எங்க ஊரு எம்.எல்.ஏ. எங்களுக்கு உதவலை.
எங்க கதை கேளுங்க- எப்படியோ வாழறோம்!
தேர்ந்தெடுத்த மக்களை ஏறெடுத்தும் பார்க்கலை.
காரினிலே போகிறார்- கால்நடையாய்த் தேயறோம்!
கும்பிடுகள் போட்டதால் குளிர்ந்துவிட்ட மனத்தினால்
நம்பி ஓட்டு போட்டபின் நடுத்தெருவில் நிற்கிறோம்!
அறிவிலியாய் ஓட்டினை அண்டப்புரட்டன் கையிலே
பறிகொடுத்துத் தவிக்கிறோம்- பாவம் எங்கள் தொகுதியே!
''தொகுதிக்கே வாழுவோம், தொண்டனாக உதவுவோம்,
வகுத்திடுவீர் எம்விதி, வள்ளல்களே வந்தனம்!
நாயைப் போல நன்றியாய் நற்பணிகள் செய்திட
நேயனுக்கு உதவுவீர்- நேற்றையதை மாற்றுவேன்!''
என்று சொல்லிச் சென்றபின், எங்களது ஓட்டினால்
வென்று சென்னை சென்றவர் வெறுத்துப் போக வைக்கிறார்!
'சொன்னதையே செய்கிறோம், சோகமதைத் துரத்துறோம்'
என்றறிக்கை சொல்லுறார் - எம்மிதயம் வேகுது!
திட்டம் போட்டுத் திருடர்கள் திருடுவதைப் போலவே
சட்டம் போட்டு மக்களை சகதியிலே தள்ளுறார்!
அடுத்த தேர்தல் வந்திடின் அனைவருமே ஓட்டினை
நடுத்தெருவின் காவலன் நாயினுக்குப் போடுவோம்!
எழுதிய நாள்: 13.05.1989
No comments:
Post a Comment