நான்கு நாட்கள் இடைவெளியில் நாட்டின் இரு தேசியக் கட்சிகளில் முக்கிய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இவ்விரு நிகழ்வுகளிலும் நமது ஊடகங்களின் செயல்பாடு, நமது அரசியல் ஞானம் குறித்த கேள்விகளை எழுப்புவதாக அமைந்துள்ளது.
முதலாவதாக, கடந்த ஜனவரி 19-ஆம் தேதி ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் நடைபெற்ற காங்கிரஸ் சிந்தனை ஷிபிர் கூட்டத்தில், கட்சித் தலைவர் சோனியா காந்தியின் மகன் ராகுல் காந்தி துணைத் தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார். இது அக்கட்சியினரிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.
அடுத்து, கடந்த ஜனவரி 23-ஆம் தேதி புதுதில்லியில் நடைபெற்ற உள்கட்சித் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவராக உத்தரப் பிரதேசத்தைச் சார்ந்த ராஜ்நாத் சிங் ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஊழல் புகாரால் தங்கள் கட்சித் தலைவர் கட்கரி தத்தளித்து வந்த நிலையில், இந்நிகழ்வு அக்கட்சியினருக்கு ஆசுவாசத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த இரு நிகழ்வுகளிலும், ஜனநாயக அரசியலை விரும்புவோருக்கு எச்சரிக்கையை முதல் நிகழ்வும், நிம்மதியை இரண்டாவது நிகழ்வும் உருவாக்கியுள்ளன. ஆனால், நமது நாட்டின் பிரதான ஊடகங்கள் இந்த உண்மையை முழுமையாக வெளிப்படுத்தவில்லை.
தற்போது நாட்டில் ஆளும் கட்சியாக உள்ள காங்கிரஸ் கட்சியில் ராகுல் காந்தி வகித்துவரும் பாத்திரம் அனைவரும் அறிந்ததே. அவரது அன்னை அதிகாரபூர்வமில்லாத பிரதமராகவே கோலோச்சி வருகிறார். ராகுல் காந்தியும் கூட கட்சியின் அறிவிக்கப்படாத தலைவராகவே இருந்து வந்திருக்கிறார்.
சோனியா காந்தியும் ராகுல் காந்தியும் தான் நமது நாட்டின் அரசியல் அதிகாரத்தின் உச்சாணிகளாகக் கருதப்படுகிறார்கள். இந்நிலையில் ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டிருப்பது வியப்பளிக்கவில்லை.
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலைக் கருத்தில் கொண்டே, இந்த நியமனம் செய்யப்பட்டிருக்கிறது. அடுத்த தேர்லில் காங்கிரஸ் கட்சியின் பிரதமர் பதவிக்கான வேட்பாளராக ராகுல் காந்தியை முன்னிறுத்துவதற்கான முதல் படியே இந்த நியமனம் எனில் தவறில்லை.
ஆனால், இந்த முடிவு மேலிருந்து திணிக்கப்பட்டது என்பது கவலை அளிக்கிறது. தொண்டர்கள் விருப்பத்திற்காக இந்த நியமனம் செய்யப்பட்டிருப்பதாகக் கூறினாலும், இது உள்கட்சி ஜனநாயகம் என்ற சித்தாந்தத்துக்கே விரோதமானது.
ஆனால், பாஜகவில் நிகழ்ந்துள்ள உள்கட்சித் தேர்தல் வித்யாசமானது. அக்கட்சியில் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை கண்டிப்பாக உள்கட்சித் தேர்தல் நடத்தப்படுகிறது. கிராமக் கிளை முதற்கொண்டு, தேசியத் தலைவர் வரை குறிப்பிட கால இடைவெளியில் உள்கட்சித் தேர்தல் நடத்தப்பட்டு, கட்சியின் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
இதன் காரணமாகவே, பாஜகவுக்குள் அவ்வப்போது அதிகாரப் போட்டிகள் ஏற்பட்டு, அக்கட்சி அடிக்கடி ஊடகங்களில் செய்தியாகிறது. அதேசமயம், ஜனநாயக அடிப்படையில் உள்கட்சித் தேர்தலை அக்கட்சி தடையின்றி நடத்திவருவது குறிப்பிடத்தக்கது.
இப்போது பாஜக தேசியத் தலைவராக ராஜ்நாத் சிங் ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தாலும், அவரது தேர்வை கட்சியின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அங்கீகரிப்பது அவசியம். இதன் காரணமாகவே, தலைவராக வாய்ப்பிருந்தும் கூட, சிறு எதிர்ப்புகளுக்காக முன்னாள் தலைவர் நிதின் கட்கரி பதவி விலகி ராஜ்நாத்திற்கு வழிவிட்டிருக்கிறார்.
நிதின் கட்கரி மீதான ஊழல் புகார்கள் தான் அவரது அரசியல் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி உள்ளன. அவரது நிறுவனங்கள் செய்ததாகக் கூறப்படும் முறைகேடு தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதால் ஏற்படும் தர்மசங்கடத்தை உத்தேசித்தே அவர் பதவி விலகி இருக்கிறார்.
முன்னதாக, அவர் இரண்டாம் முறையாக கட்சித் தலைவர் பதவியைத் தொடர அவரது கட்சிக்குள்ளேயே எதிர்ப்பும் கிளம்பியது. உண்மையில் உள்கட்சி ஜனநாயகத்தின் சிறப்பே இதுதான்.
இதேபோன்ற நிதிமோசடிக் குற்றச்சாட்டுக்கள் ராகுல் காந்தி மீதும் உள்ளன. ஆனால் அரசியல் அதிகாரம் தங்கள் கையில் இருப்பதால் அதைப் பொருட்படுத்தாமல் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு தவிர்த்து வருகிறது. அதேசமயம், தனது அரசியல் எதிரியான பாஜகவின் உள்கட்சித் தேர்தல் நிகழும் நாளுக்கு முன்னதாக, அதன் தலைவர் தொடர்புடைய நிறுவனங்களில் வருமான வரி சோதனை நடத்த மத்திய அரசால் முடிகிறது.
இது ஒருவகையில் பாஜகவினருக்கு சுயபரிசோதனையாக அமைந்தது நல்லதே. இப்போது நிதின் கட்கரி போட்டியிலிருந்து விலக, கருத்தொற்றுமை அடிப்படையில் ராஜ்நாத் சிங் புதிய தலைவராகி இருக்கிறார்.
ஆக, இரு பிரதான அரசியல் கட்சிகளில் உள்கட்சி ஜனநாயகம் செயல்படும் கட்சி எது என்பது தெளிவாகவே தெரிகிறது. ஆனால் நமது பெருவாரியான ஊடகங்கள் வாரிசு அடிப்படையில் மகுடம் சூட்டும் காங்கிரûஸ விமர்சிக்கத் தயங்குகின்றன; அதேவேளையில், பாஜக தலைவர் தேர்தலில் குழப்பம் நிலவுவதாக செய்தி வெளியிட்டன.
ஜனநாயகத்தில் கருத்து மோதல்கள் இயல்பானவை. அதன் முடிவில் உருவாகும் சமரசப் புள்ளியே ஜனநாயகத்தின் அடிப்படை. மேலிருந்து திணிக்கப்படும் நியமனங்களில் கருத்து வெளிப்பாடுகளுக்கு இடமிருப்பதில்லை.
நமது ஊடகங்களோ தனிமனித வழிபாட்டையும் வாரிசு அரசியலையும் ஊக்குவிக்கும் நியமனங்களைப் பாராட்டுகின்றன; உள்கட்சி ஜனநாயகத்தை நடைமுறைப்படுத்தும் பாஜகவை கட்டுக்கோப்பில்லாத கட்சி என்று விமர்சிக்கின்றன. 'ஜனநாயகத்தின் நான்காவது தூண்' என்று வர்ணிக்கப்படும் ஊடகங்களின் இந்தக் குழப்பம், வாரிசு அரசியலை விட ஆபத்தானது.
No comments:
Post a Comment