கடலையின் கதி
மண்மணம் மாறாத
பச்சைக்கடலை
பாலாக இனிக்கும்
அதிகம் தின்றால்
வயிறு வலிக்கும்.
இட்டிலிப்பானையில்
அப்படியே மூடிவைத்து
அம்மா வேகவைத்தால்
தனிச்சுவை.
வெந்த கடலையை
உரிக்கும்போது
பிசுபிசுவென சாறு வழியும்.
தோல் உரித்து
தள்ளுவண்டியில் வைத்து
தட்டில் குவித்து
வேகவைத்து விற்கும்போது
ஆவி பறந்து
அருகில் அழைக்கும்.
இரவுப் பயணிகளின்
கைகளுக்கும் இதமாகும்.
எண்ணெய் பிழிய
களத்தில் காயும்
நிலக்கடலையை
மெல்லும்போதே
எண்ணெய் வரும்.
விதைக்கடலையாக
வாங்கி வறுத்தால்
வாசத்தில் நாவூறும்.
பஸ் நிலையம் முன்பு
மணலில் வறுபடும்
உப்பு கலந்த வறுகடலை
உருப்படியான நேரம்கடத்தி.
வறுத்து, போட்டு நீக்கி
'பாலித்தீன்' உறையில் அடைத்த
வீரிய ரக நிலக்கடலை
பார்த்தாலே வாங்கத் தூண்டும்.
தோலுரித்து
எண்ணெயில் பொரித்தெடுத்து
மிளகாய்ப்பொடி தூவினால்
சப்புக் கொட்டும் நாக்கு.
பச்சைக்கடலையை
மசாலா தடவி
பொரித்தெடுத்தால்
விசேஷ சுவை-
விலையும் கூடும்.
சிந்தித்துப் பார்த்தால்...
அத்வைதம்,
விசிஷ்டாத்வைதம்,
துவைதம்,
எல்லாத் தத்துவங்களும்
கடலையில் இருக்கிறது.
ஆனால்-
பொழுதைப் போக்கும்
விடலைகளை
'கடலை போடுவதாக'
சொல்லி விடுகிறார்கள்
சுலபமாக.
வேகவைத்த
வேர்க்கடலையை
தாளித்து விற்கும்
சுண்டல் பையனுக்கு
கடற்கரை கதி.
கடலைக்கு?
நாம் தானே கதி?
நன்றி: விஜயபாரதம்
(27.10.2006)
No comments:
Post a Comment