Showing posts with label நித்யானந்தம். Show all posts
Showing posts with label நித்யானந்தம். Show all posts

Monday, March 8, 2010

உருவக கவிதை - 40


நித்யானந்தம் - 5

தராதரம்

ஆடு நனைகிறதென்று
ஓநாய் அழுகிறது.
விழுங்கிய குட்டியை எண்ணி
கண்ணீர் விடுகிறது முதலை.
பயிரை மேய்ந்த வேலி
தராதரம் பேசுகிறது.
முதுகில் குத்திய கட்டாரி
ஞானோபதேசம் செய்கிறது.
சிக்கியவனை எச்சரிக்கிறது
ஆடி முடித்த தேகம்.

ஊரை விழுங்கிய பெருச்சாளி
மூஞ்சுறுக்களை மிரட்டுகிறது.
ஆபாசக் களஞ்சியம்
நாகரிகம் பேசுகிறது.
மொத்தத்தில்
வேதம் ஓதுகிறது சாத்தான்.

எது எப்படியோ
செய்தியிடை காட்டப்பட்ட
நீலப்படம் நின்றுவிட்டது.

காண்க: துரியன் சபதம் (07.03.2010) - http://kuzhalumyazhum.blogspot.com/2010/03/39.html

Sunday, March 7, 2010

உருவக கவிதை - 39


நித்யானந்தம் - 4

துரியன் சபதம்

பளிங்குத்தரை என்று இடறி
பொய்கையில் வீழ்கிறான் துரியன்.
இன்னோரிடத்தில் -
தடாகமென்று கால் நனைத்து
தடுமாறுகிறான்.
மீண்டும் நகைக்கிறாள் பாஞ்சாலி.

அந்தப்புரமெங்கும்
அம்பலமாகிறது
மாயமாளிகையில்
துரியனின் துயரம்.
குறுஞ்சிரிப்புடன் கடக்கும்
சேடிகளால் பரவுகிறது சேதி.
துரியன் செவிகளில்
எதிரொலிக்கிறது
பாஞ்சாலியின் கெக்கலி.

தொடை தட்டிச் சிரிக்கிறாள்
கலியுகப் பாஞ்சாலி.
மனதில் கறுவுகிறான் துரியன்.

எப்படியும் மாறும்
கலிகாலத்தில்
துரியனின் சபையில்
நியாயம் கேட்பாள் பாஞ்சாலி.

தன்னை இழந்த
அரசன் தருமன்,
தளபதி பீமன்,
நிர்வாகி விஜயன்,
சாத்திரன் நகுலன்,
நீதிமான் சகதேவன் -
ஐவரும் தரை பார்க்க
நடந்தேறும் துகிலுரிப்பு.

ஆடை பற்றுவான் துச்சன்.
பொய்கை வன்மத்துடன்
தொடை தட்டுவான் துரியன்.
ஐவரை மணந்தவளுக்கு
ஆபத்துதவியாய்
கண்ணன் வருவானா?
கரத்தில் அம்புடன்
காத்திருக்கிறான் கர்ணன்.

கண்கட்டிய காந்தாரியும்
மூலையில் முடங்கிய குந்தியும்
கண் கட்டாத துரோணரும் பீஷ்மரும்
முடங்க இயலாத திருதனும் விதுரனும்
மௌனமாய் அரற்றுவார்கள்.

எண்ணிக்கை வலிமையையும்
எள்ளலின் வன்மமும்
கூத்தாடும்.
மீண்டும் நிகழும் மகாபாரதம்.
நிறைவேறும்
துரியன் சபதம்.

வேடிக்கை பார்ப்பார்கள்
மக்கள்.

காண்க: என்றும் இன்பம் (06.03.2010)- http://kuzhalumyazhum.blogspot.com/2010/03/38.html

Saturday, March 6, 2010

உருவக கவிதை - 38


நித்யானந்தம் - 3

என்றும் இன்பம்

உங்கள் பெயரை உடனே மாற்றுவது
உத்தேசமாக நல்லது.
கோஷமிட்டு கொடி பிடிக்க
பக்தகோடிகள் தயார்!

உங்களுக்கென கட்சி துவங்குவது
உறுதியாய் நல்லது.
கூட்டணி அமைத்தால்
குற்றங்கள் மறையும்.

என்றும் இன்பத்துக்கு இன்றே மாறுங்கள்.
'என்றும் இன்பன்' ஆகுங்கள்!
கூடவே இருக்கிறார் கொ.ப.செ.

கட்சியின் பெயரில் 'கழகம்' இருக்கட்டும்.
சொத்துக்கள் கூடும்; சோகம் தொடராது.

'பகுத்தறிவை விட
பட்டறிவு மேலானது' -
அடுத்த புத்தகத்துக்கு
தலைப்பும் தயார்!

காண்க: பொது மாத்து (05.03.2010)- http://kuzhalumyazhum.blogspot.com/2010/03/37.html

Friday, March 5, 2010

உருவக கவிதை - 37


நித்யானந்தம் - 2

பொதுமாத்து

'பொது மாத்து' தெரியுமா?
கையாடல் செய்த
நிதிநிறுவன அதிபர்
வாங்குவது.
பேருந்தில் சிக்கிய
ஜேப்படித் திருடன்
வாங்குவது.
வகை தெரியாமல்
பேசிய தொண்டன்
வாங்குவது.
ஆவேசத் தொழிலாளர்களிடம்
அகப்பட்ட அதிகாரி
வாங்குவது.
முகத்திரை கிழிந்த
மோசடித் துறவி
வாங்குவது.

தனித்து இன்றி
பொதுவில் விழுவது;
பொது இலக்கில்
தனிநபர் குவிவது.

என்ன, ஏது என்று
கேட்பதற்குள்
விழுந்த மாத்து
விழுந்தது தான்-
திரும்பப் பெற இயலாது.

அப்பாவிகள் சிலநேரம்
அடிவாங்கலாம்
பொது மாத்தில்.
பாவிகள் தப்பியதில்லை -
விபசாரிகளையும்
அரசியல்வாதிகளையும் தவிர.

காரணகர்த்தர்கள்
காயம் படுவதில்லை;
காரியவாதிகளும்
காயம் படுவதில்லை.
காரணத்துக்கும்
காரியத்துக்கும் இடையே
காத்திருக்கிறது
'பொது மாத்து'.

காண்க: நிதமும் ஆனந்தம் (04.03.2010) - http://kuzhalumyazhum.blogspot.com/2010/03/36.html
.

Thursday, March 4, 2010

உருவக கவிதை - 36


நித்யானந்தம் -1

நிதமும் ஆனந்தம்

கதவைத் திறந்து வையுங்கள் -
காற்று வரட்டும்!
சாளரங்களை மூடிய
திரைகளையும் நீக்குங்கள்!
விளக்கொளியும் நறுமணமும்
அறைக்குள் நிறையட்டும்!
அறைக்குள் இருப்பது
அனைவருக்கும் தெரியட்டும்!

கதவைத் திறந்திடுங்கள் -
காற்று வரட்டும்!
ரகசிய விருந்தாளிகளுக்கு
திறந்த அறைகளில் இடமில்லை!
ஒளிப்படக் கருவிகளை
ஒளித்துவைக்கத் தேவையில்லை!
ஆனந்தமாக இருங்கள்!
நிதமும்
ஆனந்தமாக இருப்பீர்கள்!

காண்க: கொசுறு/ (06.02.2010)- http://kuzhalumyazhum.blogspot.com/2010/02/29.html
.

Saturday, February 6, 2010

உருவக கவிதை - 29


நித்யானந்தம் - 0

கொசுறு

அறைக்குள் புழுக்கம்
வர மறுத்தது உறக்கம்.
கதவைத் திறக்க
காற்று வந்தது.
கூடவே கொசுவும்.

காண்க: நிதமும் ஆனந்தம் (04.03.2010) - http://kuzhalumyazhum.blogspot.com/2010_03_04_archive.html
.