வண்ணமயமான தீபாவளி பண்டிகை நெருங்கிவிட்டது. நாடு முழுவதும் உற்சாக வெள்ளத்தைக் கரைபுரளச் செய்யும் முதன்மையான பண்டிகை தீபாவளி தான். இப்பண்டிகை இந்துக்களால் மட்டும் கொண்டாடப்படுவதல்ல என்பது பலரும் அறியாத தகவல்.
சமண மத்தின் கடைசி (24வது) தீர்த்தங்கரரான வர்த்தமான மகாவீரர் மோட்சம் அடைந்த நாள் தீபாவளி (கி.மு. 567) என்பதால், இந்நாளை சமணர்கள் பக்தியுடன் கொண்டாடுகின்றனர்.
மாமன்னர் அசோகர் புத்த மதத்தைத் தழுவிய நாள் என்பதால், புத்த மதத்தினரும் தீபாவளியைக் கொண்டாடுகின்றனர். பஞ்சநதி பாயும் பஞ்சாபைச் சேர்ந்த சீக்கியர்களுக்கோ, தீபாவளி தியாகமயமான சரித்திர நிகழ்வுகளின் சங்கமத் திருநாள்.
“சீக்கியர்கள் தங்கள் குருவிடம் வந்து உபதேசம் பெற உகந்த நாள் தீபாவளி” என்று மூன்றாவது சீக்கிய குருவான குரு அமர்தாஸ் (1552- 1574) அறிவித்தார். அந்த வழக்கம் இன்றும் தொடர்கிறது.
சீக்கியர்கள் தங்கள் உயிரினும் மேலாகக் கருதும் ஹர்மந்திர் சாஹிப் எனப்படும் பொற்கோவிலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டதும் ஒரு தீபாவளி நன்னாளில் தான். அமிர்தசரஸ் குளத்தையும் அதையொட்டிய நகரையும் நிர்மாணித்த நான்காம் சீக்கிய குரு ராம்தாஸ் 1577ம் ஆண்டு தீபாவளியன்று இப்பணியைத் துவக்கினார். இப்பணியை முழுமையாக்கி அமிர்தசரஸ் நகரை உருவாக்கினார் அடுத்துவந்த ஐந்தாவது சீக்கிய குரு அர்ஜூன் தேவ்.
சீக்கியர்களின் எழுச்சிக் காலமாகக் கருதப்படும் காலம் ஆறாவது குரு ஹர்கோவிந்த சிங்கின் காலம் (1595 – 1644). இவர் அப்போதைய முகலாய மன்னர் ஜஹாங்கீரால் கைது செய்யப்பட்டார். அவருடன் 52 இந்து அரசர்களும் கைது செய்யப்பட்டு குவாலியர் கோட்டையிலுள்ள சிறையில் அடைக்கப்பட்டனர்.
மதமாற்றத்தை வலியுறுத்தி சிறைக்குள் இவருக்கு கொடிய சித்ரவதைகள் இழைக்கப்பட்டன. அவை அனைத்தையும் தனது ஆன்ம வலிமையால் தாண்டிய குரு ஹர்கோவிந்த சிங்கின் பெருமையை மன்னர் ஜஹாங்கீர் உணர்ந்தார். இறுதியில் சிறையில் இருந்து குருவை விடுவிக்க மன்னர் முன்வந்தார். ஆனால், தன்னுடன் சிறையிலுள்ள 52 இந்து மன்னர்களையும் விடுவித்தால் மட்டுமே தானும் வெளிவருவேன் என்றார் குரு ஹர்கோவிந்த் சிங்.
கடைசியில் குருவின் மனவலிமையே வென்றது. ஒரு தீபாவளி நன்னாளில் குரு ஹர்கோவிந்தருடன் 52 இந்து மன்னர்களையும் விடுவித்தார் மொகலாய மன்னர் ஜஹாங்கீர். 1619, அக்டோபர் 26ம் நாள் இந்த சரித்திரப்புகழ் பெற்ற நிகழ்வு நடைபெற்றது.
அதனை ஆண்டுதோறும் நினைவுகூரும் விதமாக, “பந்தி சோர் திவஸ்’ என்ற விழா சீக்கிய மக்களால் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் அமிர்தசரஸ் திருக்குளத்தில் சீக்கியக் குழந்தைகள் வண்ண விளக்குகளை மிதக்கவிட்டு, பட்டாசு வெடித்து மகிழ்கின்றனர்.
சீக்கியர்களின் பத்தாவது மற்றும் கடைசி குரு கோவிந்த் சிங், 1699ம் ஆண்டு, சீக்கியர்களின் பண்டிகைகளில் பைசாகிக்கு அடுத்ததாக, முக்கியத்துவம் வாய்ந்த பண்டிகையாக தீபாவளியை அறிவித்தார். அன்று முதல் இன்று வரை உலகம் முழுவதும் வாழும் சீக்கியர்கள் தீபாவளியை கோலாகலமாகக் கொண்டாடி வருகின்றனர்.
அமிர்தசரஸ் பொற்கோவிலின் நிர்வாகியும் குரு கோவிந்தரின் பால்ய நண்பருமான குரு பாயி மணிசிங் மொகலாய அரசுக்கு செலுத்த வேண்டிய கப்பத்தைக் கட்ட மறுத்ததால், 1737, டிசம்பரில் கைது செய்யப்பட்டு லாகூர் கோட்டை சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு லாகூர் ஆளுநர் சஹாரியா கானால் கடும் சித்ரவதைக்கு ஆளாகி பாயி மணிசிங் தீபாவளியன்று பலியானார்.
அவரது மரணம் சீக்கியர்களிடையே பெரும் எழுச்சியை ஏற்படுத்திய நிகழ்வாக அமைந்தது. ஏற்கனவே பத்தாவது குருவான குரு கோவிந்தரால் அமைக்கப்பட்ட கால்சா படை மொகலாயருக்கு எதிராக தீவிரமாகப் போராட இவரது படுகொலை காரணமாக அமைந்தது.
இவ்வாறாக, தியாகமயமான சரித்திர நிகழ்வுகளின் பதிவுகளுடன், முந்தைய குருமார்களின் புனிதமான நினைவுகளுடன் தீபாவளியை சீக்கியர்களும் கொண்டாடுகின்றனர். இந்நாளில் சிறப்பு மிகுந்த நமது பாரம்பரியத்தை நாமும் நினைவில் கொள்வோம்.
2 comments:
தியாக தீப ஒளி திருவிழா...அறியாத தகவல்கள். நன்றி முரளி சார்.
அறியாத தகவல்...
பலர் அறிய பகிர்ந்து கொண்டதற்கு நன்றி...
Post a Comment