'திடக்கழிவு மேலாண்மை' - நாமகரணம் தீர்வாகுமா?
குப்பை இல்லாத நகரத்தைப் பார்ப்பது ஊழலற்ற அரசியல்வாதியைப் பார்ப்பது போலாகிவிட்டது. நகரங்கள் என்றில்லை, கிராமங்களிலும் கூட இப்போது திடக்கழிவு மேலாண்மை மிகவும் மோசமான நிலையிலேயே உள்ளது. இதற்கு உள்ளாட்சி அமைப்புகளின் பொறுப்பின்மையே காரணம் எனில் மிகையில்லை.
மனித உடலே தினசரி தன்னிடம் சேரும் அசுத்தத்தை வெளியேற்றிக்கொண்டு தான் உயிர் வாழ்கிறது. அவ்வாறே நமது வீடுகளையும் சுற்றுப்புறத்தையும் சுத்தமாகப் பராமரிக்க வேண்டியது அவசியமாகிறது. தினசரி வீட்டைப் பெருக்கி குப்பைகளை அகற்றாத இல்லத்தில் திருமகள் வாசம் செய்ய மாட்டாள் என்ற நம்பிக்கையும் நம்மிடம் உண்டு.
அதேசமயம், நமது வீடு மட்டும் சுத்தமானால் போதும், தெருவும் ஊரும் எப்படிப் போனால் என்ன என்ற அலட்சிய மனப்பான்மை பலரிடமும் உள்ளது. அதன் விளைவையே தெருக்களிலும் முச்சந்திகளிலும் குப்பை மலைகளாக நாம் காண்கிறோம். அவற்றை மூக்கைப் பொத்தியபடி, மறுபுறம் திரும்பியபடி வேகமாகக் கடக்கிறோம்.
இந்தக் குப்பைகளைக் கிளறியபடி வலம் வரும் பன்றிகளும், நாய்களும், கோழிகளும் சுகாதாரக் கேட்டை அதிகப்படுத்துகின்றன. இதுகுறித்து மக்களுக்கும் கவலையில்லை; மக்களால் தேர்வு செய்யப்பட்டு உள்ளாட்சிப் பதவிகளில் அமர்ந்திருப்போருக்கும் கவலையில்லை.
குப்பைகளை அகற்றுவதற்கு "திடக்கழிவு மேலாண்மை' என்ற புதிய நாமம் சூட்டியது மட்டுமே நமது அரசுகளின் சிறப்பு. ஒவ்வொரு உள்ளாட்சியிலும் திடக்கழிவுகளைக் குவிக்க தனியிடம் ஏற்பாடு செய்வதற்குள் நிர்வாகங்களின் விழி பிதுங்கி விடுகிறது. இதற்கு அதனருகே குடியிருப்போர் எதிர்ப்பு தெரிவிப்பது எல்லா ஊர்களிலுமே காட்சியாகி வருகிறது.
இந்தக் குப்பையை உரமாக்க பல லட்சம் செலவில் திட்டங்கள் தீட்டப்படுகின்றன. ஆனால் எந்த இடத்திலும் குப்பைகள் உயிர் உரமாக்கப்பட்டு வெற்றிகரமாக விற்பனையானதாக செய்திகள் இல்லை.
குப்பைகளில் மறுசுழற்சிக்கு உரியவற்றைத் தரம் பிரித்துப் பயன்படுத்துவதும் திடக்கழிவு மேலாண்மையில் ஓர் அம்சம். நிதர்சனத்திலோ, மட்க இயலாத குப்பைகளைத் தீவைத்து எரிப்பதே நிகழ்வாக இருக்கிறது. அந்தப் புகைக்கு அஞ்சியே அதன் அருகிலுள்ளோர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் வீதிதோறும் குப்பை சேகரிக்கும் ஏற்பாடும் பலவீனமாக உள்ளது. இதனால், ஒவ்வொரு வீட்டிலிருந்தும் வெளியேறும் குப்பை தெருவை நாறடிக்கிறது. குப்பை சேகரிப்பதற்கு உள்ளாட்சிகளில் இருந்த பணியாளர் எண்ணிக்கையும் சிறுகச் சிறுகக் குறைந்து வருகிறது.
உதாரணமாக, திருப்பூர் மாநகராட்சியில் தோராயமாக இருக்க வேண்டிய தூய்மைப் பணியாளர்களின் எண்ணிக்கை: 3,000. ஆனால் இருப்பவர்களோ 1,200 பேர். கிட்டத்தட்ட மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேறுபாடு. இந்த எண்ணிக்கையிலுள்ள பணியாளர்களைக் கொண்டு மாநகரைத் தூய்மையாகப் பராமரிப்பது எப்படி?
கோவை மாநகராட்சியில் சுகாதார ஆய்வாளர்கள் 72 பேர் இருக்க வேண்டும். ஆனால் "மருந்துக்கும்கூட' சுகாதார ஆய்வாளரே இல்லை. இந்தப் பணியை தற்போது மேற்கொள்பவர்கள், இதற்கு அடுத்தநிலையில் உள்ள மேற்பார்வையாளர்கள் தான். எனில் மேற்பார்வையாளர்களின் பணியை யார் மேற்கொள்வது?
இதேபோன்ற நிலைதான் பெரும்பாலான உள்ளாட்சிகளில் காணப்படுகிறது. புதிய பணியாளர் நியமனம் பல இடங்களில் நிறுத்தப்பட்டுவிட்டது. இருக்கும் பணியாளர்கள் ஓய்வு பெற்றால் அந்த இடங்கள் காலியாகவே விடப்படுகின்றன. இதன்மூலமாக, செலவினத்தைக் குறைப்பதாக உள்ளாட்சிகளும் அரசும் கருதுவதாகத் தெரிகிறது.
மாறாக, குறைந்த ஒப்பந்தக் கூலியுடன், குப்பை சேகரிக்கும் பணிகளை மகளிர் சுயஉதவிக் குழுக்களிடம் ஒப்படைப்பதும் தொடர்ந்து நடக்கிறது. குறைந்தபட்சக் கூலி, தொழில் நிரந்தரமின்மை, பணிப் பாதுகாப்பின்மை போன்ற காரணிகளால், அவர்களால் இப்பணியில் முழு ஈடுபாட்டுடன் பணிபுரிய முடிவதில்லை. இதிலும் ஊழல் தலைவிரித்தாடுகிறது.
சுகாதாரப் பணியாளர்கள் முடங்கினால் ஊரின் சுகாதாரம் கேள்விக்குறி ஆகிவிடும். எது எதற்கோ கோடிக் கணக்கில் செலவு செய்யும் நமது அரசுகள், நாட்டின் சுகாதாரம் காக்கும் பணியில் தங்கள் உடல்நலத்தைப் பணயம் வைத்துப் பணி புரியும் தொழிலாளர்களுக்கு ஊதியம் அளித்தால் குறைந்தா போய்விடும்?
அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு பல முறை ஊதிய உயர்வு வழங்கும் அரசுகள், நமது அடிப்படை சுகாதாரத்தைக் காக்கும் பணியாளரின் வாழ்க்கை நிலை குறித்து கவலைப்படாமல் இருப்பது முறையல்ல. பிற அரசுத் துறைப் பணியாளர்களுடன் ஒப்பிடுகையில், இவர்களது ஊதியம் மிகக் குறைவாகவே இருக்கும்.
நகர சுத்தித் தொழிலாளர்கள் தேர்தல் பணியாளர்களாக இருக்கப் போவதில்லை என்பதால், அவர்களது முக்கியத்துவம் இல்லாது போய்விடாது. இதை அரசு உணர்வது அவசியம். திடக்கழிவு மேலாண்மையை திறம்படச் செய்வது எப்படி என்பதற்கான அணுகுமுறைகளை வகுப்பதும் அதைவிட அவசியம்.
No comments:
Post a Comment