Monday, October 26, 2009

மரபுக் கவிதை - 39



சூரியப் பரம்பரை


குணத்தில் ஆரியன்! குருத்தில் வீரியன்!
நானே உலகின் ஞானச் சூரியன்!
(குணத்தில்)
சங்கப் பலகையில் தமிழ் தர அமர்ந்த
இறையனார் எந்தன் எள்ளுப் பாட்டனார்!
குறிஞ்சித் திணையின் குலத்தைக் காக்கும்
குன்றக் குமரன் கொள்ளுப் பாட்டனார்!
நெற்றிக் கண்ணால் எரிப்பினும் அஞ்சா
நக்கீரரும் என் நற்குடிப் பாட்டனார்!
'யாது ஊரே யாவரும் உறவினர்'
என்ற கணியனும் எந்தன் பாட்டனார்!
(குணத்தில்)
வாலறிவன் தாள் வணங்கிடச் சொன்ன
வள்ளுவர் எந்தன் வழிவழிப் பாட்டனார்!
அரசியல் பிழைத்தோர்க் கறமே கூற்றென
வரைந்த இளங்கோ வம்சப் பாட்டனார்
சூளையில் சுடினும் ஈசனை மேவிய
நாவுக்கரசர்என் நற்குடிப் பாட்டனார்!
'வன்மை இல்லையோர் வறுமை இன்மையால்'
என்ற கம்பரும் எந்தன் பாட்டனார்!
(குணத்தில்)
கற்பின் கனலால் மதுரையை எரித்த
கண்ணகி தேவியார் எம்குலப் பாட்டியார்!
அரும்புகளுக்கோர் நல்வழி கூறிய
ஆத்தி சூடி ஔவைஎன் பாட்டியார்!
பாவை பாடியே கண்ணனை ஆண்டவள்
சேவை செய்தவள் எம்குலப் பாட்டியார்!
அமுதசுரபியால் அன்னம் இட்டவள்
அன்பின் மேகலை எந்தன் பாட்டியார்!
(குணத்தில்)
பாரதப் போரில் படைகளுக் குணவை
படைத்த பாண்டியன் பரம்பரைப் பாட்டனார்!
பெரிய கோயிலைத் தஞ்சையில் நிறுவிய
ராசராசன் என் பெரிய பாட்டனார்!
யானையில் ஏறி இமயம் ஏகிய
சேரன் பெருமாள் செழுங்கிளைப் பாட்டனார்!
கல்லில் சிற்பக் காவியம் படைத்த
பல்லவ மன்னன் எந்தன் பாட்டனார்!
(குணத்தில்)
பாலுக்கழுத சேய்க்கமுதூட்டிய
பார்வதி தேவியும் எம்குலப் பாட்டியார்!
உலகெலாம் உணர்ந்தோதக் கவிகளை
தந்த சேக்கிழார் தந்தையின் பாட்டனார்!
காரையில் தலையால் காலென நடந்து
கயிலை சேர்ந்தவள் எம்குலப் பாட்டியார்!
உள்ளம் உருக்கும் வாசக மணிகளை
அள்ளித் தந்தவர் எந்தன் பாட்டனார்!
(குணத்தில்)
வாடிய பயிரைக் கண்டதும் வாடிய
வள்ளலார் எந்தன் வம்சத் தந்தையார்!
தேடித்தேடி நூல்களைப் பதித்த
சாமிநாதன்என் பெரிய தந்தையார்!
நானிலம் பயனுற வல்லமை வேண்டிய
நாயகர் பாரதி நாமத் தந்தையார்!
இந்து மதத்தின் அர்த்தம் கூறிய
கண்ண தாசன்என் சிறிய தந்தையார்!
(குணத்தில்)
சங்கப் பாடல்கள் பாடிய அனைவரும்
எம்குலத் தந்தையர்! எம்குலத் தந்தையர்!
பொங்கும் தமிழால் திருமுறை பாடிய
பெரியோர் அனைவரும் எம்குலத் தந்தையர்!
அரங்கன் அடிப்பொடி ஆழ்வார் அனைவரும்
எம்குலத் தந்தையர்! எம்குலத் தந்தையர்!
உறங்கும் தமிழின் உள்ளே கனலாய்
உயிராய் ஒளிர்பவர் எம்குலத் தந்தையர்!
(குணத்தில்)
அகத்திய மாமுனி ஆசி பெற்றவன்!
தொல்காப்பியரின் சூத்திரம் ஆனவன்!
நானே நற்றமிழ்! நாவின் சொற்றமிழ்!
நானிலம் விரும்பும் நாதத் தீந்தமிழ்!
(குணத்தில்)
அறத்தில் மாரியன்! மறத்தில் வீரியன்!
புறத்திலும் அகத்திலும் நானே சூரியன்!
குணத்தில் ஆரியன்! குருத்தில் வீரியன்!
நானே உலகின் ஞானச் சூரியன்!
நன்றி: விஜயபாரதம் - தீபாவளி மலர் - 2004

No comments:

Post a Comment