
கர்மவீரர் வழி நடப்போம்!
பள்ளி செல்லணும் பிள்ளைகளே!
நல்ல பாடம் படிக்கணும் பிள்ளைகளே!
துள்ளித் துள்ளி ஆடிடணும்! நீ
சுறுசுறுப்பாக இருந்திடணும்!
அம்மா, அப்பா மகிழ்ந்திடணும்! நீ
அனைவரும் போற்ற உயர்ந்திடணும்!
நம்மால் இயன்ற உதவிகளை நாம்
நலிந்தோருக்குச் செய்திடணும்!
மதிய உணவுத் திட்டத்தால் ஏழை
மாணவர் படிக்கச் செய்தவரை,
நதிகளில் அணைகள் அமைத்தவரை,
நன்றியுடன் நீ நினைத்திடணும்!
ஆட்சியில் இருந்த போதிலுமே -ஓர்
அகந்தை மனதில் அண்டாது,
காட்சி அளித்த தலைவர் அவர் - காம
ராஜர் சரிதம் மறக்காதே!
பதவிகள் தேடி வருகையிலும் - மனம்
பதறாது உழைத்த பேராளர்!
நிதமும் மக்கள் நலம் கருதி - தன்
குடும்பம் மறந்த தவசீலர்!
எளிமை வாழ்வு, உயர் உள்ளம்- சொல்
என்றும் மாறாப் பெருந்தன்மை,
தெளிந்த பார்வை, செயலூக்கத்தால்
தேசம் காத்த தலைவர் அவர்!
நாட்டுக்காக வாழ்ந்தவரை - நாம்
என்றும் மறக்கக் கூடாது!
வீட்டுக்காக படித்திடணும்! பின்
நாட்டை நாமும் காத்திடணும்!
மாணவப் பருவம் படிப்பதற்கே! கல்வி
வாழ்வில் உயர வழிகாட்டும்!
காமராஜரின் கருத்து இது- உன்
கல்வியும் நாட்டுக்கு வழிகாட்டும்!
குறிப்பு: இன்று கர்மவீரர் காமராஜரின் 108-வது பிறந்த நாள்.
No comments:
Post a Comment