருமுருகாற்றுப்படையை,
'உலகம் உவப்ப வலன் ஏற்பு திரிதரு
பலர்புகழ் ஞாயிறு கடல் கண்டாங்கு...'
-என்றுதான் நக்கீரர் துவங்குகிறார்.

தனது இன்னொரு பத்துப்பாட்டு நூலான நெடுநல்வாடையிலும்,
'வையகம் பனிப்ப, வலனேர்பு வளைகிப்
பொய்யா வானம் புதுப்பெண் பொழிந்தென...'
-என்றே நக்கீரர் துவங்குகிறார்.

மற்றொரு பத்துப்பாட்டு நூலான மதுரைக்காஞ்சியை,
'ஓங்கு திரை பரயின்
ஒளி முந்நீர் வரம்பாகத்
தேன் தூங்கும் உயர் சிமைய
மலை நாறிய வியன் ஞாலத்து...'
-என்று துவங்குகிறார் மாங்குடி மருதனார்.

தொகை நூல்களுள் ஒன்றான கடவுள் வாழ்த்தை அடுத்த பாடல், உலகின் ஐம்பூதங்களை வியந்து பாடுகிறது.
'மண் திணிந்த நிலனும்
நிலம் ஏந்திய விசும்பும்
விசும்பு தைவரு வளியும்
வளித் தலைஇய தீயும்
தீ முரணிய நீரும், என்றாங்கு...'
-என்று முரஞ்சியூர் முடிநாகனார் (புறம்- 2 ) பாடிச் செல்கிறார்.

சங்க இலக்கியப் பாக்கள் பலவற்றின் உள்ளடக்கத்தில் உலகம் குறித்து வரினும், இலக்கியத்தின் துவக்கத்திலேயே 'உலகம்' இடம் பெறுபவை மட்டுமே சிறப்புக் கருதி இங்கு குறிப்பிடப்பட்டன.

காப்பியங்களில் ஞாலம்:

ஐம்பெரும் காப்பியங்களும் உலகின் முதன்மையை உணர்த்தியுள்ளன. முதன்மைக் காப்பியமான இளங்கோ அடிகளின் சிலப்பதிகாரம், உலகை வாழ வைக்கும் ஞாயிற்றைப் போற்றி, அடுத்ததாக திங்களையும் மாமழையையும் போற்றித் துவங்குகிறது.

உலகின் பசிப்பிணி அறுப்பதே தலையாய அறம் என்கிறது, பௌத்தக் காப்பியமான மணிமேகலை.

திருத்தக்கத் தேவரின் சீவக சிந்தாமணி, 'மூவர் முதலா உலகம் ஒரு மூன்றும் ஏத்த...' என்றே துவங்குகிறது.

முழுமையாகக் கிடைத்திராத வளையாபதியும்,
'உலகம் மூன்றும் ஒருங்குடன் ஏத்துமான்
திலகம் ஆய திறல் அறிவின் அடி...'
-என்று வணங்கித் துவங்குகிறது.

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் முதன்மையானதும், உலகப் பொதுமறை என்று போற்றப்படுவதுமான திருக்குறளில் 70 -க்கு மேற்பட்ட குறட்பாக்கள் உலகம் குறித்த கண்ணோட்டத்துடன் இலங்குகின்றன.
ஆதிபகவன் முதற்றே உலகு' என்ற தலைமைக் குறளே (குறள் - 1 :1 ) திருக்குறளின் அடிநாதமாக விளங்குகிறது.

பக்திக்காலக் காப்பியமான கம்பரின் ராமாயணம், 'உலகம் யாவையும் தாமுளவாக்கலும்' என்றே (பால காண்டம் -1) துவங்குகிறது. ஆழிசூழ் உலகம், மானுடம் வென்றதம்மா - போன்ற சொற்றொடர்கள் வாயிலாக உலகம் குறித்த கம்பரின் கனிந்த பார்வையை உணர முடிகிறது.

சைவக் காப்பியமான, தொண்டர்தம் பெருமை கூறும் பெரிய புராணம், 'உலகெலாம் உணர்ந்து ஓதற்கரியவன்' என்று துவங்குகிறது. இந்த முதலடியை சேக்கிழாருக்கு ஈசனே அசரீரியாய் எடுத்துக் கொடுத்ததாக நம்பிக்கை. இக்காப்பியம், 'உலகெலாம்' என்றே நிறைவடைகிறது.

வாழ்க வையகம்:

'யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' (திருமூலரின் திருமந்திரம்-147) என்று வாழ்ந்த சித்தர்களின் பூமி தமிழகம். உலகம் குறித்த அவர்களது பார்வை விசாலமானது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னமே, 'ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்' என்று அறைகூவியவர் திருமூலர்.

சைவத் தத்துவ விளக்கமான சிவஞானபோதம் நூலினை,
'மலர்தலை உலகின் மாயிருள் துமியப்
பலர்புகழ் ஞாயிறு பகரின் அல்லதை...'
-என்று மெய்க்கண்டார் துவங்குகிறார்.

இவ்வாறாக, வாழையடி வாழையென, தமிழ்ச் சான்றோர் பெருமக்கள் 'உலகம்' என்ற சொல்லையே முதன்மைப்படுத்தி, இலக்கியங்கள் உருவாக்கியது கண்டு உவகை மிகுகிறது.

இதன் தொடர்ச்சியாகவே, சென்ற நூற்றாண்டில் நாடகக் காப்பியம் படைத்த பேராசிரியர் சுந்தரம் பிள்ளையும், 'நீராரும் கடலுடுத்த நிலமடந்தை' என்று மனோன்மணீயம் நூலினைத் துவங்குகிறார்.

இந்த சிந்தனைப் பெருக்கால் தான், 'வல்லமை தாராயோ, இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே' என்று மகாகவி பாரதியால் வேண்ட முடிந்தது; 'புதியதோர் உலகம் செய்வோம், கேட்ட போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்' என்று பாரதிதாசனால் பாட முடிந்தது .

இத்தகைய மிக உயர்ந்த உலகு தழுவிய பார்வையுடன் இலக்கியங்கள் தழைத்தெழுந்த மண் தமிழகம்.

'எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே
அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே'
-என்று வாழ்ந்த தாயுமானவர் போன்ற மாமேதைகளின் அடியொற்றி, தமிழ் இலக்கியங்களின் உலகப் பார்வையை நம்முள் விரித்து, நாமும் தமிழ் வளர்ப்போம்.
.
நன்றி:
தினமணி (27 .06 .2010௦) பொங்கும் தமிழோசை இணைப்பிதழ் - கோவை.
.
குறிப்பு: தலைக்கு மேல் குண்டுகள் பறந்து கொண்டிருந்த நிலையிலும், உலகம் தம்மைக் கைவிட்டுவிடாது, யாரேனும் தம்மைக் காப்பாற்றுவார்கள் என்ற அற்ப ஆசையுடன் மண்ணில் புதைந்த லட்சக் கணக்கான ஈழ சகோதரர்களுக்கு இக்கட்டுரை அர்ப்பணம்.
.

No comments:

Post a Comment