பின்தொடர்பவர்கள்

Friday, March 25, 2011

எண்ணங்கள்


திருப்பூர் திருப்பம் நிகழ்த்துமா?

திருப்பூர் தொழில்துறையின் பிரச்னைகளுக்கு தீர்வு காணாத அரசைக் கண்டித்து, திருப்பூர்- வடக்கு, தெற்கு தொகுதிகளில் தலா ஆயிரம் வேட்பாளர்கள் சுயேச்சையாகப் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டிருப்பது அரசியல் கட்சியினருக்கு பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

திருப்பூர் தொழில் பாதுகாப்புக் குழுவின் இந்த அதிரடி முயற்சி சாத்தியமாகுமா என்ற கேள்விக்கு வேட்புமனு தாக்கல் முடியும்போது தான் பதில் கிடைக்கும். அதேசமயம், இந்த நூதனப் போராட்டம், இப்போதே அரசியல் வட்டாரத்தில் தேவையான தாக்கத்தை ஏற்படுத்தத் துவங்கிவிட்டது.

பொதுவாக, ஜனநாயக நாட்டில் தேர்தல் புறக்கணிப்பு என்பது அங்கீகரிக்கப்பட்ட முறையாகவே இருந்துவருகிறது. மக்களின் நீண்டநாள் பிரச்னைகளை அரசாங்கங்கள் கண்டுகொள்ளாதபோது, தேர்தலில் யாருக்கும் வாக்களிக்க மாட்டோம் என்று மக்கள் அறிவிப்பதும், அவர்களை அரசியல் கட்சிகள் சமாதானப்படுத்துவதும் நடைமுறை.
.
ஆனால், தேர்தல் புறக்கணிப்பையே 1996ல் புதிய வடிவத்திற்கு மாற்றியது ஈரோடு மாவட்டத்திலுள்ள மொடக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதி.
.
விவசாயிகளின் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதில் அரசியல் கட்சிகள் ஆர்வம் காட்டுவதில்லை என்ற குற்றச்சாட்டுடன் விவசாயிகள் சங்கம் களமிறங்கியதால், 1,033 வேட்பாளர்கள் போட்டியில் குதித்தனர். அதன் விளையாக, மொடக்குறிச்சி தொகுதிக்கு மட்டும் பேரவைத் தேர்தல் தனியே நடத்தப்பட வேண்டியதாயிற்று.

அப்போதைய தேர்தல் ஆணையர் டிஎன்.சேஷன் இந்த நூதனப் போராட்டத்தை சவாலாக ஏற்று, 120 பக்கங்களுடன் கூடிய வாக்குச்சீட்டுகளுடன் தேர்தலை நடத்திக் காட்டினார். எனினும், விவசாயிகளின் பிரச்னைகள் குறித்து நாடு முழுவதும் கவனத்தைக் கவர்ந்ததாக இத்தேர்தல் இருந்தது எனில் மிகையில்லை.

தேர்தலை முற்றிலுமாகப் புறக்கணிப்பதும், தேர்தலில் அதிகபட்ச வேட்பாளர்கள் போட்டியிடுவதும், நமது தேர்தல் நடைமுறைகளைக் கேள்விக்குள்ளாக்குகின்றன. இவை மக்களின் அதிருப்தியை வெளிக்காட்டும் சின்னங்களே. திருப்பூரில் ஆயிரக் கணக்கான வேட்பாளர்கள் தேர்தல் களம் காண்பதையும், அவர்களது ஜனநாயகப் போராட்டத்தின் ஒரு பகுதியாகவே கருத வேண்டும்.

திருப்பூர் நகரம், குறுகிய காலத்தில் பிரமாண்டமாக வளர்ந்த தொழில் நகரம். பின்னலாடை உற்பத்தி- ஏற்றுமதி மூலமாக உலக வர்த்தக வரைபடத்தில் இடம்பெற்றுள்ள திருப்பூர், தொழில்முனைவோரின் சுயமுயற்சியால்தான் இந்த அளவுக்கு முன்னேறியுள்ளது. இந்நகரின் தொழில் வளர்ச்சியில் அரசின் பங்களிப்பு மிகவும் குறைவு. அதேசமயம், அனைத்து அரசியல் கட்சியினருக்கும் தேர்தல்நிதி அளிக்கும் காமதேனுவாக திருப்பூர் விளங்கி வந்திருக்கிறது.

அப்படிப்பட்ட திருப்பூரின் தொழில்நலத்திற்கு சிக்கல் நேரிட்டிருக்கும் நிலையில், அரசும் பிற அரசியல் கட்சிகளும் தங்களைக் கைவிட்டுவிட்டதாக திருப்பூரில் பொதுவான ஒரு வருத்தம் இருக்கவே செய்கிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளாகவே திருப்பூர் தொழில்துறை சந்தித்துள்ள சோதனைகள் ஏராளம். அமெரிக்க டாலர் மதிப்பு வீழ்ச்சியால் ஏற்றுமதியாளர்களுக்கு ஏற்பட்ட நஷ்டம், டிரைவேட்டிவ் ஒப்பந்த பாதிப்பு, பருத்தி ஏற்றுமதியால் நூல்விலை கிடுகிடுவென உயர்வு, மின்வெட்டால் பின்னலாடை உற்பத்தி சீர்குலைவு, மூலப்பொருள்கள் விலை அதிகரிப்பு, சரக்கு போக்குவரத்துக் கட்டணங்கள் உயர்வு என பல்வேறு சிக்கல்களில் தவித்து வந்தது பின்னலாடைத் தொழில்துறை.

இவை அனைத்திற்கும் சிகரம் போல, சுற்றுச்சூழல் பாதிப்பைக் காரணம்காட்டி, அனைத்து சாய, சலவை ஆலைகளை மூடுமாறு அண்மையில் உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவு, பின்னலாடைத் தொழில்துறையை மேலும் சிக்கலில் ஆழ்த்தியுள்ளது. நிச்சயமற்ற எதிர்காலம் காரணமாக, பல்லாயிரக் கணக்கான வெளிமாவட்டத் தொழிலாளர்கள் சொந்த ஊருக்குத் திரும்பத் துவங்கிவிட்டனர். கடந்த ஒரு மாதத்தில் திருப்பூரின் மிடுக்கு குறைந்திருப்பதை உணர முடிகிறது.

இந்நிலையில், வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல பின்னலாடைகள் மீதான கலால் வரி மத்திய அரசால் உயர்த்தப்பட்டிருக்கிறது. இந்தப் பிரச்னைகளை எதிர்க்க வேண்டிய தொழில்துறை சங்கங்கள் பல்வேறு காரணங்களால் அமைதியாக இருப்பதும், கடும் எதிர்ப்பைப் பதிவு செய்யாததுமே, திருப்பூர் தொழில் பாதுகாப்புக் குழுவின் உதயத்திற்கு வித்திட்டுள்ளது.

இக்குழுவில் சிறு தொழிற்சாலை உரிமையாளர்களும் தொழிலாளர்களும் இணைந்து போராடி வருகின்றனர். பல்லாயிரக் கணக்கில் திரண்ட பின்னலாடை நிறுவன உரிமையாளர்களின் வீட்டுப் பெண்கள் மூன்று நாட்கள் நடத்திய போராட்டம், திருப்பூர் தொழில்துறையினரே எதிர்பாராதது. அதன் அடுத்தகட்டமாகவே, திருப்பூர் தொகுதிகளில் ஆயிரக் கணக்கான வேட்பாளர்கள் போட்டியிடுவதாக தற்போது அறிவித்துள்ளனர்.

இந்தப் போராட்ட அணுகுமுறையை திருப்பூர் பெரும் தொழிலதிபர்கள் விரும்பவில்லை. அரசுடனும் அரசியல் கட்சிகளுடனும் சுமுக உறவை விரும்பும் அவர்கள், தங்களை இந்தப் போராட்டத்திலிருந்து விலக்கிக் கொள்ளவே விரும்புகின்றனர். இதுவரை சுயேச்சையாக மனு தாக்கல் செய்துள்ள திருப்பூர் தொழில் பாதுகாப்புக் குழுவினர் பலரும் சாதாரணத் தொழிலாளர்களே என்பது குறிப்பிடத் தக்கது.

இக்குழுவினர் எதிர்பார்ப்பது போல ஆயிரக் கணக்கானோர் திருப்பூரின் இரு தொகுதிகளிலும் வேட்புமனு தாக்கல் செய்வார்களானால், இத்தொகுதிகளில் மட்டும் தேர்தலை ஒத்திவைக்க வேண்டிய நிலை உருவாகும். இந்நிலையைத் தவிர்க்க பல்வேறு கட்சிகள் முயன்று வருகின்றன.

எது எப்படியாயினும், திருப்பூர் தொழிலாளர்கள் சுயேச்சையாக தேர்தல் களம் காண்பது ஆக்கப்பூர்வமானதாகவே உள்ளது. தேர்தலைப் புறக்கணிப்பதைவிட தேர்தலை சவாலானதாக மாற்றி நாட்டின் கவனத்தை ஈர்ப்பது தான் இவர்களது இலக்காக உள்ளது. இவர்களது போராட்டம் வெல்லுமா? காலம் தான் பதில் கூற வேண்டும்.

நன்றி: தினமணி (25.03.2011)
தலையங்கப் பக்க துணைக் கட்டுரை

.

No comments:

Post a Comment