Friday, July 16, 2010

வசன கவிதை - 72




எழுதிப் பிழைப்பது...



ஏமாற்றுவது அரசியல்வாதியின் தொழில்
ஏமாறுவது குடிமகனின் தொழில்
எழுதிப் பிழைப்பது எனது தொழில்.

எந்தத் தொழிலுக்கும் நியாயம் வேண்டும்.
ஏமாறுபவர் தெரிந்தே ஏமாறுவது போல,
ஏமாற்றுபவர் தெரிந்தே ஏமாற்றுவது போல,
தெரிந்ததை மட்டும் எழுதுவது போதாது;
தெரியாததையும் எழுதுவதே என் நியாயம்.

நம்பி வாக்களிக்கும் மக்களுக்கு
நம்பிக்கை தருவது அநியாயம்.
தெரிந்ததை மட்டுமே எதிர்பார்க்கும் மக்களுக்கு
தெரியாததைக் காட்டுவது என் நியாயம்.

எப்படியும் ஒருநாள் புத்தி தெளியும்
என்பது எனது மூலதனம்.
அதுவரை நானும்-
யாரையும் யாரும்
ஏமாற்றாமல் ஏமாறாமல்
எழுதிப் பிழைப்பது எனது தொழில்.

No comments:

Post a Comment