Saturday, October 10, 2009

மரபுக் கவிதை- 29


பட்டாசு வெடிப்போம் வாருங்கள்!

பட்டாசு வெடிப்போம் வாருங்கள் - தீய
பயங்கரவாதம் ஒழியட்டும்!
மத்தாப்பு கொளுத்திட வாருங்கள் - உலகில்
மகிழ்ச்சியே எங்கும் நிறையட்டும்! (பட்டாசு)

இல்லம் தோறும் தீப ஒளி
இருளை விரட்டி ஓட்டட்டும்!
உள்ளம் தோறும் இறையருளின்
உயர்வுத்தன்மை ஓங்கட்டும்! (பட்டாசு)

மதத்தின் பெயரால் போர் புரியும்
மடையர்கள் உள்ளம் திருந்தட்டும்!
நிதமும் கலகம் செய்கின்ற
நீசர்கள் மனமும் திருந்தட்டும்! (பட்டாசு)

புத்தாடைகளைப் புனைந்திடுவோம்!
புன்சிரிப்போடு வலம் வருவோம்!
தித்திக்கின்ற இனிப்புகளை
திசைகள் தோறும் பகிர்ந்திடுவோம்! (பட்டாசு)

வேற்றுமை பரப்பும் அரசியலும்
வேதனை ஊட்டும் பிரிவினையும்
ஊற்றெனக் கிளம்பும் உட்பகையும்
உருத் தெரியாமல் ஒழியட்டும்! (பட்டாசு)

சாதிப் பிரிவுகள் மறையட்டும்!
சமத்துவம் எங்கும் ஓங்கட்டும்!
சாதித்திடுவோர் பெருகட்டும்!
சத்தியம் உலகில் நிலைக்கட்டும்! (பட்டாசு)

வாழ்த்துகள் கூறி மகிழ்ந்திடுவோம்!
வாணவேடிக்கை நடத்திடுவோம்!
ஆழ்த்தும் இன்பக் கடலினிலே
அனைவரும் ஒன்றாய் நீந்திடுவோம்! (பட்டாசு)
நன்றி: தினமலர் (சேலம்)
(24.10.2001)

No comments:

Post a Comment