Friday, February 11, 2011

வசன கவிதை - 87




யாருடைய
குற்றம்?


குடும்பம் கேட்டுப் போச்சுங்க...
பொண்டாட்டி போயிட்டா..
பெத்த புள்ளையும் போயிருச்சு..
பேரனும் செத்திட்டான்..
அப்பறம் நமக்கு நடுத்தெருதானே போக்கிடம்?

பலமாத தாடியை சொறிந்தபடி
கண்களில் ஒளியுடன் விவரிக்கிறான்
கந்தலாடைப் பிச்சைக்காரன்.

நான் நல்லா நடிப்பேனுங்க..
ஊருல நாடகம் போட்டா
நான் தானுங்க மேடையில டான்சு
எம்ஜியார், சிவாஜி, எம்மார்ராதா
யாரு மாதிரி வேணாலும் நடிப்பேனுங்க.

இப்பக் கூட ரத்தக் கண்ணீர் படப் பாடலை
அற்புதமாப் பாடுவேங்க...
''குற்றம் புரிந்தவன் வாழ்வினில் நிம்மதி கொள்வதென்பதேது?''
உச்சஸ்தாயியில் அவன் பாட,
தெருவில் சென்ற நாயொன்று திரும்பி நின்று பார்த்துவிட்டு
நடையைக் கட்டுகிறது.

அவனது தலைமாட்டில் பிளாஸ்டிக் குப்பை மூட்டை.
எப்படியும் ஒருநாளுக்கு ஐம்பது ரூபாய் தேறிவிடுகிறது.
அது 'கட்டிங்' போடவே போதாமல் போகிறது.
ஒரு கட்டு பீடி ஒரு ரூபாய் இருந்தது இப்போது ஐந்து ரூபாய் ஆகிவிட்டது.
விலைவாசி ஏற்றம் பிச்சைக்காரனையும் பாதிக்கிறது.

எல்லாக் கதையையும் கேட்டுவிட்டு
பத்து ரூபாய் எடுத்து நீட்டுகிறேன்.
''நான் பிச்சைக்காரன் இல்லைங்க சார்,
தெருப்பொறுக்கி.
ஊர்க்குப்பையில் வாழ்பவன் நான்.
பரவாயில்லை கொடுங்க.. ரெண்டு கட்டு பீடிக்கு ஆகும்...''

என்கிறார் தெருவோர அநாதை.
குடும்பம் கெட்டவர்களை இனிமேலும்
எப்படி வேண்டுமானாலும் அழைக்கக் கூடாது.

சுற்றிலும் மொய்க்கும் ஈக்களை விரட்டியபடி,
அடுத்த பாடலைத் துவக்குகிறார் -
''எல்லோரும் நலம் வாழ நான் பாடுவேன், நான் வாழ யார் பாடுவார்?''
வண்டியை விரட்டி வீடு சேர்ந்த பின்னும்
பாடல் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.

.

1 comment:

வினோ said...

எத்தனை விசயங்கள்....

Post a Comment