Saturday, July 31, 2010

புதுக்கவிதை - 107



கிரிக்கெட் அகராதி - 3





கிரிக்கெட் மட்டை
வீரர் கையெழுத்துடன்
ஏலம் போவது;
மரங்களுக்காக மரத்தில் செய்வது.

கிரிக்கெட் கவசம்
விளையாட்டுக்கு அழகூட்டுவது;
வியாபாரத்துக்கு மெருகூட்டுவது;
ஏங்க வைத்து வாங்க வைப்பது.

கிரிக்கெட் சாதனை
தொடர்ந்து சொதப்பினாலும்
ஏதாவதொரு போட்டியில்
சோபித்துவிடுவது.

கிரிக்கெட் கோப்பை
போட்டிகளுக்கு இலக்கு;
அடிக்கடி கைமாறும்
உலோகப் பொருள்.

கிரிக்கெட் விதிகள்
தேவைக்கேற்ப அவ்வப்போது
மாற்றப்படும் மென்பொருள்;
ஆட்டத்தை வசீகரமாக்கும் இடுபொருள்.
.

Friday, July 30, 2010

புதுக்கவிதை - 106


கிரிக்கெட் அகராதி - 2





கிரிக்கெட் நடுவர்
விளையாட்டின் விதிகளை
நினைவுபடுத்தும்
சுவாரஸ்யமான ஆத்மா.

கிரிக்கெட் தகவல்
வீரர்களின் வாழ்க்கை;
ரசிகர்களை மூலதனமாக்கிய
கவர்ச்சியான வர்த்தகம்.

கிரிக்கெட் பந்து
சுரண்டவென்றே உருவாக்கிய
கோளவடிவ பொருள்;
சுரண்டலின் மூலப்பொருள்.

கிரிக்கெட் வர்ணனை
எப்படி பந்தை அடித்தாலும்
குதூகலமாய் விவரிப்பது;
வாயாடிகளின் தொழில்.

கிரிக்கெட் மைதானம்
புல்லுக்கு அலங்காரம்;
சுற்றிலும் விளம்பரம்;
சந்தையின் மையப்புள்ளி.

கிரிக்கெட் சீருடை
வர்த்தகம் வளர்க்கும்
இலட்சினைகளை சுமக்கும்
வண்ணங்களின் சங்கமம்.

Thursday, July 29, 2010

புதுக்கவிதை - 105



கிரிக்கெட் அகராதி...1





கிரிக்கெட் போட்டி
ஒவ்வொரு அணியிலும்
11 அதிர்ஷ்டசாலிகள் ஆடும் ஆட்டம்
11 ஆயிரம் கிறுக்கர்கள் பார்த்து ரசிப்பது.

கிரிக்கெட் ரசிகர்
வீரர்களின் வருமானம் தவிர
எல்லா விபரங்களும் அறிந்தவர்.
விசில் அடித்தே வீணானவர்.

கிரிக்கெட் வீரர்
அதிர்ஷ்டக்காற்று அடித்தால் 'ஆறு';
எதிரணிக்கு காற்றானால் 'வாத்து'
சொக்கவைக்கும் சொக்கட்டான்.

கிரிக்கெட் தேர்வுக்குழு
ஆதிக்கவாதிகளின் கோட்டை;
அரசியல் விளையாடும்
அற்புதமான மைதானம்.

கிரிக்கெட் சங்கம்
கிறுக்கர்கள் ரசிக்கும் வகையில்
சூதாட்டத்தை நேர்த்தியாக
நடத்தும் நிறுவனம்.

கிரிக்கெட் ஒளிபரப்பு
கோடிகளைக் கொட்டி
வாங்கிய அரங்கம்.
கோடிகளாகக் கொட்டும் சுரங்கம்.

கிரிக்கெட் செய்தி
வாசகரையும்
முட்டாளாக்கும்
புள்ளிவிபரப் பந்தல்.
.

Wednesday, July 28, 2010

சிந்தனைக்கு




கருவூலம்


வாழ்க அந்தணர் வானவ ரானினம்
வீழ்க தண்புனல் வேந்தனு மோங்குக
ஆழ்க தீயதெல் லாமர னாமமே
சூழ்க வையக முந்துயர் தீர்கவே!


-திருஞானசம்பந்தர்
(தேவாரம்- மூன்றாம் திருமுறை- திருப்பாசுரம்- 572 )

.


Tuesday, July 27, 2010

உருவக கவிதை - 54



வெறுமையின் அமைதி




சில நேரங்களில் வெறுமை கோலோச்சுகையில்
காகிதம் வெண்மையாகி விடுகிறது.
எழுத்துக்களற்ற வெற்றுக் காகிதங்களின் சத்தம்-
அமைதியற்ற மனதின் ஆழமான ஓலம்.

மதியவேளையில் ஈனசுரத்தில் கரையும் காகம் போல,
நடுநிசியில் எங்கோ ஊளையிடும் நாய் போல,
பனிக்கால அதிகாலையில் ஒலிக்கும் சேகண்டி போல,
மயானத்தில் புலம்பும் வெட்டியானின் பாடல் போல,
மனதைப் பிசையும் காகிதங்களின் கூக்குரல்.

வெறுமையும் அமைதியின்மையும்
தனக்குள் ஒளித்துள்ள கனலை,
வெடிக்கும்போது தான் உணர இயலும்.

காகிதங்களில் புதையும் எழுத்துக்களில்
இந்த கூக்குரலின் அடிநாதம் எதிரொலிக்கும்.
.

Monday, July 26, 2010

சிந்தனைக்கு



கருவூலம்




சொல் தொறுஉம் இற்றுஇதன் பெற்றி என்று அனைத்துஉம்
முற்ற மொழிகுறின் முடிவுஇல ஆதலின்
சொற்றவற்று இயல்ஆன் மற்றைய பிறஉம்
தெற்றுஎன உணர்தல் தெள்ளியோர் திறனே
பழையன கழிதலும் புதியன புகுதலும்
வழுஅல கால வகையின்ஆனே.

-பவணந்தி முனிவர்
நன்னூல் (461 -462)

.

Sunday, July 25, 2010

மரபுக் கவிதை -103



குரு வணக்கம்



அன்புடன் நிழல் தரும் அரியநல் தருவே!
அகந்தையை நீக்கி அருளிடும் கதிரே!
அஞ்ஞானம் போக்கும் அறிவுத் திருவே!
மெய்ஞானம் நல்கும் விஞ்ஞான விரிவே!
உத்திகள் மனதினில் உரைத்திடு கருவே!
புத்தி தெளிந்திட புகட்டிய மருந்தே!
கண்ணுக்குத் தெரியாத இறைவனின் உருவே!
கருணை பொழிந்திடும் கார்மேக வடிவே!
மனத்தினில் நின்று காத்திடும் குருவே
மாதவம் படைத்திட அருளிடுவாயே!

(இன்று குரு பூர்ணிமா)

.

Saturday, July 24, 2010

சிந்தனைக்கு




கருவூலம்



மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண்டுஞ்சார்
எவ்வெவர் தீமையு மேற்கொள்ளார் - செவ்வி
அருமையும் பாரா ரவமதிப்புங் கொள்ளார்
கருமமே கண்ணாயி னார்.


-குமரகுருபரர்
நீதிநெறி விளக்கம் (பாடல்:52)


.

Friday, July 23, 2010

புதுக்கவிதை - 104



தற்காலிகக் குடில்



நதியை தூய்மைப்படுத்த
ஆயிரம் கோடியில் திட்டம்.
கரையோரக் குடிசைகள்
உடனடியாக அகற்றம்.

அதே இடத்தில் அழகிய
படித்துறை, படகுத்துறை
அமைக்க வரைபடம் தயார்.
ஒப்பந்ததாரரும் ஏற்கனவே தயார்.


நதிக்குள் வந்துவிழும்
சாக்கடைக் கழிவுநீரை
தடுத்துவிட்டால் போதும்.
துவக்கிவிடலாம் திட்டம்.

அதுவரை -
வாங்கிய படகை வைக்க
கரையோரமே ஒரு குடில்
அமைத்தல் போயிற்று...
.

Thursday, July 22, 2010

சிந்தனைக்கு




கருவூலம்



...அற்சனை பாட்டேயாம் என்று ஆரூரர்க்கு ஆதியிலே
சொற்றமிழ் பாடுகஎனச் சொன்னமையால் - சொற்படியே
செய்தாய் நால்வேதம் திகைத்து ஒதுங்கப் பித்தன்என்று
வைதாய் நீ வைதாலும் வாழ்த்தாமே - மெய்தான்
இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
விருந்து அமிழ்தம் என்றாலும் வேண்டேன்
- வருந்தினன் மால்
வெல்லானை தின்ற விளங்கனி ஆனேன் விரகக்
கல் ஆனை தின்ற கரும்பானேன்...


-மதுரை சொக்கநாதர்
தமிழ்விடு தூது (வரிகள்: 147-159)


.

Wednesday, July 21, 2010

சிந்தனைக்கு


கருவூலம்





மெய்ப்பொருள் கண்டு விளங்கும் மெய்ஞ்ஞானிக்குக்
கற்பங்கள் ஏதுக்கடி - குதம்பாய்
கற்பங்கள் ஏதுக்கடி ?

முத்தமிழ் கற்று முயங்குமெய்ஞ் ஞானிக்குச்
சத்தங்கள் ஏதுக்கடி
- குதம்பாய்
சத்தங்கள் ஏதுக்கடி ?


காலனை வென்ற கருத்தறி வாளர்க்குக்
கோலங்கள் ஏதுக்கடி - குதம்பாய்
கோலங்கள் ஏதுக்கடி?
-குதம்பைச் சித்தர் (சித்தர் பாடல்கள்)
.

Tuesday, July 20, 2010

சிந்தனைக்கு



கருவூலம்



கண்ணகி அணிமணிக் காற்சிலம் புடைப்ப
மன்னவன் வாய்முதல் தெறித்தது மணியே, மணி கண்டு
தாழ்ந்த குடையன் தளர்ந்தசெங் கோலன்
பொன்செய் கொல்லன் தன்சொற் கேட்ட
யானோ அரசன் யானே கள்வன்

மன்பதை காக்குந் தென்புலங் காவல்
என்முதற் பிழைத்தது கெடுகவென் ஆயுளென

மன்னவன் மயங்கிவீழ்ந் தனனே தென்னவன்
கோப்பெருந் தேவி குலைந்தனள் நடுங்கிக்
கணவனை இழந்தோர்க்குக் காட்டுவ தில்லென்று
இணையடி தொழுதுவீழ்ந் தனளே மடமொழி...

-இளங்கோவடிகள்
(சிலப்பதிகாரம் - மதுரைக் காண்டம்- வழக்குரை காதை- பாடல் வரி: 71 -81 )
.

Monday, July 19, 2010

சிந்தனைக்கு



கருவூலம்



அப்பாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
ஆருயிர்கட் கெல்லாம்நான் அன்புசெயல் வேண்டும்
எப்பாரும் எப்பதமும் எங்கணும்நான் சென்றே
எந்தைநின தருட்புகழை இயம்பியிடல் வேண்டும்
செப்பாத மேனிலைமேல் சுத்தசிவ மார்க்கம்
திகழ்ந்தோங்க அருட்சோதி செலுத்தியிடல் வேண்டும்
தப்பேது நான்செயினும் நீபொறுத்தல் வேண்டும்
தலைவநினைப் பிரியாத நிலைமையும் வேண்டுவனே.

-வள்ளலார்
(திருவருட்பா- ஆறாம் திருமுறை- பாடல் 4079)


.

Sunday, July 18, 2010

மரபுக் கவிதை - 102




பேதம் வேண்டாம்!





பல மொழிகள் கற்றிட வேண்டும்- நமது
பாரத நாட்டினை அறிய
கலகம் மொழியினில் வேண்டா- நல்ல
காவிய ஒற்றுமை படைப்போம்!

வலிவுறு நாட்டினைப் படைக்க - மக்கள்
வாழ்க்கையில் ஒற்றுமை தேவை.
நலிவுறும் தேசத்தைக் காப்போம்- இந்த
நானிலம் வியந்திடச் செய்வோம்!
.
குறிப்பு: மொழிவாரி மாநிலப் பிரிவினையின் கொடுமையான பின்விளைவே, இன்றைய ஆந்திரா- மகாராஷ்டிரா மோதலுக்கு காரணம். மொழிப்பற்று, சுயநல அரசியல்வாதிகளின் ஆயுதமாகிவிடக் கூடாது. இதுவே எனது வேட்கை.
.

Saturday, July 17, 2010

புதுக்கவிதை - 103




அறிந்தும் அறியாமலும்...



மூத்த குடிமக்கள்
மகனும் மகளும் வெளிநாட்டில்.
அம்மாவும் அப்பாவும்
முதியோர் இல்லத்தில்...

ஏக்க குடிமக்கள்
காதலர்கள் கடற்கரையில்.
கூடலில் விளைந்த சிசு
குப்பைமேட்டில்...

ஊக்க குடிமக்கள்
அரசைத் தாங்கும் வேர்கள்.
அழுகிக் கிடக்கின்றன
மருத்துவமனையில்...
.

Friday, July 16, 2010

வசன கவிதை - 72




எழுதிப் பிழைப்பது...



ஏமாற்றுவது அரசியல்வாதியின் தொழில்
ஏமாறுவது குடிமகனின் தொழில்
எழுதிப் பிழைப்பது எனது தொழில்.

எந்தத் தொழிலுக்கும் நியாயம் வேண்டும்.
ஏமாறுபவர் தெரிந்தே ஏமாறுவது போல,
ஏமாற்றுபவர் தெரிந்தே ஏமாற்றுவது போல,
தெரிந்ததை மட்டும் எழுதுவது போதாது;
தெரியாததையும் எழுதுவதே என் நியாயம்.

நம்பி வாக்களிக்கும் மக்களுக்கு
நம்பிக்கை தருவது அநியாயம்.
தெரிந்ததை மட்டுமே எதிர்பார்க்கும் மக்களுக்கு
தெரியாததைக் காட்டுவது என் நியாயம்.

எப்படியும் ஒருநாள் புத்தி தெளியும்
என்பது எனது மூலதனம்.
அதுவரை நானும்-
யாரையும் யாரும்
ஏமாற்றாமல் ஏமாறாமல்
எழுதிப் பிழைப்பது எனது தொழில்.

Thursday, July 15, 2010

மரபுக் கவிதை - 101




கர்மவீரர் வழி நடப்போம்!




பள்ளி செல்லணும் பிள்ளைகளே!
நல்ல பாடம் படிக்கணும் பிள்ளைகளே!
துள்ளித் துள்ளி ஆடிடணும்! நீ
சுறுசுறுப்பாக இருந்திடணும்!

அம்மா, அப்பா மகிழ்ந்திடணும்! நீ
அனைவரும் போற்ற உயர்ந்திடணும்!
நம்மால் இயன்ற உதவிகளை நாம்
நலிந்தோருக்குச் செய்திடணும்!


மதிய உணவுத் திட்டத்தால் ஏழை
மாணவர் படிக்கச் செய்தவரை,
நதிகளில் அணைகள் அமைத்தவரை,
நன்றியுடன் நீ நினைத்திடணும்!

ஆட்சியில் இருந்த போதிலுமே -ஓர்
அகந்தை மனதில் அண்டாது,
காட்சி அளித்த தலைவர் அவர் - காம
ராஜர் சரிதம் மறக்காதே!

பதவிகள் தேடி வருகையிலும் - மனம்
பதறாது உழைத்த பேராளர்!
நிதமும் மக்கள் நலம் கருதி - தன்
குடும்பம் மறந்த தவசீலர்!

எளிமை வாழ்வு, உயர் உள்ளம்- சொல்
என்றும் மாறாப் பெருந்தன்மை,
தெளிந்த பார்வை, செயலூக்கத்தால்
தேசம் காத்த தலைவர் அவர்!

நாட்டுக்காக வாழ்ந்தவரை - நாம்
என்றும் மறக்கக் கூடாது!
வீட்டுக்காக படித்திடணும்! பின்
நாட்டை நாமும் காத்திடணும்!

மாணவப் பருவம் படிப்பதற்கே! கல்வி
வாழ்வில் உயர வழிகாட்டும்!
காமராஜரின் கருத்து இது- உன்
கல்வியும் நாட்டுக்கு வழிகாட்டும்!

குறிப்பு: இன்று கர்மவீரர் காமராஜரின் 108-வது பிறந்த நாள்.
.

Wednesday, July 14, 2010

புதுக்கவிதை - 102




ஏமாற்றும் விதம்...


திருப்பதியில் எங்கும்
மொட்டைத்தலைகள் போல,
மகப்பேறு மருத்துவமனையில்
கர்ப்பிணிப் பெண்கள்.
ஒவ்வொருவரும்
ஒவ்வொருவிதம்.

செம்மண்ணில்
கரையான் புற்றுப் போல,
நாடெங்கும் ஊழல்கள்.
எல்லாமே ஒரே விதம்!

.

.

சிந்தனைக்கு



கருவூலம்






சிற்றஞ் சிறுகாலே வந்துன்னைச் சேவித்து உன்
பொற்றாமரை அடியே போற்றும் பொருள்கேளாய்
பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்து நீ
குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது
இற்றைப் பறைகொள்வான் அன்று காண் கோவிந்தா!

எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு
உற்றோமே யாவோம் உனக்கேநாம் ஆட்செய்வோம்

மற்றைநம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்!



-ஆண்டாளின் திருப்பாவை -29.


.

Monday, July 12, 2010

சிந்தனைக்கு



கருவூலம்




பால்நினைந் தூட்டும் தாயினுஞ்சாலப்
பரிந்துநீ பாவியே னுடைய
ஊனினைஉருக்கி உள்ளொளி பெருக்கி
உலப்பிலா ஆனந்த மாய
தேனினைச் சொரிந்து புறம்புறந்திரிந்த
செல்வமே சிவபெருமானே
யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே!

-பிடித்த பத்து 9
(மாணிக்க வாசகரின் திருவாசகம்)
.

Sunday, July 11, 2010

சிந்தனைக்கு




கருவூலம்


யான்பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்
வான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின்
ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்
தான்பற்றப் பற்றத் தலைப்படுந் தானே

(முதல் தந்திரம்:4-13)

-திருமூலரின் திருமந்திரம்




.

Saturday, July 10, 2010

உருவக கவிதை - 53




எரிமலைகள் அணைவதில்லை




குண்டு மழைகளால்
எரிமலையின் சீற்றம்
அணைவதில்லை.

எரிமலையின் கொள்ளிவாய்
அமைதி காப்பது
அறியாமை இல்லை.

வெடிப்புக்கு காரணமாகும்
உள்அழுத்தத்தை
குண்டுமழை குறைப்பதில்லை.

வரலாறு புகட்டும்
பாடங்கள் என்றும்
வற்றுவதில்லை.

ஹிரண்யர்களும்
ராவணர்களும் என்றும்
பாடம் கற்பதில்லை.

அன்பு சாதிக்கும்
இடத்தில் அதிகாரம்
நுழைவதில்லை.

வெற்றி மமதையில்
மனிதர்களுக்கு
இவை புரிவதில்லை.
.

Friday, July 9, 2010

வசன கவிதை - 71




ஞானோதயம்





அவலம் பேரவலம் தான்.
இதை -
வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது.
கவிதைகளால் கண்டிக்க முடியாது.
மாநாடுகளால் மறைக்க முடியாது.

பேரவலம் என்பது நிகழ்வதல்ல-
நிகழ்வதைக் கண்டுகொண்டிருப்பது;
கண்டும் காணாமல் இருப்பது.
கண்மூடி முகம் திருப்புவது.
இதற்கு -
சலுகைகளால் சமாதி கட்ட முடியாது.

பேரவலம் தவிர்க்க முடியாததல்ல.
அதிகார பீடங்கள் உண்மையை மறுப்பது;
ஆணவக்காரர்கள் ஆர்வத்தில் விளைவது.
-இதனால்
அமைதியை நிலைநாட்ட முடியாது.

பேரவலங்கள்
மறைக்க முடியாதவை;
மறுக்க முடியாதவை;
மன்னிக்க முடியாதவை.
அலங்கார அறிவிப்புகளால்
மனப்புண்ணை ஆற்ற முடியாது.
உபதேசங்களால் யாரையும்
திருத்தவோ, திருந்தவோ செய்ய முடியாது.

இதனை -
எழுதுவதாலும் யாரும்
நிம்மதி பெற்றுவிட முடியாது...
.

Thursday, July 8, 2010

உருவக கவிதை - 52




வாழ்க்கைப் பந்து



அணிகளுக்குத் தான்
வெற்றி தோல்வி-
உதைபடும் பந்துக்கல்ல.

இலக்கில் சேர்வதும்
தடுக்கப்படுவதும்
பந்தின் தீர்மானத்திலில்லை.

விளையாட்டு சாதனம்
விளையாட இயலாது.
விளையாட்டல்ல வாழ்க்கை.


.

Wednesday, July 7, 2010

உருவக கவிதை - 51


பந்தின் வாழ்க்கை



மைதானத்தின் அனைத்து மூலைகளுக்கும்
உருண்டோடுகிறது பந்து.
எதிரெதிர் அணியினர் கால்களிடையே சிக்கி
அங்குமிங்கும் அலைபாய்கிறது பந்து.
காலால் உதைத்தாலும் தலையால் முட்டினாலும்
எம்பிப் பாய்கிறது காற்றடித்த பந்து.
உதைக்கும் கால்களுக்கு வெற்றியைத் தர
சுயவிருப்பம் இன்றிச் சீறுகிறது பந்து.
ஏதாவது ஒரு இலக்கை எட்டும்போது
அரங்கை அதிரவைக்கிறது பந்து.
விளையாட்டு முடியும் வரை
ஓய்வின்றி உருளுகிறது பந்து.
எல்லாம் ஒரு போட்டி நேரம் வரை.

பிறகு -
மாற்றப்படும் வேறு பந்து.
.

Tuesday, July 6, 2010

சிந்தனைக்கு



கருவூலம்


நாமார்க்கும் குடியல்லோம் நமனை யஞ்சோம்
நரகத்திலிடர்ப்படோம் நடலை யில்லோம்
ஏமாப்போம் பிணியறியோம் பணிவோ மல்லோம்
இன்பமே எந்நாளு ந்துன்ப மில்லை!

தாமார்க்குங் குடியல்லாத் தன்மை யான சங்கரன்நற்
சங்கவெண் குழையோர் காதிற் கோமற்கே
நாமென்றும் மீளா ஆளாய்க் கொய்ம் மலர்ச்சே
வடியிணையே குறுகி னோமே!
-திருநாவுக்கரசர்
(தேவாரம்)

.

Monday, July 5, 2010

மரபுக் கவிதை - 100


யாரது வெற்றி?

'நாளை மறியல், கடையடைப்புக்கள்
வேலைநிறுத்தம் ஆதரவளிப்பீர்'
எனச் சுவரொட்டி தெருவினில் அதிர-
ஜன நடமாட்ட சந்தடி குறைய...

ஆளுங்கட்சி அமைச்சர்கள் கூட்டம்
தோளை உயர்த்தி கர்ஜனை செய்ய,
அவசர நிலைமை அறிவிப்பாக,
அவதியில் மக்கள் வீட்டினில் சுருங்க...

விரைந்தது காவல் வீறாப்புடனே .
குரைத்தது தெருநாய், விளைந்தது சாவு.
சுவர் விளம்பரங்கள் சுக்குநூறாக
சவமாய் தெருநாய் சாட்சியைக் கிடக்க...

''எவனவன் இதனை இங்கே ஒட்டினன்?
அவங்களை உதைப்போம், அமைச்சர் மகிழ்வார்!
இழுத்து வாருங்கள், இடுப்பை உடைப்போம்!
கொழுப்பைக் குறைக்க கொண்டாருங்கள்!''

என்றார் தலைமை, ஏவினர் குழுவை.
சென்றார் திரும்பி, சேதியைச் சொல்ல.
இரவோடிரவாய் இவ்விஷயங்கள்
சரம் சரமாக சடுதியில் பரவ...

கொதிப்படைந்தார்கள் எதிர்க்கட்சியினர்;
மதியிழந்தார்கள் மக்களை மறந்து.
சாலைகள் எங்கும் தடைகள் நிறைய,
'காலிகள்' கையில் மறுநாட் பொழுது...

தெருவின் ஓரம் சாய்ந்து கிடந்த
இருபது பேர்கள் கைதிகளாக,
எவனோ ஒருவன் ஏமாந்தவனாய்
சிவனே என்று திண்ணையில் தூங்க...

காலைக் கதிரோன் பயத்துடன் தோன்ற,
சாலையின் ஓரம் நாய்ச் சவத்தொடு
எவனோ ஒருவன் இறந்து கிடக்க,
அவனொரு கட்சி ஆளாய் இருக்க...

போக்குவரத்து பொய்யாய்ப் போக,
ஏக்கத்துடனே கடைகள் அடைய,
எங்கோ ரகளை ஆரம்பமாக,
இங்கே குடிசைகள் தீயினில் சூழ..

எதிரெதிரினிலே கட்சிகள் நிற்க,
சுதியாய் எவனோ சிறுகல் வீச-
எல்லாம் முடிந்து போனதன் பின்னால்
வல்லமைக் காவல் வந்தது அங்கே...

சாலையில் குருதிச் சக்தி மிளிர,
காலில் வெட்டு, கையில் குத்து;
மருத்துவம் செய்ய வழியில்லாமல்
இருவர் சாவு, எங்கோ அழுகை!

உடனடியாக காவல் குவிய,
கடைகள் மெதுவாய்த் திறந்திட வைக்க,
சாலைத் தடைகள் அப்புறப்படுத்தி
மாலைக்குள்ளே சீரமைப்பாக்க

காயமடைந்தோர் காவலில் இருக்க,
நாயும் பிணமும் ஒன்றாய் எரிய,
போக்குவரத்து புலப்படலாக,
தேககம் நீங்கித் தெளிவு பிறக்க...

''எம்முடை பலத்தின் நன்மைகள் கண்டீர்,
நம்முடை பலமே நாட்டின் பலமாம்!''
என்றார் அமைச்சர் பெருமிதத்தோடு-
வென்றோம் பந்த்தை, நன்றாய் என்க...

''இல்லை, இல்லை! எதிர்க்கட்சியினர்
வல்லமை கண்டு நடுங்கிய தரசு!
நம்முடை ஒருமை பந்த்தே வெற்றி!
நம்பிடுவீரே'' என்றது எதிர்ப்பு.

யாரது வெற்றி? யாரது தோல்வி?
யாருடை நலத்தால் யார்க்கெது லாபம்?
யாரிதை நினைப்பர்? யாரிதை மறுப்பர்?
யார் பதில் சொல்வார்? யாரவர் யாரோ?

பச்சிளம் குழந்தை பாலில்லாமல்
அச்சம் மிளிர்ந்திட அன்னையைக் காண,
தினப்படி இல்லா வயிறும் பாழாய்
வினைப்படி என்றே விதிர்த்திட அழுக...

விரசாய்ப் போன விளையாட்டாக,
அரசியல் போட்டி ஆபத்தாக...
யாரது வெற்றி? யாரது தோல்வி?
யார் பதில் சொல்வார்? யாரவர் யாரோ?
.
எழுதிய நாள்: 29.11.1991.
குறிப்பு: அன்றும் பந்த் நடந்தது; இன்றும் நடக்கிறது.
.

Sunday, July 4, 2010

சிந்தனைக்கு


விவேக அமுதம்



அமெரிக்க சகோதரிகளே, சகோதரர்களே!

இன்பமும் இதமும் கனிந்த உங்கள் வரவேற்புக்கு மறுமொழி கூற இப்போது உங்கள் முன் நிற்கிறேன். என் இதயத்தில் மகிழ்ச்சி பொங்குகிறது. அதனை வெளியிட வார்த்தைகள் இல்லை. உலகத்தின் மிகப் பழமை வாய்ந்த துறவியர் பரம்பரையின் பெயரால் உங்களுக்கு நன்றி கூறுகிறேன். அனைத்து மதங்களின அன்னையின் பெயரால் நன்றி கூறுகிறேன். பல்வேறு இனங்களையும் பிரிவுகளையும் சார்ந்த கோடிக்கணக்கான இந்துப் பெருமக்களின் பெயரால் நன்றி கூறுகிறேன்.

இந்த மேடையில் அமர்ந்துள்ள பேச்சாளர்களுள் சிலர் கீழ்த்திசை நாடுகளிலிருந்து வந்துள்ள பிரதிநிதிகளைப் பற்றிக் குறிப்பிடும்போது, 'வேற்று சமய நெறிகளை வெறுக்காத பண்பினைப் பல நாடுகளுக்கு எடுத்துச் சென்ற பெருமை, தொலைவிலுள்ள நாடுகளிலிருந்து வந்துள்ள இவர்களைத்தான் சாரும்' என்று உங்களுக்குக் கூறினார்கள். அவர்களுக்கும் என் நன்றி.

பிற சமயக் கொள்கைகளை வெறுக்காமல் மதித்தல், அவற்றை எதிர்ப்பு இன்றி ஏற்றுக் கொள்ளுதல், ஆகிய இரு பண்புகளை உலகத்திற்குப் புகட்டிய மதத்தைச் சார்ந்தவன் நான் என்பதில் பெருமை அடைகிறேன். எதையும் வெறுக்காமல் மதிக்க வேண்டும் என்னும் கொள்கையை நாங்கள் நம்புவதோடு, எல்லா மதங்களும் உண்மை என்று ஒப்புக் கொள்ளவும் செய்கிறோம்.

உலகிலுள்ள அனைத்து நாடுகளாலும் அனைத்து மதங்களாலும் கொடுமைப் படுத்தப்பட்டவர்களுக்கும், நாட்டை விட்டு விரட்டி அடிக்கப் பட்டவர்களுக்கும் புகலிடம் அளித்த நாட்டைச் சேர்ந்தவன் நான் என்பதில் பெருமைப் படுகிறேன். ரோமானியரின் கொடுமையால், தங்கள் திருக்கோயில் சிதைந்து சீரழிந்த அதே வருடம் தென்னிந்தியாவிற்கு வந்து எங்களிடம் தஞ்சமடைந்த அந்தக் கலப்பற்ற இஸ்ரேல் மரபினர்களுள் எஞ்சி நின்றவர்களை மனமாரத் தழுவித் கொண்டவர்கள் நாங்கள் என்று கூறிக் கொள்வதில் பெருமைப் படுகிறேன். பெருமைமிக்க சொராஸ்டிரிய மதத்தினரில் எஞ்சியிருந்தோருக்கு அடைக்கலம் அளித்து, இன்னும் பேணிக் காத்து வருகின்ற சமயத்தைச் சார்ந்தவன் என்பதில் பெருமை கொள்கிறேன்.

என் அருமைச் சகோதரர்களே! பிள்ளைப் பருவத்திலிருந்தே நான் பாடிப் பயின்று வருவதும், கோடிக்கணக்கான மக்களால் நாள் தோறும் இன்றும் தொடர்ந்து ஓதப்பட்டு வருவதுமான பாடலின் ஒரு சில வரிகளை இங்கு, உங்கள் முன் குறிப்பிட விரும்புகிறேன்:

எங்கெங்கோ தோன்றுகின்ற ஓடையெல்லாம்
இறுதியிலே கடலில் சென்று
சங்கமாம் பான்மையினைப் போன்றுலகோர்
பின்பற்றும் தன்மை யாலே
துங்கமிகு நெறி பலவாய் நேராயும்
வளைவாயும் தோன்றி னாலும்
அங்கு அவைதாம் எம்பெரும! ஈற்றில் உனை
அடைகின்ற ஆறே யன்றோ!

இதுவரை நடந்துள்ள மாநாடுகளில், மிக மிகச் சிறந்ததாகக் கருதக் கூடிய இந்தப் பேரவை, கீதையில் உபதேசிக்கப் பட்டுள்ள பின்வரும் அற்புதமான ஓர் உண்மையை உலகத்திற்குப் பிரகடனம் செய்துள்ளது என்பதைக் குறிப்பிட விரும்புகிறேன்: 'யார் எந்த வழியாக என்னிடம் வர முயன்றாலும், நான் அவர்களை அடைகிறேன். ஒவ்வொருவரும் ஒவ்வொரு வழிகளில் என்னை அடைய முயல்கிறார்கள். அவை எல்லாம் இறுதியில் என்னையே அடைகின்றன.'

பிரிவினைவாதம், அளவுக்கு மீறிய மதப்பற்று, இவற்றால் உண்டான மதவெறி, இவை இந்த அழகிய உலகை நெடுநாளாக இறுகப் பற்றியுள்ளன. அவை இந்த பூமியை நிரப்பியுள்ளன. உலகை ரத்த வெள்ளத்தில் மீண்டும் மீண்டும் மூழ்கடித்து, நாகரீகத்தை அழித்து, எத்தனையோ நாடுகளை நிலைகுலையச் செய்துவிட்டன. அந்தக் கொடிய அரக்கத்தனமான செயல்கள் இல்லாதிருந்தால் மனித சமுதாயம் இன்றிருப்பதை விடப் பலமடங்கு உயர்நிலை எய்தியிருக்கும்!

அவற்றிற்கு அழிவு காலம் வந்து விட்டது. இன்று (செப்டம்பர் 11, 1893 ) காலையில் இந்தப் பேரவையின் (சிகாகோ) ஆரம்பத்தைக் குறிப்பிட முழங்கிய மணி, மதவெறிகளுக்கும், வாளாலும் பேனாவாலும் நடைபெறுகின்ற கொடுமைகளுக்கும், ஒரே குறிக்கோளை அடைய பல்வேறு வழிகளில் சென்று கொண்டிருக்கும் மக்களிடையே நிலவும் இரக்கமற்ற உணர்ச்சிகளுக்கும் சாவு மணியாகும் என்று நான் திடமாக நம்புகிறேன்....

- சிகாகோ உலக சமயப் பேரவையில் வரவேற்புக்கு மறுமொழியாக சுவாமி விவேகானந்தர் பேசியது.

குறிப்பு: இன்று சுவாமி விவேகானந்தரின் 108 -வது நினைவு தினம்.


.

Saturday, July 3, 2010

படக் கவிதை - 03


விடுதலை

இன்னும் சிறிதுநாள் தான்
இந்தத் தொல்லை.
பிறகு நிரந்தர விடுதலை.
விழி பிதுங்கி,
நுரை தள்ளி,
பட்டினி உடம்பில்
சாட்டையடி வாங்கி,
கண்டவனுக்கும் உழைக்கும்
கஷ்ட காலம்
விரைவில் விடைபெறும்.
அடிமாடாக மாறிவிட்டால்
காளைமாட்டுத் துயரம்
காணாமல் போய்விடாதா?

.

Friday, July 2, 2010

சிந்தனைக்கு



குறள் அமுதம்




உறங்குவது போலும் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு
-திருவள்ளுவர்
(நிலையாமை -339)


.

Thursday, July 1, 2010

புதுக்கவிதை - 101




பகல் நனவு






முன் எப்போதோ
குடியிருந்த வீடு
இருந்த இடத்தில்
கட்டாந்தரையும்
கள்ளிச் செடிகளும்.

முன் எப்போதோ
பணியாற்றிய ஆலை
இருந்த இடத்தில்
வெற்று மைதானமும்
வேலி முற்களும்.

முன் எப்போதோ
குளித்த ஆறு
இருந்த இடத்தில
மணற்பள்ளங்களும்
சாக்கடைச் சேறும்.

பகல் கனவு
பலிக்காது தான்.
பகலில் காணும் நனவு?
.