பின் தொடர்பவர்களுக்கு நன்றி!
இணையதள வசதி உலகை சுருக்கிவிட்டது. கருத்துப் பரவல்களை இணையம் எளிதாக்கிவிட்டது. இதன் பயனை தமிழ் உலகம் நன்கு அனுபவித்து வருகிறது. இணையத்தில் தனித் தளங்களாகவும், வலைப் பூக்களாகவும், எண்ணற்ற சிந்தனை அலைகள் வட்டமிடுகின்றன. இதில் எனது பங்கு என்ன?
உலகத்தோடு ஒட்ட ஒழுகல் - பல கற்றும்
கல்லார் அறிவி லாதார்.
(குறள்-140)
என்பது தெய்வப் புலவரின் வாக்கு. இதைக் கருத்தில் கொண்டு இணையதளம் அமைக்க திட்டமிட்டு, நண்பர்களிடம் ஆலோசித்தபோது முதலில் வலைப்பூக்களை (பிளாகர்ஸ்) துவக்கி அனுபவம் பெறுங்கள்' என அறிவுறுத்தினர். அதன் விளைவே ''குழலும் யாழும்'' வலைப்பூ.
சரியாக, ஆவணி மாதம், 16இம் நாள், (Sep. 1, 2009), வளர்பிறை, திதியும், திருவோணம் நட்சத்திரமும் கூடிய சுப தினத்தில், செவ்வாய் இரவு துவங்கிய பணி மறுநாள் காலை நிறைவு பெற்றது. செப். 2 துவங்கி செப். 30 வரை, 59 கவிதைகள் ''குழலும் யாழும்'' வலைப்பூவில் பதிவு செய்யப்பட்டன. மரபுக் கவிதை, புதுக்கவிதை, உருவக கவிதை, வசன கவிதை, மொழிமாற்றக் கவிதை பல வகைகளில் இக்கவிதைகள் வழங்கப்பட்டன.
எனது இந்த பிளாக் குறித்து நண்பர்களுக்கு குறுஞ்செய்திகளை மொபைல் போனில் அனுப்பினேன். இதைப் பார்த்து பலர் பாராட்டி ஊக்குவித்தனர்; அவர்களுக்கு என் நன்றி. தொடர்ந்து எனது வலைப்பூவை பின்தொடரும் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. இதனை மேலும் மேம்படுத்த உங்கள் ஆலோசனைகளை அள்ளி வழங்குங்கள்!
கவிதை என்றால் அதை ஒருகட்டுக்குள் அடக்க முடியாது. அகமும் புறமும் சேர்ந்தது தான் இலக்கியம். அதே சமயம் எனது பிரத்யேகமான தேசம் குறித்த கவிதைகளுடன் மாறுபட்ட அக கவிதைகளை சேர்க்க முடியாது. இதை எனது நண்பர்கள் அறிவுரை வாயிலாக உணர்ந்தேன். சிற்பி எனக்காக, ஒரு பாவையின் முதல் பார்வை ஆகிய கவிதைகள் நன்றாக இருந்தாலும், ''குழலும் யாழும்'' பிளாகில் வர வேண்டுமா என்று நண்பர்கள் சிலர் கேட்டார்கள். அதையடுத்து, 'மலரும் வண்டும்' (அக) பிளாக் தனியே உதயமானது. அதையும் பரிசீலித்து, எனக்கு ஆலோசனை வழங்குங்கள்.
நவீன வசதிகள் அளிக்கும் இந்த வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்த, அனைவரின் ஒத்துழைப்பு தேவை. தனிமரம் தோப்பாகாது. எனது கவிதை மழை புதிய தோப்புக்களை உருவாக்கட்டும். தோப்புக்கள் புதிய மழைக்கு அச்சாரம் இடட்டும் என இறைவனை வேண்டுகிறேன்!
-வ.மு.முரளி.
2009 அக்டோபர் 01
No comments:
Post a Comment