அகன்று உயர்ந்த மதிலில் பல இடங்களில் சிதிலங்கள்.
ஆலமரமும் அரச மரமும் வேரோடியிருக்கின்றன.
எருக்கஞ்செடிகள் பூக்களை இறைத்தபடி மதிலோரம் விரவிக் கிடக்கின்றன.
சுண்ணாம்பு பார்த்து பலநூறு வருடம் ஆனதன் அடையாளம்
சுவரெங்கும் பட்டையாக உரிந்து கிடப்பதில் தெரிகிறது.
செங்கல்லும் சுண்ணாம்புச் சாந்தும் பெயர்ந்திருந்தாலும்
கம்பீரம் குலையாமல் காட்சி தருகிறது மதில்.
இரண்டு ஆள் கனத்தில் இவ்வளவு வலிமையாகக் கட்டிய
கொத்தனார் நினைத்தும் பார்த்திருக்க மாட்டார்,
பலநூறு ஆண்டுகள் இந்த மதில் வரலாறு சொல்லும் என்று.
கட்டியவன் யார், கட்டச் சொன்னவன் யார்
என்பதெல்லாம் தேவையில்லாத கதை.
இந்த மதிலை இடித்தால் தான் உள்ளிருக்கும்
அரண்மனையைத் தூர்க்க முடியும் என்பதுதான் விஷயம்.
மதிலுக்கு 15 அடி உயர வாயில்கதவு இருந்திருக்கிறது.
அதன் அடையாளம் கரிய கீலில் தெரிகிறது.
அங்கிருந்து கண்ணை இடுக்கிக்கொண்டு பார்த்தால்,
பேய்மாளிகை போல அரண்மனை தெரியக்கூடும்.
ஆயிரம் கிராமம் அடக்கியாண்ட மன்னவன் களித்த
அந்தப்புர வரிசையில் இப்போதும் கொலுசுச் சத்தம்.
எதிரிகளை புறமுதுகிட்டு ஓடச்செய்த தளபதிகளுடன்
புனலாடி மகிழ்ந்த நறுநீர்க் குளத்தின்
படிக்கட்டுக்கள் வெளிறிய பாசிநிறத்தில்.
அரண்மனையின் மலேசிய தேக்கு உத்தரங்கள்
கரையான் அரித்தும் காலமாகாதவை.
அதன் அழகிய தச்சு வேலைப்பாடுகளும்,
களிமண்ணில் சுட்ட ஜாடிகளும்,
துரு ஏறாத இரும்புக் கிராதிகளும்,
முட்டைக்கருவும் கடுக்காயும் கலந்த சாற்றில்
மெழுகிய நிழலாடும் கண்ணாடித் தளமும்,
விரிசல் விடாத சாளரங்களும்,
சிற்பம் செறிந்த நிலைக்கதவுகளும்,
சுவர்களை அலங்கரிக்கும் ஓவியங்களும்,
காட்டு விலங்குகளின் பாடமிடப்பட்ட தலைகளும்,
அறைகளில் கிடக்கும் ஆசனங்களும்,
இறுகிய நூலாம்படை படியக் கிடக்கின்றன.
சிசுக்கள் சிறுதேர் உருட்டி விளையாடிய
அரண்மனையைச் சுற்றிலும் பெருகிக் கிடக்கின்றன
கற்றாழைப் புதர்களும் வேலிகாத்தானும்.
நெருஞ்சி படர்ந்த செம்மண்ணில்
ஆங்காங்கே ஆளுயரப் புற்று.
அனாயசமான மதிலை உடைத்தாலும் கூட,
அரண்மனைக்கு காவல் அநேகம்.
அரண்மனை நிலவறையில் பல்லாயிரம் ஆண்டு கால
பாரம்பரிய ஏடுகள் இருப்பதாகத் தகவல்.
ரகசிய அறையில் ரத்தினங்கள் இருக்கலாம்.
அற்புதமான பஞ்சலோகச் சிலைகளும்,
அதிசயிக்கச் செய்யும் ஆபரணக் கருவூலமும் இருக்கலாம்.
அதற்கும் வளாக கோவிலுக்கும் சுரங்க வழி இருக்கலாம்.
அரண்மனை நெற்குதிரில் பெருச்சாளிகளின் வீச்சம்.
மாடங்களில் தலைகீழாகத் தொங்கும்
வௌவால்களின் கடைக்கண் பார்வை.
தளமெங்கும் பிழுக்கைகளுடன் ஒருவிரல் கனத்துக்கு
படிந்திருக்கிறது பலநூறு ஆண்டுகாலத் தூசி.
ஒருகாலத்தில் இளவரசிகள் நடமாடிய நந்தவனத்தில்
கருவேல மரங்கள் நெருங்கிக் கிடக்கின்றன.
அரண்மனையின் மடப்பள்ளியில் உடைத்து கிடக்கிறது
கருநிறத்திலான அரையாள் உயர ஆட்டாங்கல்.
மதில் பெயர்ந்த அளவுக்கு இல்லாவிடிலும்,
அரண்மனையின் வெளிப்புறம் சில இடங்களில் சிதிலம்.
எல்லாம் கொழுத்த எலிகளின் உபயம்.
சந்துபொந்துகளில் பாம்புகளும் பல்லிகளும் உண்டு.
இரவு நேரங்களில் ஆந்தைகள் இங்கு குழுமும்.
எல்லாமே செவிவழிக் கதைகள்.
பார்ப்பவர்கள் அனைவருக்கும் அரண்மனை ஒரு கருவூலம்.
எளிதில் பிளக்க முடியாத இந்த மதிலைச் சரித்துவிட்டால்
வழிமறிக்கும் புதர்களை அகற்றலாம்.
ஆபத்தான விஷ ஜந்துக்களை துரத்தலாம்.
கற்பனைக்கெட்டாத கருவூலங்களைக் கொள்ளையிடலாம்.
அரண்மனையை இடித்துவிட்டு இதே இடத்தில்
புதிதாக ஒரு அரண்மனை கட்டலாம்.
ஒரு கேளிக்கை விடுதி கூட அமைக்கலாம்.
அரண்மனையைக் காப்பதாக எல்லோரும் கதைக்கும்
வனதேவதை தெய்வத்தை நாடு கடத்தலாம்.
இப்போதைக்கு மதில் தான் பிரச்னை.
உள்ளிருக்கும் அற்புதங்களுக்கு ஆசைப்பட்டாலும்,
மதில் தாண்டுதல் சாத்தியமில்லை.
அரண்மனை வாரிசுகள் நித்திரை கலைந்து
சொந்த ஊர் வருவதற்குள் வளைத்தாக வேண்டும்.
அவர்கள் வந்துவிட்டால் அரண்மனை பொலிவாகிவிடும்.
அதன்பிறகு விலைபேச இயலாது.
அரண்மனை மதிலையேனும் உடனே சுரண்டியாக வேண்டும்.
நினைக்குந்தோறும் பேசிய விலையை எண்ணி
தவிர்க்க முடியாத தாபமாக வெளிப்படுகிறது பெருமூச்சு.
அரண்மனை கோவிலில் இருக்கும் ஆலயமணி
காற்றில் ஒலிப்பது நாராசமாக இருக்கிறது.
***
நாக்கைத் தொங்கவிட்டபடி திராட்சைத் தோட்டத்தில்
எம்பித் தவிக்கின்றன நரிகள்.
அரண்மனையின் அரணை உடைக்க இயலாமல்
காத்துக் கிடக்கிறார்கள் வியாபாரிகள்.
அவர்களை எச்சரிப்பது போல இடறி விடுகிறது
மதிலின் அடிவாரக் கல்.
-விஜயபாரதம் – தீபாவளி மலர் – 2012
No comments:
Post a Comment