செம்மொழி மாநாட்டை நோக்கி...20
கண்கட்டு வித்தை
செம்மொழி மாநாடு அறிவிக்கப்பட்டதே - அரசியல் நோக்கம் கொண்டது தான். என்றாலும், இதனால் கோவை நகருக்கு ஏதேனும் ஆதாயம் விளையும் என்று எதிர்பார்ப்பதில் தவறில்லையே! ஆயினும் - பஞ்சாங்க முறைப்படி சொன்னால் - ஆதாயத்தை விட விரயமே அதிகம் என்று தான் இதைச் சொல்ல வேண்டும்.
முகப்பு மாற்றங்கள்:
செம்மொழி மாநாட்டை முன்னிட்டு கோவை ரயில் நிலையத்தின் முகப்பு மாற்றப்பட்டுள்ளது; மகிழ்ச்சி. விமான நிலைய முகப்பும் பொலிவூட்டப்பட்டுள்ளது; மிக்க மகிழ்ச்சி. அதே சமயம் உக்கடம், சிங்காநல்லூர், காந்திபுரம் பகுதிகளிலுள்ள பேருந்து நிலையங்கள் முன்பு போலவே தொடர்கின்றன. குறிப்பாக கோவை மத்திய பேருந்து நிலையத்தில் பிளாட்பாரங்கள் கூட - இடிந்து கிடக்கின்றன - சரி செய்யப்படவில்லை. காந்திபுரம் நகரப் பேருந்து நிலையம் விரிவு படுத்தப்படும் என்ற அறிவிப்பு காற்றோடு போய்விட்டது.
இதைப் பற்றியெல்லாம் எந்த பத்திரிகையாளரும் கேள்வி கேட்பதில்லை. தினசரி செம்மொழி மாநாட்டை ஒட்டி நடக்கும் வளர்ச்சிப்பணிகளை பட்டியலிடவே பத்திரிகைகளுக்கு நேரம் போதவில்லை. இதையெல்லாம் பார்க்க யாருக்கு நேரம்?
கோவை- மேட்டுப்பாளையம் ரோட்டில் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையம் செம்மொழி மாநாட்டை முன்னிட்டு கட்டப்பட்டதாக கதைக்கிறார்கள். உண்மையில், அத்திட்டம் துவங்கி பல மாதங்கள் கடந்த பின்னர் தான் செம்மொழி மாநாடு அறிவிக்கப்பட்டது. நல்ல வேளையாக ஒண்டிப்புதூர் மேம்பாலம் முன்னரே திறக்கப்பட்டுவிட்டது. இல்லாவிட்டால், ஆறு வருடம் கட்டிய அதையும் செம்மொழி மாநாட்டுப் பட்டியலில் சேர்த்திருப்பார்கள்.
ஹோப் காலேஜ் பாலம் மூன்று ஆண்டுகளாகக் கட்டப்பட்டு வருகிறது. பாலத்தின் ஒரு (வலது) புறம் ஏற்கனவே திறக்கப்பட்டுவிட்டது. மறுபுறம் தற்போது பணி முடியும் தறுவாயில் உள்ளது. இதையும் செம்மொழி மாநாட்டுப் பட்டியலில் சேர்த்து செய்தி வாசிக்கிறார்கள்!
நெடுஞ்சாலையில் ஏற்கனவே இருந்த விளக்குத் தூண்களை அகற்றிவிட்டு புதிய தூண்கள் நடப்பட்டுள்ளன. இப்பணியும் கூட பல இடங்களில் இதுவரை முடியவில்லை. இன்றைய நிலவரப்படி, திருச்சி சாலையில், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர் பகுதிகளில் இன்னும் விளக்குத் தூண்கள் பொருத்தப்படவில்லை. அப்பகுதி இருண்டு கிடக்கிறது. அகற்றப்பட்ட விளக்குத் தூண்களின் கதியும் தெரியவில்லை.
செம்மொழி மாநாடு நடக்கும் கொடிசியா அரங்கம் உள்ள பகுதியிலிருந்து அவிநாசி ரோடு பளபளப்பாகி உள்ளது. அது மட்டும் தான் பாராட்டும் வகையில் உள்ளது.
அவசரக் கோலம்:
மின்கம்பிகள் அனைத்தும் புதைவடமாக புதைக்கப்பட்டது பாராட்டுக்குரியது. ஆனால், கடைசி ஒரு மாதத்தில் அவசர அவசரமாக செய்யப்பட்ட மின்கம்பி மாற்றப் பணி, பல இடங்களில் கம்பியைக் காட்டி இளிக்கிறது. மிகவும் அபாயமான மின்கம்பிகளை மண்ணுக்குள் புதைத்துக் கொண்டு செல்வதில் அலட்சியம் காட்டப்பட்டிருப்பது தெரிகிறது. பின்னாளில் ஏதும் ஆபத்து நிகழ்ந்தால், அதற்கு யார் பொறுப்பேற்பது?
பல இடங்களில் தார் ரோடுகளும் கூட அவசர கதியில் விரிவாக்கம் செய்யப்பட்டதைக் காண முடிந்தது. தார் ரோடு போடும் இடத்தை தோண்டி, செம்மண்ணால் கெட்டிப்படுத்தி அதன் மீது தார் ரோடு போடுவது தான் இதுவரை வழக்கம். சமீப காலமாக, சிமென்ட் கலவையால் கெட்டிப்படுத்தி அதன் மீது தார் ரோடு போடுகிறார்கள். அப்போது தான் மழைக்காலத்திலும் தார் ரோடு தாங்கும். ஆனால், பல இடங்களில், வெறும் மண் பரப்பின் மீதே தார் ஊற்றி அதன் மீது ரோடு அமைக்கப் பட்டுள்ளது. இப்பணியை கண்காணிக்க வேண்டிய அதிகாரிகளும், வேலை முடிந்தால் போதும் என்று காணாமல் இருக்கிறார்கள். இதன் விளைவை, பலமான மழை பெய்யும்போது தான் உணர முடியும்.
மறக்கப்பட்ட சின்னங்கள்
கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை துவங்கி நூறாண்டு கடந்து ஓராண்டு ஆகிவிட்டது. மிக நெரிசலான இடத்தில், சுகாதாரக் குறைபாடுகளுடன் இயங்கும் இம்மருத்துவமனை தரம் உயர்த்தப்படும்; அல்லது விசாலமான இடத்துக்கு இடம் மாற்றப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. செம்மொழி மாநாடு அறிவிக்கப்பட்ட போதே இதுகுறித்து அரசின் கவனத்துக்கு கொண்டுசெல்லப்பட்டது. ஆனால், வெளிப்புற அலங்காரங்களில் மூழ்கியிருந்த அரசு இதைக் கண்டுகொள்ளவில்லை. கடைசி நேரத்தில், அரசு மருத்துவமனை மேம்பாட்டுக்கு ரூ.50 கோடியை ஒதுக்கீடு செய்வதாக முதல்வர் கருணாநிதி அறிவித்திருக்கிறார்.
இது தான் கலைஞரின் சாமர்த்தியம். மாநாட்டு முழக்கங்களில் இனி, 'அரசு மருத்துவமனைக்கு நிதி ஒதுக்கிய நிதியே வாழி' என்ற பாடல் ஒலிக்கலாம். செம்மொழிப் பூங்கா கதை தான்.
கோவையின் முக்கிய சுற்றுலாத்தலங்கள் எதுவும் செம்மொழி மாநாட்டுக்காக மேம்படுத்தப்படவில்லை. பேரூர் பட்டீஸ்வரர் கோயில், அவிநாசி லிங்கேஸ்வரர் கோயில், திருமுருகன்பூண்டி முருகநாதர் கோயில் ஆகியவை தமிழுக்கு இறையம்சம் சேர்த்த திருத்தலங்கள். கோவை வரும் வெளிமாவட்ட மக்கள் கண்டிப்பாக செல்லும் இடங்கள் இவை. முதல்வருக்கு பிடிக்காவிட்டாலும் செம்மொழி மாநாட்டுக்கு வருபவர்கள் செல்லும் இடங்களை அவரால் தீர்மானிக்க இயலாது. தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்காக வரலாற்றுச் சின்னங்களை மூடி மறைக்க முடியாது. ஆனால், இக் கோயில்களில் எந்த மேம்பாட்டுப் பணியும் - மாநாட்டை முன்னிட்டு- செய்யப்படவில்லை.
கலைக் கூத்து:
செய்ய வேண்டிய பணிகளை விட்டுவிட்டு, கவர்ச்சிகரமான நிகழ்வுகளில் தான் தமிழக அரசு கவனம் செலுத்துகிறது. இதற்கு, 'பிறப்பொக்கும்' தோழமை ஓட்டம் என்ற பெயரில் மாவட்டம் தோறும் நடத்தப்படும் மாரத்தான் போட்டிகளே உதாரணம். தமிழ் மையம் (அருள்தந்தை ஜெகத் கஸ்பார் நடத்தும் அமைப்பு) நடத்துவதாக அறிவிக்கப்படும் இந்த மாரத்தான் ஓட்டங்கள் பெரும்பாலும் மாவட்ட ஆட்சியர் உத்தரவால் தான் நடத்தப்படுகின்றன. இதில் அர்த்தமின்றி ஓடுகிறார்கள் ஆயிரக் கணக்கான மாணவ மாணவிகள். இதனால் செம்மொழி எப்படி சிறப்படையும் என்பது தெரியவில்லை. ஆங்கிலவழிக் கல்வி பயிலும் மாணவர்களை தமிழுக்காக ஓடச் செய்தது தான் ஒரே பெருமை. அடுத்ததாக, செம்மொழிச் சுடர் ஏந்தி ஓடி வருகிறார்கள். இதுவும் கவர்ச்சிக்கு உதவும்; மொழிக்கு உதவுமா?
இப்போது மூன்று நாள் செம்மொழி கலைவிழா துவங்கி இருக்கிறது. சங்கமம் மூலமாக ஏற்கனவே தொடர்பில் உள்ள கலைஞர்களுக்கு இது நல்ல வாய்ப்பு. இது கனிமொழியின் உபாயம் என்பதால் உபயங்கள் அதிகமாகவே கிடைக்கின்றன. நாட்டுப்புறக் கலைகள் வாழும் என்பதால் இதை வரவேற்கலாம். தமிழில் பள்ளிக் கல்வியை பயிலுமாறு மக்களைத் தூண்ட முடியுமானால் இதற்கு முழுமையான வெற்றி கிட்டும்.
-இவ்வாறாக, கவர்ச்சிகரமான நிகழ்ச்சிகளுடன், ஆடம்பரமான அலங்காரங்களுடன் துவங்க உள்ளது, உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு. மாநாட்டு அரங்கின் முகப்பில் அமைக்கப்பட்டுள்ளது தோரண வாயில்.
ஒரு லட்சம் சவுக்குப் பூட்டுகள் கொண்டு, 300 தொழிலாளர்கள் மூன்று மாதம் உழைத்து அமைத்த பிரமாண்டமான பனையோலை நுழைவாயிலை அண்ணாந்து பார்த்தபடி வியக்கிறார்கள் கோவை மக்கள். அரசியல்வாதிகள் வேண்டுவது இது தானே?
வெறும் ஐந்து நாள் மாநாட்டுக்கு பல கோடி செலவில் தோரணவாயில் எதற்கு என்று கேள்வி கேட்கும் விழிப்புணர்வு இல்லாத மக்களுக்கு இத்தகைய கண்கட்டு வித்தைகள் தானே பரிசாகக் கிடைக்கும்?
.
சனாதனம் காத்த ராணியின் வரலாறு
-
இந்திய வரலாற்றில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் அரசாட்சி
புரிந்திருக்கின்றனர். இதற்கான அண்மைக்கால உதாரணம் தான், முன்னூறு
ஆண்டுகளுக்கு முன் பிறந்து, ஹோல்கர் ச...
3 weeks ago
No comments:
Post a Comment