Tuesday, September 4, 2012

எண்ணங்கள்

பண்பாட்டை விளக்கும் உன்னதத் திருவிழா


நமது நாட்டின் பண்பாட்டுச் சிறப்புக்கு அடையாளமாகத் திகழ்பவை பண்டிகைகள். ஒவ்வொரு பண்டிகைக்கும் தோற்றக் காரணம் உண்டு. மக்களை ஒன்றிணைப்பதும், மகிழ்ச்சியூட்டுவதுமே பண்டிகைகளின் அடிப்படை நோக்கம். அந்த வகையில் கேரள மக்களால் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகை தனிச் சிறப்பு மிக்கதாகும்.

‘பரசுராம க்ஷேத்திரம்’ என்று அழைக்கப்படும் பெருமை வாய்ந்த கேரளத்தை முன்னொரு காலத்தில் மகாபலி சக்கரவர்த்தி ஆண்டு வந்தார். இவர் பிரகலாதனின் பேரன். நல்லாட்சி நடத்தியதால் மக்களின் நன்மதிப்பைப் பெற்றவர். தான தர்மம் செய்வதில் நிகரற்றவராக விளங்கிய இவரது மனத்திலும் மாசு புகுந்தது. தானத்தில் தன்னை விஞ்ச ஆளில்லை என்ற ஆணவமும், தேவர்களை அடிமைப்படுத்திய அசுர குணமும் மகாபலிக்கு வினையாக அமைந்தன.


மகாபலி மன்னனின் ஆணவம் போக்கி தேவர்களைக் காக்க வாமன அவதாரம் எடுத்த மகாவிஷ்ணு, மூன்றடி நிலம் தானம் கேட்டுப் பெற்றார். மகாபலியை சம்ஹரித்தார் என்பது புராணக் கதை. ஓரடிக்கு மண்ணையும் மற்றோர் அடிக்கு விண்ணையும் அளந்த வாமனனின் விஸ்வரூப தரிசனம் கண்ட மகாபலி சக்கரவர்த்தி, மூன்றாம் அடிக்கு தனது தலையையே அளித்தார். அதன் மூலம் இறையருள் பெற்றார்.

எனினும் நல்லாட்சி நடத்திய நாயகனான மகாபலி, ஆண்டுதோறும் மலையாள சிங்கம் மாதம், திருவோண நட்சத்திரத்தன்று தனது நாட்டைக் காண வந்து செல்ல வரம் கேட்டுப் பெற்றார் என்பது மக்களின் நம்பிக்கை.

அதன்படி தங்களது சுபிக்ஷம் காண வரும் மன்னன் மகாபலியை வரவேற்க, அந்நாட்டு மக்கள் புத்தாடை புனைந்து, ஒன்பது சுவை உணவுடன், வாசலில் மலர்க் கோலமிட்டு, சாகச விளையாட்டுகளுடன் விழா கொண்டாடுகின்றனர். இதுவே ஓணம் பண்டிகையின் தாத்பரியம்.

மலையாள மக்கள் அனுசரிக்கும் ‘கொல்ல வருஷம்’ என்ற நாள்காட்டியின் முதல் மாதமான சிங்கம் மாதத்தில் ஹஸ்த நட்சத்திரம் துவங்கி திருவோணம் நட்சத்திரம் வரையிலான பத்து நாட்களும் கொண்டாடப்படுவதே ஓணம் பண்டிகை. மாநிலம் முழுவதும் அறுவடை முடிந்து வீடுதோறும் செல்வம் குவிந்திருக்கும் சூழலில் இப்பண்டிகை வருகிறது. மக்களுக்கு ஆனந்தம் தருகிறது.ஸ

ஒரு நாட்டின் பண்பாட்டின் சின்னமாக விளங்குபவை ஆடைகளும் உணவு வகைகளும் தான். அதன்படி, மலையாளிகளுக்கே உரித்தான ‘கசவு’ வெண் பட்டாடைகள் தனிச்சிறப்பு பெற்றவை. இந்த ஆடைகளை அணிந்து, 64 வகையான பதார்த்தங்களுடன் கூடிய ‘ஓண சத்யா’ விருந்தளித்து உறவினர்களையும் நண்பர்களையும் உபசரிப்பது கேரள மக்களின் பண்டிகை மாண்பு.

அடுத்து, பண்பாட்டின் அடையாளங்களாக சாகசக் கலைகளும் நாட்டியங்களும் இசைப் பாடல்களும் விளங்குகின்றன. ஓணம் விழாவில் பெண்கள் ஆடும் ‘கைகொட்டுக் களி’யும், ஆண்கள் ஆடும் ‘புலிக்களி’யும் சிறப்பானவை. தவிர, பாரம்பரியமான கயிறு இழுத்தல் போட்டி, களரி, படகுப் போட்டிகளும் நடைபெறுவது வழக்கம்.

கேரளத்துக்கே உரித்த யானைத் திருவிழா ஓணம் பண்டிகையின் சிகரமாகும். பண்டிகையின் பத்தாம் நாளான திருவோணம் அன்று, யானைகளை அலங்கரித்து ஊர்வலம் நடத்தி மகிழ்வர்.

‘அத்தப்பூக் களம்’ எனப்படும் பூக்கோலம், மகாபலி சக்கரவர்த்தியை வரவேற்கும் விதமாக ஒவ்வொரு கேரளத்தவரின் இல்லத்தின் முகப்பிலும் காணப்படுவது ஓணம் பண்டிகையின் முத்திரையாகும். ஜாதி, மத வித்தியாசமில்லாமல் கேரளத்தைச் சார்ந்த அனைவரும் கொண்டாடும் ஓணம் பெருவிழா, சத்தமின்றி மலையாள மக்களை ஒருங்கிணைத்து, அவர்களது பண்பாட்டுப் பெருமிதத்தை நினைவூட்டி வருகிறது.

கேரள மக்கள் உலகின் எந்த மூலைக்குச் சென்றாலும் பண்பாட்டை மறவாமல் கொண்டாடும் திருவோணம் திருவிழா, பாரதத்தின் பெருமையையும் பார் முழுவதும் பரப்பி வருகிறது. இவ்விழாவை நாமும் கொண்டாடி மகாபலி சக்கரவர்த்தியின் அருளைப் பெறுவோமே!

—————————————

நீதி தவழும் நாடு…

ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரள மக்கள் பாடும் பாடல், மகாபலி சக்கரவர்த்தியின் சிறப்பை வெளிப்படுத்துவதாக உள்ளது. மகாபலி ஆண்ட நாட்டின் சிறப்பை நினைவுகூர்ந்து, அதேபோன்ற நாடு அமைய பண்டிகையின்போது பிரார்த்திக்கிறார்கள் மக்கள். இதோ அந்தப் பாடலின் வரிகள்:

மாவலி மன்னன் ஆண்ட நாட்டில்
மனிதர்களெல்லாம் சரிநிகரே!
ஆனந்தம் எங்கும் தாண்டவமாடும்.
அவதியென்பதே எங்குமில்லை.

நோய்கள் நெருங்கா நாடு அது
சிசுக்களை சாவு அண்டாது.
பொய்யை அறியா பண்புறு மக்கள்!
கொள்ளையும் திருட்டும் அங்கில்லை.

வாய்மை எங்கும் பேச்சில் மிளிரும்
அளவைகள் தரத்தை வெளிப்படுத்தும்.
யாரும் யாரையும் ஏமாற்றாத
நேர்மை ஒளிரும் வீரிய தேசம்.

மாவலி ஆண்ட மண்ணில் என்றும்
அனைவரும் ஒரு குலம்! சரிநிகரே!


- தினமணி (கோவை) 28.08.2012

பொன் ஓணத் திருநாள் -விளம்பரச் சிறப்பிதழ் 

.



1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

விழாவின் சிறப்பை அறிந்து கொள்ள முடிந்தது...

பாடல் வரிகள் அருமை...

பதிவாகிப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி சார்...

Post a Comment