பின்தொடர்பவர்கள்

Monday, October 12, 2009

வசன கவிதை - 14


வைகறைக்கு வரவேற்பு

நேற்றைய துக்கங்கள்
நம் அனுபவங்கள்;
இன்றைய வாழ்க்கை
வெறும் குழப்பங்கள்;
நாளைய வைகறை தான்
நம்பிக்கைகள்.

வீண்பேச்சு போதும்
விரைவாக வாருங்கள்!
புலர்ந்து கொண்டிருக்கும்
நம்பிக்கை வைகறையை
கட்டித் தழுவி
காதலுடன் வரவேற்போம்!
விரைவாக வாருங்கள்!
விழிப்புடனே வாருங்கள்!

சாதனைகள், வேதனைகள்,
சச்சரவு, சஞ்சலங்கள்,
அதனையும் சரித்திரங்கள்!
அவையே நம் அனுபவங்கள்!
அனுபவங்கள் விளக்கானால்,
நம்பிக்கை திரியானால்,
நம் வாழ்க்கை சுடரானால்,
நானிலமே உயர்வு பெறும்!
விரைவாக வாருங்கள்!
விழிப்புடனே வாருங்கள்!


பாதையிலே மைல் கல்லாய்
பயணத்திலே சத்திரமாய்,
வைகறைகள் வருகிறது -
நம்பிக்கை சுடர்கிறது!
புத்தாண்டு பிறக்கிறது -
புன்னகைகள் பொலிகிறது!
புன்மைகளை அழித்திடவே
புத்திளமை மலர்கிறது!
விரைவாக வாருங்கள்!
விழிப்புடனே வாருங்கள்!


வைகறைக்கு வரவேற்பு
நம் வாழ்க்கையிலே
புதுத் தெம்பு!
No comments:

Post a Comment