Monday, October 5, 2009

உருவக கவிதை - 6


பயணம் தொடர்கிறது

அந்த ஒற்றையடிப்பாதை
மிகவும் அழகானது.
கரும்பச்சை அடர்ந்த
காரிருள் வனத்தில்
மலைப்பாம்பு போல
நெளிந்து நெளிந்து செல்லும்
அதன் நேர்த்தி
இயல்பானது.

அந்த ஒற்றையடிப்பாதை
மிகவும் அழகானது.

மின்மினிப் பூச்சியின்
ஒளிச்சுடர் போல
அதோ தெரியும் சுடரொளி நோக்கி
மூதாதையரின்
பாதங்களை ஒற்றி
பயணம் தொடர்கிறது.

மிதந்து செல்லும் பறவைகளுக்கோ
தாவிச் செல்லும் குரங்கினத்துக்கோ
பாய்ந்து செல்லும் வேங்கைகளுக்கோ
குதித்தோடும் மான்களுக்கோ
பதுங்கிச் செல்லும் நரிகளுக்கோ
ஊர்ந்து செல்லும் பாம்புகளுக்கோ

ஒற்றையடிப்பாதை பற்றிய
கவலை இல்லை.
அவை இயல்பானவை.

மனிதனின் ஆறறிவு
வழிந்தோடும் நதி போல
புதுவழி காண முயலும்.

அதில் உருவாகும்
ஒற்றையடிப்பாதையில்
ஒளிச்சுடரை நோக்கி
தொடர்கிறது
பயணம்.
நன்றி: விஜயபாரதம்
(10.01.2003)

No comments:

Post a Comment