Tuesday, December 21, 2010

எண்ணங்கள்



தன்னெஞ்சறிவது பொய்யற்க!

அதீத தன்னம்பிக்கைக்கும் அகந்தைக்கும் நூலிழை அளவுதான் வித்யாசம் என்பார்கள். எந்த ஒரு செயலையும் சாதிக்க தன்னம்பிக்கை அவசியம். அதீதமான தன்னம்பிக்கை, அரிய சாகசங்களுக்கு அவசியம். ஆனால், அதை அநாகரிகமாக பொதுஇடத்தில் வெளிப்படுத்தும்போதுதான் அகந்தை ஆகிறது. தில்லியில் நடந்த காங்கிரஸ் தேசிய மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தொண்டர்களை உற்சாகப்படுத்த பேசிய பேச்சு அவரது தகுதிக்கு சற்றும் பொருத்தமாக இல்லை.

காங்கிரஸ் மாநாட்டில் மூன்றாம் நாளில் பேசிய ப.சிதம்பரம், "அடுத்த பத்து ஆண்டுகளில், ஏன் அதற்குப் பிறகும்கூட பாரதிய ஜனதாவால் மத்தியில் ஆட்சியைப் பிடிக்க முடியாது'' என்று பேசியிருக்கிறார். பாரதிய ஜனதாவின் எதிரி என்ற முறையில், அக்கட்சியைச் சாட காங்கிரஸ் கட்சிக்கு உரிமை உள்ளது. எனினும், ஜனநாயக ஆட்சிமுறையில் மக்களே அனைவருக்கும் எஜமானர்கள் என்பதை மறந்துவிடக் கூடாது.

நாட்டின் முதல் பிரதமராக ஜவஹர்லால் நேரு இருந்தபோதே, பல மாநிலங்களில் எதிர்க்கட்சிகள் ஆட்சியைப் பிடித்தன. அதனை அவர் தனது பலவீனமாகக் கருதவில்லை; ஜனநாயகத்தின் பலமாகவே கருதினார்.

"இந்திராவே இந்தியா; இந்தியாவே இந்திரா' என்று ஒரு காலத்தில் முழங்கிய கட்சிதான் காங்கிரஸ். அதே இந்திராகாந்தி தனது சொந்தத் தொகுதியிலேயே தோல்வியுற்று, 1977ல் ஜனதாவிடம் ஆட்சியைப் பறிகொடுத்தது வரலாறு. நெருக்கடிநிலையை அடுத்து, எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து காங்கிரஸ் கட்சியை வீட்டுக்கு அனுப்பும் என்று யாரும் கனவில்கூட சிந்தித்திருக்கவில்லை.

காங்கிரஸ் சரித்திரத்திலேயே இல்லாத சாதனையாக, 1984ல் 404 காங்கிரஸ் எம்பி.க்களுடன் பிரதமரான ராஜீவ்காந்தி, அடுத்த தேர்தலில் தனது அமைச்சரவை சகாவாக இருந்தவரிடமே படுமோசமான தோல்வியைத் தழுவி, ஆட்சியைப் பறிகொடுத்தார். அதுவும், வெறும் 65 கோடி கமிஷன் கைமாறிய போபர்ஸ் ஊழலுக்காக. இதை காங்கிரஸ் இன்றும் துர்க்கனவாகவே என்றும் நினைக்கும்.

இதையெல்லாம் தற்போதைய மத்திய உள்துறை அமைச்சருக்கு நினைவுபடுத்த வேண்டிய நிலை இருப்பதே, காங்கிரஸ் கட்சியின் தார்மிக வீழ்ச்சிக்கு காரணம் என்று கருத வேண்டியுள்ளது.

1998ல் 13 கட்சிகளை ஒருங்கிணைத்து தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் பிரதமரான அடல் பிஹாரி வாஜ்பாய், அடுத்த ஆறு ஆண்டுகள் காங்கிரஸ் வாடையில்லாத ஆட்சியை நாட்டிற்கு அளித்தார் என்பதையும் சரித்திரம் பதிவு செய்துள்ளது. பாஜக செய்த தவறுகளின் விளைவாகவே மீண்டும் காங்கிரஸ் ஆட்சி நாட்டில் உதயமானது. இதுவே நமது மக்களாட்சி முறையின் மாண்பு.

"இந்தியா ஒளிர்கிறது' என்ற கோஷத்துடன் அதீத தன்னம்பிக்கையுடன் தேர்தல்களம் கண்ட பாஜக, 2004ல் ஆட்சியை இழந்தது. இன்று அதேபோன்ற நிலையில்தான் காங்கிரஸ் கட்சியும் உள்ளது என்பதை அக்கட்சித் தலைவர்களுக்கு சுட்டிக்காட்ட வேண்டியது அவசியம்.

பல லட்சம் கோடி ஊழல் குற்றச்சாட்டுகளால் மத்திய அரசின் நம்பகத்தன்மை பலத்த அடி வாங்கியுள்ள சூழலில், தனது குறைகளை சரிப்படுத்த முயற்சிக்காமல், பிரதான எதிர்க்கட்சியை கேலி செய்வது, காங்கிரஸ் கட்சியின் எதிர்காலத்திற்கு கண்டிப்பாக உதவாது.

மத்திய அரசின் ஊழல்களை அம்பலப்படுத்தும் பிரதான எதிர்க்கட்சி மீது பாய்வதால் மத்திய அரசின் தளகர்த்தர்கள் இப்போதைக்கு சந்தோஷம் அடையலாம். ஆனால், இதன்மூலம் தனது ஒரே எதிரி பாஜக என்பதை காங்கிரஸ் ஒப்புக்கொண்டு, அடுத்த தேர்தலில் அத்வானியின் வாய்ப்புகளை அதிகரிக்கிறது. அரசியலில் இருதுருவ சேர்க்கைக்கே, காங்கிரஸின் தற்போதைய நடவடிக்கைகள் ஊக்கமளிக்கின்றன.

"ஆட்சியை எப்படி நடத்துவது, மீண்டும் எப்படி ஆட்சிக்கு வருவது என்பதையெல்லாம் காங்கிரஸ் கட்சிதான் அறிந்துவைத்திருக்கிறது'' என்றும் ப.சிதம்பரம் கூறியிருக்கிறார். 2009 நாடாளுமன்றத் தேர்தலில் சிவகங்கை தொகுதியில் நடந்த வாக்கு எண்ணிக்கைதான் நமது நினைவில் வந்துபோகிறது. ஊழல் வழக்குகள் தொடர்பாக, உச்சநீதி மன்றம் மத்திய அரசை தொடர்ந்து விமர்சிக்கும்போதே தற்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் லட்சணம் தெரிகிறது.

இத்தனைக்கும் பிறகும், அடுத்த தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியே ஆட்சியைப் பிடிக்கும் என்று மனப்பால் குடிக்க காங்கிரஸ் கட்சிக்கு உரிமை உண்டு. தனது தொண்டர்களை உசுப்பேற்ற சில அரசியல் வசனங்களை அக்கட்சித் தலைவர்கள் பேசுவதிலும் தவறில்லை. பேசட்டும்.
அதேசமயம், தனது பேச்சுக்கு கரவொலி எழுப்பும் தொண்டர்கள் போல நாட்டு மக்களும் முட்டாள்களல்ல என்பதையும் உள்துறை அமைச்சருக்கு யாரேனும் சொன்னால் நல்லது.

.

No comments:

Post a Comment