உறம்பறைச் சங்கிலி
நாட்ராய முதலியாருக்கு
ஆறு பிள்ளைகள்,
நாலு பெண்டுகள்.
நிமிர்ந்து நடந்தாரானால்
கைகட்டி நிற்கும் தெரு.
ரெண்டாவது பிள்ளை
ரத்னவேல் முதலியார்
எனக்கு தாத்தா.
தொண்ணூற்றாறு வயதில்
ஏதோ ஒரு ஏகாதசி நாளில்
நாட்ராய முதலியார்
நாள் கணக்கை முடித்தபோது,
நெய்ப்பந்தம் பிடித்தவர்கள்
ஐம்பத்திரண்டு பேர்.
அப்போது நான்
அம்மாவின் கருவறையில்.
தாத்தாவின் மச்சுவீடு முழுவதும்
எள்ளுப் போல
இறைந்து கிடந்தார்களாம்
சொந்தக்காரர்கள்-
சாமியாராய்ப் போன
சாமிநாத சித்தப்பா
மாய்ந்து மாய்ந்து சொல்லுவார்.
ரத்தினவேல் முதலியாருக்கு
என் அப்பா
இரண்டாவது பிள்ளை.
மூத்தவர் ராமநாத பெரியப்பா
மிலிட்டரியில் ஹவில்தாராகி
சீனப்போரில் காணாமல் போக,
திருச்சி அத்தையும் மதுரை அத்தையும்
ஓடி வந்து வைத்த ஒப்பாரி பார்த்து
ஊரே கூடி திண்ணையில் அழுதது.
ரத்தினத் தாத்தா
சொர்க்க ரதம் ஏறிய போது
மாமன், மச்சான், சம்பந்தி என்று,
அம்மாபட்டியே அல்லோகலப்பட்டது.
திருச்சி அத்தை கல்யாணத்தில்
நான்கு நாள் போட்ட விருந்தை
தூக்கிச் சாப்பிட்டது
தாத்தாவின் பயணம்.
அக்கா தங்கச்சியோடு
என்னையும் சேர்த்து
அம்மா அப்பாவுக்கு
மூணு குழந்தைகள்.
அளவான குடும்பப் பிரசாரம்
அப்போதுதான்
துவங்கியிருந்தது.
சும்மா சொல்லக் கூடாது -
முப்பது ரூபாய் மாசச் சம்பளத்தில்
மூணு பேரையும் படிக்கவைத்து,
சேலத்துக்கு அக்காவையும்
தங்கச்சியை தர்மபுரிக்கும்
கட்டிக் கொடுத்தார் அப்பா.
வாழ்க்கைப் படகில்
நானும் ஏறினேன்.
அரைக்காசு வேலையானாலும்
அரசாங்க வேலை.
ஆசைக்கு ஒண்ணு,
ஆஸ்திக்கு ஒண்ணு.
மறு பேச்சில்லாத மனையாள்,
அரசியல் பேசும் அப்பா,
பேரனைக் கொஞ்சும் அம்மா.
காலம் என்னமாய் ஓடிவிட்டது!...
கடவுளருளால்
ஈரோட்டில் பேத்தி வீட்டில்
கால்நீட்டி அமர்ந்தபடி
வெற்றிலை இடிக்கிறாள் அம்மா.
காலை படித்த பேப்பரை
மறுபடி படிக்கும் அப்பாவின்
மூக்குக் கண்ணாடியைப் பிடுங்குகிறான்
கொள்ளுப் பேரன் கோபி.
ஓடி விளையாட
கூட ஒரு பாப்பா
இருக்கலாம் தான்.
ஆபீஸ் சென்று திரும்பும் அலுப்பில்
மகனுக்கும் மருமகளுக்கும்
ஏது நேரம் ரசனைக்கு?
ஒன்று பெற்றால் ஒளிமயமாம்.
இவனிடம் விவாதம் புரிய
எனக்கு ஏது தெம்பு?
இருந்தாலும்
இதயத்தின் ஓரத்தில்
நெருஞ்சிமுள் உறுத்துகிறது...
நாட்ராய முதலியாரின்
பரம்பரைச் சங்கிலி
கோபியின் துருதுருப்பில்
குடியிருப்பது வாஸ்தவம் தான்.
ஆனால்-
தாத்தாக்களின்
உறம்பறைச் சங்கிலி?
கோபியின் தனிமை
துடிதுடிக்கிறது.
நன்றி: விஜயபாரதம்
(பொங்கல் மலர்- 2002 )
3 comments:
kavithai eluthumbothukooda mudaliyar jambathathai vida mudiyilaiya?
முதலியார் ஜம்பம் --- க்கு கேடு
ithu jambam alla. muthaliar 'kadaisiar'ana kathai.
Post a Comment