என்ன மனிதர்கள்?
பேருந்தில் பயணித்துக் கொண்டிருக்கிறேன்.
இடப்புறம் இருவர் அமரக் கூடிய ஆசனத்தில் சாளரத்தை ஒட்டியவாறு அமர்ந்துகொண்டு, வேகமாய்க் கடந்து மறையும் இயற்கைக் காட்சிகளை ரசித்தவாறு - வசதியாக உட்கார்ந்திருக்கிறேன்.
எனக்கு ஒற்றைநாடி தேகம்.
ஒரு நிறுத்தத்தில் பேருந்து நிற்கிறது.
பத்துப் பதினைந்து பேர் கொண்ட கும்பல் முண்டியடித்து ஏறுகிறது. அவர்களது கண்களில், தங்கப் புதையலைத் தேடுகிற வேட்டைக்காரனின் ஆர்வம்.
அவரவர்கள், தங்களுக்கருகிலோ, இல்லை கண்ணுக்குத் தட்டுப்பட்டதாகவோ இருக்கும் ஆசனங்களை ஆக்கிரமிக்கப் போட்டியிட, சிலருக்குப் புதையல் கிடைக்கிறது. பலர் கண்களில் ஏமாற்றம் நிழலாடுகிறது.
என்னுடைய - அதாவது நான் அமர்ந்திருக்கும் - ஆசனமும் பங்கு போடப்படுகிறது. என் நித்திரைக் கண்களில் பயம் நிகழ்வாகிறது.
பக்கத்தில் அமர்ந்தவருக்கு 'இரட்டை நாடி' தேகம்.
அந்தச் சாலை சற்று கரடு முரடான பாதை. போதாவென்று கொண்டை ஊசி வளைவுகள் வேறு. பேருந்து ஆடி ஆடி நகர்கிறது.
'இரட்டை நாடி'யை பார்க்கிறேன். 'ஆ'வென வாய் பிளந்திருக்க, தலை தள்ளாட, தோளில் அணிந்திருந்த துண்டு தழைந்து கீழே நழுவிக் கொண்டிருக்க, உறக்கத்தில் அவர் உறைந்திருக்கிறார்.
சிலர் பேருந்து நகர ஆரம்பித்தவுடன் தூங்கி விடுகிறார்கள். பேருந்து 'தடதட'வென உருண்டாலும் சரி, 'கடகட'வென இரைந்தாலும் சரி, சிலர் பயணசீட்டு வாங்கக்கூட மறந்து - கும்பகர்ணனை மாறிப் போகிறார்கள்.
திடீரெனக் கவனிக்கிறேன்-
தன் இரு தொடைகளையும் அகட்டி வைத்து, என் ஆசனத்தின் பெரும்பகுதியை அவர் கைப்பற்றி இருக்கிறார்.
நான் குறுகி, சாளரத்துடன் ஒன்றி அமர்ந்திருக்கிறேன். என் இயலாமை குரோதமாய்ப் புகைகிறது.
அதற்கு ஏற்றாற்போல- பேருந்து குலுங்கும் ஒவ்வொருமுறையும் 'இரட்டை நாடி'யின் அதிரடித் தாக்குதல் என்னை மேலும் குறுக்க,
நான் 'இரட்டை நாடி'யை சபிக்கிறேன்.
பேருந்து இடப்புறம் திரும்பும் போதெல்லாம், நான் மேலும் நசுங்க, என்னுள் குரோதம் கொப்புளிக்கிறது. என்ன செய்யலாம்?
இதோ ஒரு வாய்ப்பு.
பேருந்து வலப்புறம் திரும்புகிறது.
என் மூளை மின்னல் வேகமாய் ஆணைகளைப் பிறப்பிக்க, என் சக்தி முழுவதையும் திரட்டி, என்னை நெம்புகோலாய் உருவகித்து, சாளரத்தையே சார்ந்து வலது புறம் நகர்கிறேன்.
தனது சமநிலை குலைந்து 'இரட்டை நாடி' ஆசனத்தின் ஓரத்துக்குச் சென்று ஆடிப்போகிறது. உடனே- கீழே விழுந்த குழந்தை எழும் முன் சுற்று முற்றும் பார்ப்பது போல- அசடு வழிய சுற்றுப்புறத்தை கவனித்து, என்னைப் பார்த்து இளித்து, மீண்டும் தூங்க ஆரம்பிக்கிறது.
என்ன திருப்தி! அடுத்தவன் அசடு வழிந்தால் எத்தனை ஆனந்தம்? எப்படிப்பட்ட பரவசம்?
ஆனால் சோதனைகள் தீரவில்லை. மீண்டும் இடப்புற வளைவுகள் வர, பேருந்து குலுங்க, என் நிலை பரிதாபமாகிப் போகிறது.
பாலைவனக் காற்றாய் அனல் பெருமூச்சு என்னுள்ளிருந்து வெளிப்பட, எப்படி இந்த 'இரட்டை நாடி'யை வீழ்த்துவது என்ற சிந்தனையிலேயே, சிந்தனையிலேயே, சிந்தனையிலேயே... என் கவனம் ஆழ்கிறது.
இவ்வுலகிலேயே நானும் 'இரட்டைநாடி'யும் மட்டுமே இருப்பது போல ஒரு மயான அமைதி நிலவ, என்னைத் தவிர எல்லோரும் நித்திரையில் லயித்திருக்க, என் கண்கள் வெஞ்சினத்துடன் செருக ஆரம்பிக்கின்றன. ஒரு கனவு நிகழ்கிறது...
என் முஷ்டி உயரும் போதெல்லாம் 'இரட்டை நாடி' அலற, இறுதியில் என் காலில் வீழ, போரில் வென்றுவிட்ட அசோகன் போல, ''என்ன மனிதர்கள்?'' என்று பெருமூச்செறிந்து விழிக்கின்றேன்.
திடீரென ஒரு தடுமாற்றம்:
'' அட, நானும் ஒரு மனிதன் தானே?''
திடுக்கிட்டு விழிக்கிறேன்; சுற்றிலும் பார்க்கிறேன்- இது என் வீடு.
ஓஹோ, இது கனவுக்குள் கனவு!
வாய் மட்டும் முணுமுணுக்கிறது:
'ச்சே, என்ன மனிதர்கள்?'
எழுதிய நாள்: 26 .12 .1991 .
(தங்கை உமா பெயரில் கல்லூரி மலரில் வெளியானது).
(தங்கை உமா பெயரில் கல்லூரி மலரில் வெளியானது).
.
No comments:
Post a Comment