Wednesday, October 7, 2009

உருவக கவிதை - 8


தெய்வீகமே தமிழகம்

சிவனே தலைமை வகித்த
சிந்தனைக்களம்.

ஆதிபகவன் முதலென்ற
வள்ளுவரின் புலம்.

ஒளவைக்கு கனி தந்த
குமரனின் குன்றம்.

ஒன்றே குலமென்ற
திருமூலர் திருத்தலம்.

வானுயர்ந்த கோயில்களின்
வனப்பான இல்லம்.

ஊழ்வினை உறுத்துமென்ற
இளங்கோவின் ராஜ்யம்.

ராமனின் கதை சொன்ன
கம்பனின் கழனி.

வீரத்துடன் பக்தி விளைத்த
மூவேந்தர் தேசம்.

கரசேவையின் முன்னோடி
அப்பரின் பூமி.

கண்ணனைக் கரம் பிடித்த
ஆண்டாளின் வீடு.

இறைவனுக்குத் தோழரான
சுந்தரரின் சொர்க்கம்.

ஆண்டவனை மயங்கவைத்த
ஆழ்வார்கள் நிலம்.

ஞானப்பால் குடித்த
சம்பந்தரின் குளம்.

திருவாசகம் அருளிய
மணிவாசகரின் மண்.

திருக்குலம் அமைத்துச் சென்ற
உடையவரின் உறைவிடம்.

பாரதத்தின் மகுடமான
பண்பாட்டின் இருப்பிடம்.

புத்தியைத் தெளியச் செய்த
சித்தர்கள் காடு.

அடியார்க்கும் அடியாரான
சேக்கிழார் நாடு.

வாடிய பயிரைக் கண்டதும் வாடிய
வள்ளலாரின் வயல்.

மக்களை ஒன்றிணைக்கும்
விழாக்களின் பொழில்.

தேசமே தெய்வமென்ற
பாரதியின் தோப்பு.

ஆன்மீக அருளாளர்
தவத்துக்கு காப்பு.

தேன் தமிழில் இனிக்கும்
பாசுரத்தின் அமிழ்தகம்.

தென்றலாய் மணம் கமழும்
தெய்வீகமே தமிழகம்.

No comments:

Post a Comment