நம்மை நாம் அறிவோம்!
அண்மையில் நடந்த உலக சரித்திர நிகழ்வுகளில் எகிப்து மக்களின் புரட்சி முக்கியத்துவம் வாய்ந்தது. 20 ஆண்டுகாலம் ஆட்சி நடத்திய எகிப்து அதிபர் முபாரக், மக்கள் நடத்திய தொடர் போராட்டத்துக்குப் பணிந்து பிப். 11-ல் பதவி விலகினார்.
அதன் எதிரொலி டுனீசியா, லிபியா, அல்ஜீரியா, ஜோர்டான் போன்ற ஆப்பிரிக்க நாடுகளிலும், ஏமன், ஒமான் போன்ற அரபு நாடுகளிலும் கேட்டுக் கொண்டிருக்கிறது. சர்வாதிகாரமும் ஊழலும் பெருகியுள்ள வேறு பல நாடுகளிலும் எகிப்து அமைதிப் புரட்சியின் செல்வாக்கு பரவத் தொடங்கியுள்ளது.
இதன் தாக்கம் இந்திய அரசியல்வாதிகளின் பேச்சிலும் வெளிப்படுகிறது. பலரும், எகிப்துபோல தங்கள் பகுதியில் மாற்றம் வரும் என்று ஆரூடம் கூறத் தொடங்கியுள்ளனர்.
எகிப்து அதிபர்போல விரைவில் மாயாவதி தூக்கி எறியப்படுவார் என்று கூறியிருக்கிறார் உ.பி. முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவ். ஏற்கெனவே முலாயமைத் தூக்கி எறிந்த மக்கள் யாரைப் பார்த்து அவ்வாறு செய்தார்களாம்?
எகிப்தைப்போலவே காஷ்மீரில் மக்கள் எழுச்சி இயக்கம் நடப்பதாக மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் மெகபூபா குறிப்பிட்டிருக்கிறார். பிரிவினைவாத இயக்கத் தலைவர் கிலானியும்கூட, காஷ்மீரில் நடப்பது எகிப்து மக்களின் போராட்டம் போன்றதுதான் என்று
கூறியிருக்கிறார். எகிப்துக்குள் மக்கள் புரட்சி வெடிக்க எந்த அண்டைநாடும் தூண்டுகோலாக இருக்கவில்லை என்பது இவர்கள் இருவருமே சொல்லாதது.
அகில இந்திய இடதுசாரித் தலைவர் ஒருவரும் எகிப்து மக்களை முன்னோடிகளாகக் கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்திருக்கிறார். செஞ்சீனாவின் தியானென்மன் சதுக்கத்தில் ஜனநாயகத்தை மீட்கப் போராடி பலியான மாணவர்களை அவர் வசதியாக மறந்துவிட்டார்.
பிரதான எதிர்க்கட்சியான பாஜக.வின் செய்தித் தொடர்பாளர் ஒருவர், எகிப்து புரட்சியிலிருந்து மத்திய அரசு பாடம் கற்க வேண்டும் என்று உபதேசித்திருக்கிறார். எகிப்தில் அரசு சொத்துகளைக் கபளீகரம் செய்த முபாரக்போலவே கர்நாடகா மாநிலத்தில் தங்கள் கட்சியைச் சார்ந்த முதல்வர் செயல்பட்டதை அவர் நினைவில் கொள்ளாதது "செலக்டிவ் அம்னீஷியா'வாக இருக்கக்கூடும்.
தமிழக மேடைகளிலும்கூட எகிப்து முக்கிய உதாரணப் பொருளாகியிருக்கிறது. அமெரிக்காவில் ஒபாமா அதிபரானதையே தமிழக அரசியல் மேடைகளில் நெக்குருக முழங்கியவர்கள், எகிப்து விஷயத்தை விடுவார்களா? முபாரக்கையும் தமிழக முதல்வரையும் இணையாக ஒப்பிடும் காட்சிகளுக்குக் குறைவில்லை. .
இவர்களுக்குப் போட்டியாக ஆளும் தரப்பினரும், அதே முபாரக்கின் அடக்குமுறை ஆட்சியை முன்னாள் முதல்வருடன் ஒப்பிட்டு தமிழக அரசியலை கேலிக்கூத்தாக்குகின்றனர். இரு தரப்பினருமே சொல்ல மறந்த விஷயம், ஹோஸ்னி முபாரக்குக்கு தமிழக அரசியல்வாதிகள்போல அந்தர்பல்டி அடிக்கத் தெரியவில்லை என்பது. ...
அரசியல்வாதிகள் போதாதென்று திரைத்தாரகைகளும் எகிப்தைப் 'பார்க்க' ஆரம்பித்திருப்பது புல்லரிக்கச் செய்கிறது. எகிப்தில் புரட்சியால் மக்கள் மாற்றம் கண்டதுபோல மாணவ சமுதாயம் நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தத் தயாராக வேண்டும் என்று கல்லூரி விழா ஒன்றில் பேசியிருக்கிறார் இயக்குநர் பாரதிராஜா....
இலங்கைப் பிரச்னையை ஊர்தோறும் முழங்குபவரும், மீனவர்கள் நலனுக்காக திடீரென களத்தில் குதித்திருப்பவரும்கூட, உலக அரசியலுடன் தமிழக அரசியலை ஒப்பிட்டுத் தங்கள் ஞானத்தை வெளிப்படுத்துகிறார்கள். இதுவரை ஜாதி அரசியல் பேசியவர்களையும் உலகளாவிய பார்வையுடன் பேசச் செய்திருக்கிறது எகிப்து. அந்நாட்டு மக்களுக்கு நன்றி....
உண்மையில் எகிப்து மக்களின் அரசியல் புரட்சிக்கு அடிப்படைக் காரணம், அது கடும் வன்முறைகள் இன்றி அமைந்திருந்ததுதான். நூறு ஆண்டுகளுக்கு முன், எகிப்து இடம்பெற்றுள்ள அதே ஆப்பிரிக்கக் கண்டத்தின் தென்கோடியில் தென்ஆப்பிரிக்காவில் இந்தியர் ஒருவர் நிகழ்த்திக்காட்டிய போராட்ட முறை அது. அதே வழிமுறையால்தான் இந்தியாவும் விடுதலை பெற்றது. பல நாடுகளின் தளைகளை அறுக்க உத்வேகம் அளித்த அதே அஹிம்சை முறை, இன்று எகிப்தில் மீண்டும் வென்றிருக்கிறது; மக்களின் சத்திய ஆவேசம் வென்றிருக்கிறது.
கொடுங்கோலாட்சி நடத்திய முபாரக்கின் அதிகாரத்துக்கு இணங்க மறுத்து, சர்வாதிகார அரசுக்கு ஒத்துழைக்க மறுத்து, ராணுவ பலத்துக்கு அஞ்சாமல் நெஞ்சு நிமிர்த்திp, எகிப்தில் ஆண்களும் பெண்களும் 18 நாள்கள் தொடர் போராட்டம் நடத்தியது வீர வரலாறு; சந்தேகமில்லை. இதற்கான கருவை அவர்கள் பெற்றது மகாத்மா காந்தியின் அஹிம்சை வழிமுறைகளிலிருந்துதான்.
நமது சரக்கையே எகிப்து புதுப்பித்திருக்கிறது. அது புரியாமல், நமது கருவூலத்தை அறியாமல், நாம் யாரைப் பின்தொடர்கிறோம்? எப்போது நம்மை நாமே பார்க்கப் போகிறோம்?
நன்றி: தினமணி (05.03.2011)
தலையங்கப் பக்க துணைக்கட்டுரை
No comments:
Post a Comment