கடை விரிப்பேன்
கடையினை விரித்தேன் கொள்வாரில்லை,
கவிதை மழையைப் பொழிந்தேன்;
விடைகளை நாடித் தவித்திடுகின்றேன்,
வினாக்களால் தான் வாழ்ந்தேன்!
அடைமழை பொழியும், அற்புதம் நிகழும்,
அமோகமாய்ப் பயிர் விளையும்;
தடைகளனைத்தும் தவிடென மாறும்
தருணம் ஒருநாள் வாய்க்கும்!
நடைபயில் குழவி நகைக்கிறபோதில்
நானிலம் மயங்குதல் போல,
குடையதன் பயனை மழையினில் அறிவீர்;
குவலயம் என்னை அறியும்!
இடையிடை யிடையே வந்தெனை மாய்க்கும்
இன்னல்களை நான் சாய்ப்பேன்;
மடையினை உடைத்த வெள்ளம் போல
மகாசக்தியாய் எழுவேன்!
முடையென வருவோர் உள்ளம் மகிழும்,
முகமலர் தானம் பெற்றால்;
கொடையதன் பெருமை கொண்டவிடத்து;
கோவென உயர்வேன் ஒருநாள்!
உடையினில் உடலென, உடலில் உயிரை
உணர்ந்தேன்- உறுவது வாழ்க்கை;
கடை விரிப்பேன், காண்போர் வரினும்
கடமை இதுவெனக் களிப்பேன்!
படையினில் வெற்றி, தோல்விகள் உண்டு,
பயந்தால் பலனெதும் இல்லை;
கடைசியில் பெறுவது காயோ, பழமோ,
கவனம் சிதறிட மாட்டேன்!
கடையினை விரித்தேன் கொள்வாரில்லை;
கவிதை மழையினைப் பொழிந்தேன்;
கடை விரிப்பேன் - காண்போர் வரினும்
கடமை இதுவெனக் காப்பேன்!
எழுதிய நாள்: 23.12.1995
.
No comments:
Post a Comment