Monday, July 5, 2010

மரபுக் கவிதை - 100


யாரது வெற்றி?

'நாளை மறியல், கடையடைப்புக்கள்
வேலைநிறுத்தம் ஆதரவளிப்பீர்'
எனச் சுவரொட்டி தெருவினில் அதிர-
ஜன நடமாட்ட சந்தடி குறைய...

ஆளுங்கட்சி அமைச்சர்கள் கூட்டம்
தோளை உயர்த்தி கர்ஜனை செய்ய,
அவசர நிலைமை அறிவிப்பாக,
அவதியில் மக்கள் வீட்டினில் சுருங்க...

விரைந்தது காவல் வீறாப்புடனே .
குரைத்தது தெருநாய், விளைந்தது சாவு.
சுவர் விளம்பரங்கள் சுக்குநூறாக
சவமாய் தெருநாய் சாட்சியைக் கிடக்க...

''எவனவன் இதனை இங்கே ஒட்டினன்?
அவங்களை உதைப்போம், அமைச்சர் மகிழ்வார்!
இழுத்து வாருங்கள், இடுப்பை உடைப்போம்!
கொழுப்பைக் குறைக்க கொண்டாருங்கள்!''

என்றார் தலைமை, ஏவினர் குழுவை.
சென்றார் திரும்பி, சேதியைச் சொல்ல.
இரவோடிரவாய் இவ்விஷயங்கள்
சரம் சரமாக சடுதியில் பரவ...

கொதிப்படைந்தார்கள் எதிர்க்கட்சியினர்;
மதியிழந்தார்கள் மக்களை மறந்து.
சாலைகள் எங்கும் தடைகள் நிறைய,
'காலிகள்' கையில் மறுநாட் பொழுது...

தெருவின் ஓரம் சாய்ந்து கிடந்த
இருபது பேர்கள் கைதிகளாக,
எவனோ ஒருவன் ஏமாந்தவனாய்
சிவனே என்று திண்ணையில் தூங்க...

காலைக் கதிரோன் பயத்துடன் தோன்ற,
சாலையின் ஓரம் நாய்ச் சவத்தொடு
எவனோ ஒருவன் இறந்து கிடக்க,
அவனொரு கட்சி ஆளாய் இருக்க...

போக்குவரத்து பொய்யாய்ப் போக,
ஏக்கத்துடனே கடைகள் அடைய,
எங்கோ ரகளை ஆரம்பமாக,
இங்கே குடிசைகள் தீயினில் சூழ..

எதிரெதிரினிலே கட்சிகள் நிற்க,
சுதியாய் எவனோ சிறுகல் வீச-
எல்லாம் முடிந்து போனதன் பின்னால்
வல்லமைக் காவல் வந்தது அங்கே...

சாலையில் குருதிச் சக்தி மிளிர,
காலில் வெட்டு, கையில் குத்து;
மருத்துவம் செய்ய வழியில்லாமல்
இருவர் சாவு, எங்கோ அழுகை!

உடனடியாக காவல் குவிய,
கடைகள் மெதுவாய்த் திறந்திட வைக்க,
சாலைத் தடைகள் அப்புறப்படுத்தி
மாலைக்குள்ளே சீரமைப்பாக்க

காயமடைந்தோர் காவலில் இருக்க,
நாயும் பிணமும் ஒன்றாய் எரிய,
போக்குவரத்து புலப்படலாக,
தேககம் நீங்கித் தெளிவு பிறக்க...

''எம்முடை பலத்தின் நன்மைகள் கண்டீர்,
நம்முடை பலமே நாட்டின் பலமாம்!''
என்றார் அமைச்சர் பெருமிதத்தோடு-
வென்றோம் பந்த்தை, நன்றாய் என்க...

''இல்லை, இல்லை! எதிர்க்கட்சியினர்
வல்லமை கண்டு நடுங்கிய தரசு!
நம்முடை ஒருமை பந்த்தே வெற்றி!
நம்பிடுவீரே'' என்றது எதிர்ப்பு.

யாரது வெற்றி? யாரது தோல்வி?
யாருடை நலத்தால் யார்க்கெது லாபம்?
யாரிதை நினைப்பர்? யாரிதை மறுப்பர்?
யார் பதில் சொல்வார்? யாரவர் யாரோ?

பச்சிளம் குழந்தை பாலில்லாமல்
அச்சம் மிளிர்ந்திட அன்னையைக் காண,
தினப்படி இல்லா வயிறும் பாழாய்
வினைப்படி என்றே விதிர்த்திட அழுக...

விரசாய்ப் போன விளையாட்டாக,
அரசியல் போட்டி ஆபத்தாக...
யாரது வெற்றி? யாரது தோல்வி?
யார் பதில் சொல்வார்? யாரவர் யாரோ?
.
எழுதிய நாள்: 29.11.1991.
குறிப்பு: அன்றும் பந்த் நடந்தது; இன்றும் நடக்கிறது.
.

No comments:

Post a Comment