பின்தொடர்பவர்கள்

Tuesday, February 22, 2011

எண்ணங்கள்சாயம் போன தொழில்... சாரமிழக்கும் எதிர்காலம்...

நீலநிறச் சாயத்தொட்டியில் விழுந்த நரி வினோத விலங்காக வனத்தையே அதிரவைத்ததும், மழையில் நனைந்து சாயம் போனவுடன் அதன் சுயரூபம் வெளுத்ததும் பலரும் அறிந்த கதைதான்.

பல்லாயிரம் கோடி அந்நியச் செலாவணியை நாட்டுக்கு ஈட்டித் தரும் பின்னலாடைத் தொழில்நகரான திருப்பூரின் சுயரூபமும் சாயஆலைகளின் சுயநலம் வெளுத்தபோது வெளியானது.

சாயஆலைகளின் சாயத்தை வெளுக்கச் செய்த சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பு (ஜன. 28), ஒருவகையில் சுற்றுச்சூழலுக்கு ஆதரவாக இருப்பினும், தொழில்துறை வளர்ச்சி மீதான கடுமையான அடி எனில் மிகையில்லை. கண்களை விற்றுச் சித்திரம் வாங்குவதுபோல, நமது வாழிடத்தின் சூழலை நாசம்செய்து சம்பாதிக்கும் லாபங்களால் இறுதியில் கிடைப்பது பேரழிவாகவே இருக்கும்.

திருப்பூரில் செயல்படும் அனைத்து சாய, சலவை ஆலைகளையும் மூடுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது, இறுதிக்கட்ட நடவடிக்கையே. அதற்கு முன் நீதிமன்றம் வழங்கிய பல வாய்ப்புகளையும் அசட்டையாக தவறவிட்ட தொழில்துறையினர் மட்டுமே, தற்போதைய இக்கட்டான நிலைக்கு பொறுப்பானவர்கள் அல்ல; நதிநீர் மாசுபடாமல் காக்க வேண்டிய கடமையை நிறைவேற்ற வேண்டிய மாசுக் கட்டுப்பாடு வாரியம், உள்ளாட்சி அமைப்புகள், பொதுப்பணித் துறை உள்ளிட்ட அரசு நிர்வாகங்களுக்கும் இதில் பொறுப்புண்டு.

நாகரிக சமுதாயத்தில் தொழில்துறை வளர்ச்சி தவிர்க்க இயலாதது. ஆனால், அது வீக்கமாக இருக்கக் கூடாது. பின்னலாடை உற்பத்திக்குப் பெயர் பெற்ற திருப்பூரின் வளர்ச்சி, சுற்றுச்சூழலைப் பலிகொடுத்துப் பெற்ற வளர்ச்சி.

உண்மையில் இது ஒரு வீக்கமே. சாயஆலைகளும் சலவை ஆலைகளும் வெளியேற்றிய கழிவுநீரின் அபாயம் அறியாமல் தொழில்துறையினர் வெளிநாட்டு டாலர்களைக் குவித்துக் கொண்டிருந்த நேரத்தில், நமது அன்னைபூமியும் ஜீவநதி நொய்யலும் களங்கப்பட்டுக் கொண்டிருந்தன. இதைத் தடுத்திருக்க வேண்டிய அரசுத் துறைகள், ஆபத்தை உணர்ந்தும் கையூட்டுப் பெற்றுக்கொண்டு அனுமதித்தன.

நமது அரசு நிர்வாகத்தில் புரையோடிப்போன லஞ்சமும் ஊழலும் தான் சாயக் கழிவுநீரால் மண்ணும் நீரும் மாசுபடக் காரணம். அரசில் படர்ந்த மாசு தான், இப்போது நொய்யல் நதியில் கருமையும் துர்நாற்றமும் கொண்ட கழிவுநீராக கண்ணுக்குத் தெரிகிறது. இப்போது நீதிமன்றத் தலையீட்டால் தொழில்துறை நிலைகுலைந்திருக்கும்போது, அரசு தனது பொறுப்பைத் தட்டிக் கழிக்க முடியாது.

அதிகமான உப்படர்த்தி கொண்ட சாயக்கழிவுநீரை முழுமையாகச் சுத்திகரிக்காமல் வெளியேற்றக் கூடாது என்பது, நீதிமன்றம் அறிவுறுத்திய பிறகே தெரிய வேண்டிய விஷயமல்ல. இது சாத்தியமல்ல என்றால், நீதிமன்றத்தில் இதற்கு தொழில்துறையினர் ஒப்புக் கொண்டிருக்கக் கூடாது. ஆனால், நமது அரசு நிர்வாகங்களை எப்படியும் சரிக்கட்டி விடலாம் என்ற நம்பிக்கையில்தான் "ஜீரோ டிஸ்சார்ஜ்' எனப்படும் முழுமையான சுத்திகரிப்புக்கு சாய, சலவை ஆலைகள் உத்தரவாதம் அளித்தன. இப்போது நீதிமன்றம் தலையிட்டவுடன் அரசும் சார்புத் துறைகளும் பின்வாங்குகின்றன. தொழில்துறை நடுவில் சிக்கிக்கொண்டு தத்தளிக்கிறது.

உண்மையில் தொழிற்சாலைக் கழிவுகள் மட்டுமே நதிநீரை மாசுபடுத்துகின்றன என்று கூற முடியாது. சாயஆலைகள் மூடப்பட்ட பிறகும்கூட நொய்யல் நதியில் தொடரும் கழிவுநீரின் நாற்றம், பிரச்னையின் தீவிரத்தை உணர்த்துகிறது.

நமது வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர் சாக்கடைக் கால்வாய்கள் வாயிலாக கடைசியில் ஆறுகளில்தான் சங்கமிக்கிறது. இதனைத் திருப்பூரில் மட்டுமல்ல, நாடு முழுவதிலுமே காண முடியும்.

நதியில் சாக்கடையை இணைப்பதுடன் தங்கள் பணி முடிந்துவிடுவதாக நினைக்கும் உள்ளாட்சி அமைப்புகளின் அத்துமீறலும் நதி மாசுபட அடிப்படைக் காரணம். நதியின் தூய்மையைப் பராமரிக்க வேண்டிய பொதுப்பணித் துறையின் அலட்சியத்துக்கும் இதில் பெரும் பங்குண்டு. ஆக மொத்தத்தில், மூடப்பட வேண்டியவை, விபரீதம் அறியாமல் செயல்பட்ட சாயஆலைகள் மட்டுமல்ல, செயல்படாத அரசுத் துறைகளும்தான்.

இதுவரை நடந்தவை நடந்தவைதான். அவற்றை உடனடியாக மாற்ற முடியாது என்பதும் உண்மையே. ஆயினும், ஆறுகளில் கலக்கும் சாக்கடையைத் தடுப்பது, அதனைச் சுத்திகரித்து வெளியேற்றுவது போன்ற பணிகளில் இப்போதாவது அரசு கவனம் செலுத்த வெண்டும். சாய, சலவை ஆலைகள் கோருவதுபோல 80 சதவிகிதம் சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரை குழாய் மூலமாக கடலில் சேர்க்க முடியுமா என்பதை அரசு விரைந்து பரிசீலித்து செயல்படுத்துவது அவசியம். ஏனெனில், இந்தச் சிக்கலுக்கு வித்திட்டது அரசின் அலட்சிய மனப்பான்மையே.

அரசின் தவறுகளுக்காக, திருப்பூர் தொழில்துறையை நம்பியுள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைக் கேள்விக்குறி ஆக்கிவிடக் கூடாது. சாய, சலவை ஆலைகளின் மூடலுடன் இப்பிரச்னை நின்றுவிடாது. கூடிய விரைவில் இந்தச் சிக்கலுக்கு இயன்ற தீர்வு காணாவிடில், திருப்பூர் தொழில்துறை சாரமிழப்பது மட்டுமன்றி, பல மாவட்டங்களில் சட்டம் ஒழுங்கும், மாநிலத்தின் வருவாயும், நாட்டின் அந்நியச் செலாவணியும் பாதிக்கப்படலாம்.

நசிந்துவிட்ட விவசாயத்தை புனருத்தாரணம் செய்வது எத்தனை அவசியமோ, அதே அளவுக்கு தொழில்துறை வீழ்ச்சியைத் தடுப்பதும் அவசியம். தவறுகளிலிருந்து நாம் கற்கும் படிப்பினைகள் முன்னேற்றத்துக்கான படிக்கட்டுகளாக வேண்டும்; தண்டனைகளாகிவிடக் கூடாது.


நன்றி: தினமணி (22.02.2011)
தலையங்கப் பக்க துணைக்கட்டுரை
..

1 comment:

Anonymous said...

10 கோடியில் வீடு கட்டும் சாய தொழில் பட்டறை அதிபர்கள் ஆளுக்கு ஒரு கோடி போட்டு ஒரு நல்ல காரியத்திற்கு உதவ முன்வந்தால் என்ன?

மக்கள் எப்பொழுதும் அரசாங்கத்தையே குறை சொல்லி வாழ்வது என்பது வழக்கமாகி கொண்டுள்ளது... ம்ம்ம்ம்

Post a Comment