Monday, November 5, 2012

வடசித்தூரில் கொண்டாடப்படும் மயிலந்தீபாவளி!


 நாடு முழுவதும் தீபாவளிக் கொண்டாட்டம் இருந்தாலும், ஒவ்வோர் இடத்திலும் ஒவ்வொரு விதமாகக் கொண்டாடப்படுகிறது. வடமாநிலங்களில் பல  நாள் கொண்டாட்டமாக தீபாவளி மகிழ்ச்சியை அள்ளி வழங்குகிறது. தமிழகத்திலோ தீபாவளி கொண்டாட்டம் ஒருநாள் மட்டுமே.

அதேசமயம், கோவை மாவட்டத்திலுள்ள வடசித்தூர் கிராமத்தில் மட்டும் தீபாவளி இரண்டுநாள் கொண்டாடப்படுகிறது. இரண்டாவது நாளை இவ்வூர் மக்கள் "மயிலந்தீபாவளி' என்ற பெயரில் கொண்டாடுகிறார்கள். அன்று இக்கிராமத்திலுள்ள ஒவ்வொரு வீட்டிலும் கிடாவெட்டு உண்டு.

கோவை மாவட்டம், பொள்ளாச்சி வட்டம், கிணத்துக்கடவு ஒன்றியத்திலுள்ள வடசித்தூர் கிராமம் சிற்றூராட்சியாகும். குரும்பபாளையம், செல்லப்ப கவுண்டன்புதூர் ஆகிய குக்கிராமங்களையும் உள்ளடக்கிய வடசித்தூர், சுற்றுவட்டாரக் கிராமங்களின் மையமாக உள்ளது. இங்கு ஐயாயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். விவசாயமே இங்கு முக்கியத் தொழில். சமீபகாலமாக இப்பகுதியில் காற்றாலைகள் அதிக அளவில் நிறுவப்பட்டு வருகின்றன.


இங்கு பல தலைமுறைகளாக, தீபாவளிக்கு மறுநாள் "மயிலந்தீபாவளி' என்ற பெயரில் பண்டிகை கொண்டாடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இந்த வழக்கம் எப்போது துவங்கியது என்று தெரியவில்லை என்கிறார்கள் ஊர்ப் பெரியவர்கள். எப்படியும் நூறு ஆண்டுகளுக்கு மேலாக இப்பண்டிகை அனுசரிக்கப்பட்டு வருகிறது என்கிறார், இந்த ஊரைச் சேர்ந்த எஸ்.நஞ்சுக்குட்டி.

சிறிய தீபாவளி என்ற அர்த்தத்தில் மயிலந்தீபாவளியைக் கொண்டாடுவது துவங்கியிருக்க வேண்டும் என்கிறார் இவர். அருகிலுள்ள நகரமான பொள்ளாச்சியில் வியாழக்கிழமை கூடும் பெரிய சந்தையை அடுத்து, மறுநாள் வெள்ளிக்கிழமை சிறிய சந்தையான 'மயிலஞ்சந்தை' கூடுவதை அவர் உதாரணமாகச் சுட்டிக் காட்டுகிறார்.

எல்லா ஊர்களையும் போலவே வழக்கமான உற்சாகத்துடன் வடசித்தூரிலும் தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதிகாலை எண்ணெய்க் குளியல், பட்டாசு வெடிப்பு, ஊரின் பிரதானமான கரிவரதராஜப் பெருமாள் கோவிலில் வழிபாடு ஆகியவை வடசித்தூரில் தீபாவளியின் வழக்கமான அம்சங்கள். அத்துடன் ஊரின் மையத்தில் ஊராட்சித் திடலில் அமைக்கப்படும் ராட்டினங்கள், கேளிக்கை விளையாட்டுக்கள் ஆகியவை வித்யாசமான அனுபவத்தை இவ்வூர் மக்களுக்கு ஆண்டுதோறும் வழங்குகின்றன.

இதற்குக் காரணமாக அமைந்தது தான், மறுநாள் வரும் மயிலந்தீபாவளி. இதுவே  வடசித்தூர் நோக்கி சுற்றுவட்டார மக்களை திரளச் செய்கிறது. அன்று வடசித்தூரில் வாழும் பெரும்பாலோர் இல்லங்களில் அசைவ விருந்து பரிமாறப்படுகிறது. மாறாக தீபாவளியன்று இம்மக்கள் அசைவ உணவைத் தவிர்க்கின்றனர்.

வடசித்தூரில் பெரும்பான்மையாக வாழும் கொங்கு வேளாள கவுண்டர் மக்கள் 'செம்பங்குலம்' என்ற உட்பிரிவைச் சார்ந்தவர்கள். இவர்கள் அமாவாசை நாளில் அசைவ உணவைத் தவிர்ப்பது குடும்ப வழக்கம். இவர்களுக்காகவே அமாவாசைக்கு மறுநாள் மயிலந்தீபாவளி கொண்டாடப்படுவது துவங்கியிருக்க வேண்டும் என்கிறார் இங்கு டீக்கடை வைத்திருக்கும் பொன். இளங்கோ.

''வடசித்தூரைச் சேர்ந்த பெண்கள் வேறு ஊர்களுக்குத் திருமணமாகிச் சென்றுவிட்டாலும், தீபாவளிக்கு மறுநாள் கணவர் வீட்டினர் மற்றும் குழந்தை குட்டிகளுடன் பெற்றோர் வீட்டுக்கு வந்து விருந்தில் கலந்துகொள்வது வழக்கமாக உள்ளது. புகுந்த வீட்டிற்குச் சென்ற தங்கள் பெண்களுக்கு தீபாவளியன்று அசைவ விருந்து தர முடியாததால், அதற்கு மறுநாள் 'மயிலந்தீபாவளி' என்ற பெயரில் புதிய பண்டிகையையே வடசித்தூர் மக்கள் உருவாக்கி இருக்கிறார்கள்'' என்கிறார், இந்த ஊராட்சியின் தலைவர் கே.தேவராஜ்.

மயிலந்தீபாவளியின் மற்றொரு சிறப்பு, இவ்வூரில் வாழும் இஸ்லாமியர்களும் இப்பண்டிகையில் பங்கேற்பது என்கிறார் இவர். மயிலந்தீபாவளியன்று இந்துக்களின் வீடுகளுக்கு விருந்தினராகச் செல்வதை இங்குள்ள முஸ்லிம் மக்கள் பெருமையாக நினைக்கிறார்கள். அன்று இந்துக்களும் முஸ்லிம்களும் பாசத்துடன் உறவுமுறை கூறி அழைத்துக் கொள்வதைக் காண முடியும்.

இரு நாட்கள் தீபாவளி கொண்டாடப்படுவதால், வடசித்தூரின் மையத்தில் பஞ்சாயத்து மைதானத்தில் கேளிக்கை விளையாட்டுகள் களைகட்டுகின்றன. இதற்காக பலவிதமான ராட்டினங்கள் அமைக்கப்படுகின்றன. இவற்றில் விளையாட வரும் சிறுவர் சிறுமியரின் உற்சாக ஆரவாரம் ஊர் எல்லை வரை கேட்கும்.

நூறு ஆண்டுகளுக்கு முன் இங்கு வாரச்சந்தை நடந்ததாகத் தகவல். பிற்காலத்தில் ஊராட்சி அலுவலகம் கட்டுவதற்காக, ஊரின் தெற்கே சந்தை இடம் மாற்றப்பட்டுவிட்டது. எனினும், மயிலந்தீபாவளிக் கொண்டாட்டங்கள் அதே இடத்தில் தொடர்கின்றன என்கிறார் இதே ஊரைச் சேர்ந்த கண்டியப்பன்.

சுற்றுவட்டார கிராமங்களின் மையமாக இருப்பதால், அருகிலுள்ள குருநல்லிபாளையம், மன்றாம்பாளையம், கொண்டம்பட்டி, மெட்டுவாவி, பனப்பட்டி, ஆண்டிபாளையம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வடசித்தூரிலுள்ள உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீட்டிற்கு பண்டிகை கொண்டாட மக்கள் வருகின்றனர்.

வெளியூர்களில் வசிக்கும் வடசித்தூர் கிராம மக்களும் இவர்களது உறவினரும் ஆண்டுக்கு ஒருமுறை கூடும் திருநாளாகவும் மயிலந்தீபாவளி விளங்குகிறது. இளைஞர்களும் கன்னியரும் கண்ணால் பேசி மகிழவும் இப்பண்டிகை வாய்ப்பளிக்கிறது.

பண்டிகையின் நோக்கம் மகிழ்ச்சி மட்டுமல்ல, அன்பையும் உறவுகளையும் வளர்ப்பது. அதைச் சிறப்பாக நிறைவேற்றுவதால் தான், தமிழகத்திலேயே புதுமையாக, ஆண்டுதோறும் இங்கு இரண்டுநாள் தீபாவளி கோலாகலமாக நடக்கிறது. வரப்போகும் மயிலந்தீபாவளிக்காக, சென்ற ஆண்டு நினைவுகளுடன் வடசித்தூர் காத்திருக்கிறது.

- தினமணி - கோவை (28.10.2012 )
ஒளி விழா கொண்டாட்டம் விளம்பரச் சிறப்பிதழ்
.

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

பல தகவல்கள்... பதிவாகிப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி...

Post a Comment