Monday, October 12, 2009

மரபுக் கவிதை - 30



எப்போது உயரும்?

மதுக்கடைகள் எப்போது ஒழியும்? இந்த
மனிதரின் மாண்புகள் அப்போது உயரும்! (மது)

சதுப்பான நிலத்திலே சிக்கி - அந்தச்
சகதியில் ஆவியை விடுவது போலே,
மெது மெதுவாகவே அழிக்கும்- மது
மனிதரின் உடலையும் குடலையும் அரிக்கும்! (மது)

உழைப்புக்குக் கிட்டிய கூலி - கையில்
உறுத்திடும், அரித்திடும், குடிகாரனுக்கு!
அழைத்திடின் யமன் தவிர்ப்பானோ - மது
அருந்திடு மனிதரின் குடும்பம் நிர்மூலம்! (மது)

வெட்கமும் மானமும் கெட்டு- அரை
வேட்டி அவிழ்ந்திட வேலையும் போகும்!
சட்டியில் சோறிருக்காது - தாலி
கட்டிய மனைவி தன் தாய் வீடு தன்னில்! (மது)

உறவினர், நண்பர்கள் எல்லாம் -அவன்
எதிரினில் வந்திடின் காணாது போவர்!
சிறந்த நற்குணமுடன் புகழும் - ஓடிச்
சிதறிட, சந்தியில் தறிகெட்டு நிற்பான்! (மது)

மதுக்கடைகள் ஒழிந்திடுவது என்று? இந்த
உலகிலே மனிதரின் மாண்புகள் எப்போது உயரும்?

No comments:

Post a Comment