பின்தொடர்பவர்கள்

Monday, October 5, 2009

புதுக்கவிதை - 20தேர்தல் அகராதி - 1

* தேர்தல்:
தேறுதல் தருவதாய்
ஆறுதல் தருவது
மாறுதல் வருமென
மயங்க வைப்பது.

* தொகுதி:
ஐந்தாண்டுக்கு முன்
வந்துபோன பகுதி
கடந்துபோக முடியாத
கந்தல்சாலைகள்
இங்கு மிகுதி.

* தொண்டர்கள்:
ஏதோ ஒரு ஏக்கத்தில்
கோஷமிடுபவர்கள்.
எதிரணியுடன் மோதி
மண்டை உடைபவர்கள்.
தாலியை விற்று
போஸ்டர் ஓட்டுபவர்கள்.

* கட்சிகள்:
'மூதாதையர்' போல
தாவப் பயன்படுபவை.
வியாபாரத்துக்கு உதவும்
விளம்பர மேடை.

* கூட்டணி:
கொள்ளையடிக்கச்
செல்லும் வழியில்
கொள்கையை விளக்கும்
திசைகாட்டி.
கொள்ளைக்குப் பின்
ஆள்காட்டி.

* கொள்கைகள்:
பிரசாரத்தில்
முழங்க வேண்டியவை
வேலை முடிந்த பின்
முழுங்க வேண்டியவை.
தேர்தல அறிக்கையில்
எழுத வேண்டியவை.

* ஜாதி:
வேட்பாளர் தேவுக்கு
அடிப்படை அலகு.
மோதவிட்டு குளிர்காய
அற்புத விறகு.

* மதம்:
சாராமல் இருப்பதாக
கதைத்தபடியே
மறக்காமல் இருப்பது.
சலுகைகள் வழங்கி
சண்டை மூட்ட
உதவும் பதம்.

* வேட்பாளர்:
ஊர்ப்பணத்தில்
ஜெயித்தால்
புத்திசாலி.
கைப்பணத்தில்
தோற்றால்
ஒட்டாண்டி.
(தொடர்ச்சி நாளை)
நன்றி: தினமலர் (கோவை, சென்னை)
முதல் மூன்று கவிதைகளும் தினமலர் தேர்தல களம் பகுதியில் வெளியாயின. (மார்ச் 2009)

No comments:

Post a Comment