Sunday, October 11, 2009

வசன கவிதை - 13


அபஸ்வரம்


பஞ்சாயத்து மேடையில்
கம்பீரமாக வீற்றிருக்கிறது
அரச மரம்.
அதன் நிழலில்
படுத்துக் கிடக்கும் முதியவர்கள்.
கூடவே வேப்பமரம்.
கீழே
வேப்பம் பழங்களைப் பொறுக்கும்
குழந்தைகள்.


தூரத்தில் தெரிகிறது
ஆலயத்தின் கோபுரம்.
பக்தர்களை வரவேற்கும்
உச்சிக்கால பூசை
மணியோசை.
அந்த மத்தியான வேளையிலும்
சில்லென்ற காற்று.
சாலையோரத்தில் தண்ணீர்ப் பந்தல்,
ஒரு சுமை தாங்கி.


'ம்மா' என அழைக்கும்
மாடுகளின் பிளிறல்,
காகங்களின் கூட்டுக் கரைதல்
காய்கறி விற்றுப்போகும்
முனியம்மா.
தலையில் தண்ணீர்க்குடம் சுமக்கும்
88 வயது தாயம்மா.
ஆள் மீது உரசிக்கொண்டு போகும்
கோயிலுக்கு விடப்பட்ட
சாமிஆட்டின் ஒய்யார நடை.

வழிப்போக்கர்கள் இளைப்பாறும்
சிறு உணவு விடுதி.
விடுதியில் விருந்தாக
புளியோதரை,
இளநீர், நீர்மோர்.
நாக்கைத் தொங்கவிட்டுக் கொண்டு
நாய் இளைப்பாற,
சாலையில் ஒருக்களித்துப்
படுத்திருக்கும்
கழுதை.

வளையல்காரனும்
ஜவுளிக்காரனும்
கூவிக்கொண்டே வர,
வெற்றிலைக்காரி
வியாபாரம் முடிந்து
போய்க்கொண்டிருக்கிறாள்.
சிறுமிகளின்
பண்ணான்கல் ஆரவாரம்.
சிறுவர்களின் சடுகுடு சத்தம்
அருகிலுள்ள நிழலில்.

ஊரின் ஓரத்தில்
நூலிழையாய் ஓடும் நதி.
அதில் குதித்து கும்மாளமிடும் வாலிபர்கள்.
துணி துவைக்கும் பெண்கள்.
நீரில் அளையும் எருமை.
பறந்துபோகும்
கொக்கின் அலகில் மீன்.
கரையில் நடனமிடும்
மயில்.

இந்த அற்புத வேளையில்...
எங்கோ ஒரு ஊளை,
மனதிற்கு நெருடலாக
மசமசவென ஒரு சத்தம்.
பட்டப்பகலில் இது என்ன?

சட்டென விழிப்பு வருகிறது.
திடுக்கிட்டு எழுகிறேன் -
பகல்கனவு.
கிள்ளிப் பார்க்கிறேன்
கனவு தானா இது?
சாட்சியாக
டி.வி.யில் கேபிள் சினிமா.
டேபிளில்
கொறித்துக் கொண்டிருந்த
சிப்சும் நூடுல்சும்.
கூடவே கோலா பாட்டிலும்.

மேலே சுழலும் மின்விசிறியில் மட்டும்
'கரக் கரக்' என்ற சத்தம்
ஏனோ
அபஸ்வரமாய்க் கேட்கிறது.
நன்றி: விஜயபாரதம்
(தீபாவளிமலர் -1996 )

No comments:

Post a Comment