பின்தொடர்பவர்கள்

Saturday, February 5, 2011

எண்ணங்கள்வாடிக்கையாளர்களை வங்கிகள் வாட்டலாமா?


''வாடிக்கையாளர் என்பவர் நமது வளாகத்துக்கு வரும் மிக முக்கியமான நபர். அவர் நம்மைச் சார்ந்திருக்கவில்லை; நாம்தான் அவரைச் சார்ந்திருக்கிறோம். நமது வேலையில் தொந்தரவு செய்பவர் அல்ல அவர்; நமது வேலையின் ஆதாரமே அவர்தான்...''

- மகாத்மா காந்தியின் இந்தப் பொன்மொழிகள் பெரும்பாலான வங்கிகளில் அலங்காரமாக வைக்கப்பட்டிருப்பதைக் காணலாம். இதற்கு நேர்மாறான அணுகுமுறையுடன் பொதுத்துறை வங்கிகளின் ஊழியர்கள் பணிபுரிவதையும் காண்கிறோம். அதைவிடக் கொடுமை, வாடிக்கையாளரின் சொந்தப் பணத்தை அவரே திரும்பப் பெற வங்கியில் அபராதம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பது.

வாடிக்கையாளர்கள் வங்கியில் தாங்கள் முதலீடு செய்துள்ள நிரந்தர வைப்புத்தொகையை முதிர்வுக்காலத்துக்கு முன் திரும்பப் பெற்றால், அவர்களது முதலீட்டுத்தொகை மீது ஒரு சதவிகித அபராதம் விதிக்கும் நடைமுறை சமீபகாலமாக பல வங்கிகளில் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இது வாடிக்கையாளர்களின்மீது சுமத்தப்படும் அநியாயம். சொந்தச் செலவில் சூனியம் வைத்துக்கொள்வது என்பது இதுதான்.

இதைத் தடுக்க வேண்டிய ரிசர்வ் வங்கியே, இதுதொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரத்தை அந்தந்த வங்கிகளுக்கே வழங்கிவிட்டது. இதன்பயனாக, பல தனியார் வங்கிகள் தங்கள் முதலீட்டாளர்கள் மீது அபராதம் விதித்து வருகின்றன. இது வங்கியில் பணத்தை முதலீடு செய்வதன் அடிப்படை நோக்கத்தையே சிதைப்பதாக உள்ளது.

சேமிப்பு, பாதுகாப்பு ஆகிய இரு காரணங்களுக்காகவே வாடிக்கையாளர்கள் பணத்தை முதலீடு செய்கின்றனர். அதிலும் அடிக்கடி பணத்தை சில்லரையாக எடுக்கவும் போடவும் விரும்புபவர்கள் சிறுசேமிப்புக் கணக்கையே பயன்படுத்துகின்றனர். அவர்களிடம் கவர்ச்சிகரமான முதலீட்டுத் திட்டங்களை முன்வைத்து நிரந்தர வைப்புத்தொகைகளை வங்கிகள் பெறுகின்றன.

அதிகமான வைப்புத்தொகைகளைத் திரட்டுவது வங்கி நிர்வாகங்களின் இலக்காக உள்ளது. இந்த வைப்புத்தொகைகளே வங்கிகளின் இருப்பிலும் பிறதுறை முதலீட்டிலும் பெரும் பங்கு வகிக்கின்றன. அதேசமயம், வைப்புத்தொகையை முதலீடு செய்த வாடிக்கையாளருக்குக் கிடைக்கும் வட்டிவிகிதம் ஒப்பீட்டுநோக்கில் குறைவே.

குறைந்தபட்சம் ஐந்தாண்டுக் காலஅளவுக்கு வங்கியில் முதலீடு செய்யப்படும் வைப்புத்தொகைக்கு மாறாக தங்கத்திலோ நிலத்திலோ முதலீடு செய்தால், வங்கியில் கிடைக்கும் லாபத்தைவிட அதிக லாபம் உண்டு என்பது அனைவருக்கும் தெரியும். ஆயினும், பாதுகாப்பு, அவசரத் தேவைக்குக் கிடைக்கும் அனுகூலம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டே, வங்கியில் வைப்புத்தொகையில் சேமிக்க மக்கள் முன்வருகிறார்கள்.

அதில்தான் இப்போது அடி விழுந்திருக்கிறது. ஏற்கெனவே பல தனியார் வங்கிகளில் நிரந்தர வைப்புத்தொகையை முதிர்வுகாலத்துக்கு முன் திரும்பப் பெற அபராதம் விதிக்கும் நடைமுறை தொடங்கிவிட்டது. இன்னும் சில வங்கிகளில் ரூ. 5 லட்சத்துக்கு மேற்பட்ட வைப்புத்தொகையைத் திரும்பப் பெற மட்டும் அபராதம் விதிக்கப்படுகிறது.

இவ்வாறு விதிக்கப்படும் அபராதத்தின் அளவு முதலீட்டுத்தொகையில் ஒரு சதவிகிதம் முதல் 3 சதவிகிதம் வரை இருக்கிறது. சில வங்கிகள், முதிர்வுகாலத்துக்கு முன் வைப்புத்தொகைகளைத் திரும்பப் பெற பல கால அளவு நிபந்தனைகளையும் வைத்துள்ளன. இது வட்டி கிடைக்கும் என்று ஆசைப்பட்டு முதலீடு செய்யும் வாடிக்கையாளர்களை ஏமாற்றுவது மட்டுமல்ல; அவர்களைக் கொள்ளையடிப்பதும் ஆகும்.

எந்த ஒரு வாடிக்கையாளரும் நிரந்தர வைப்புத்தொகையாக முதலீடு செய்ய முனையும்போது முதிர்வுகாலத்துக்குள் திரும்பப் பெற வேண்டும் என்று எண்ணுவதில்லை. அதேசமயம், வாழ்க்கையில் நிகழும் கட்டாயச்சூழல்களால் அவசரமாக வைப்புத்தொகையைத் திருப்ப வேண்டி நேரலாம்.
அத்தகைய நிலையில், வாடிக்கையாளர் வங்கியில் பணத்தைச் சேமித்த ஒரே காரணத்துக்காக, அவரது பணத்தைத் திருப்பித் தர அபராதம் வசூலிப்பது எந்தவகையிலும் நியாயமானதல்ல. இதற்காகவா வங்கியில் பணத்தை முதலீடு செய்தோம் என்று புலம்பும் நிலையை வாடிக்கையாளருக்கு வங்கிகள் ஏற்படுத்தக் கூடாது.

வைப்புத்தொகைகளை திடீரென திரும்பப் பெறுவதால் வங்கிகளின் நிதிஇருப்பில் சிக்கல் ஏற்படுவதைத் தவிர்க்கவே, இந்த அபராத முறை அமல்படுத்தப்படுவதாக வங்கி நிர்வாகங்கள் கூறுகின்றன. அனைத்து வாடிக்கையாளர்களும் ஒரேநேரத்தில் வைப்புத்தொகைகளைத் திரும்பப் பெறப்போவதில்லை என்ற உண்மையை ரிசர்வ் வங்கி கவனத்தில் கொள்ளாதது ஏன் என்று தெரியவில்லை.

இந்த நடைமுறை, வங்கிகளில் பணத்தைச் சேமிக்கும் எண்ணத்தையே மறுசிந்தனைக்குள்ளாக்குகிறது. இதன்காரணமாக, வங்கிகள் தவிர்த்த தனியார் நிதி நிறுவனங்களை நாட வேண்டிய நிர்பந்தம் மக்களுக்கு ஏற்படுகிறது. வாடிக்கையாளர் சேவை என்ற வங்கிகளின் அடிப்படை அம்சமே இம்முறையால் காலாவதி ஆகிவிட்டது. இப்போதைய புதிய நடைமுறையை ரிசர்வ் வங்கி மறுபரிசீலனை செய்வது அவசியம்.

"...வாடிக்கையாளர் நமது வியாபாரத்தில் வெளியாள் அல்ல; அதன் ஒரு பகுதி. அவருக்குச் சேவை செய்வதன் மூலம் நாம் அவர்களுக்கு எந்தச் சலுகையும் தருவதில்லை; மாறாக, அவருக்குச் சேவை செய்ய வாய்ப்பளித்ததன் மூலமாக அவர்தான் நமக்குச் சலுகை காட்டுகிறார்'' என்று தனது பொன்மொழியின் இறுதியில் கூறுகிறார் மகாத்மா காந்தி. இதை வங்கிகள் மறந்துவிடக் கூடாது.

நன்றி: தினமணி (05.02.2011)
தலையங்கப் பக்க துணைக் கட்டுரை
..

1 comment:

kargil Jay said...

கடைசியில் சொன்னீர்கள் பாருங்கள், அது மிகச் சரியான பாயிண்ட். வங்கிகள் எல்லாம் சேர்ந்து ஒரு நாளைக்கு நூறு கோடிக்கு மேல் பரிமாற்றம் செய்து கொள்கின்றன. இதில் ஒருவர் வைப்புத் தொகையை எடுத்தால் அது கொசு கடித்தால் மாதிரிதான். இம்மாதிரி பணத்தை எடுத்தக் கொள்வது அரசாங்கமே செய்யும் திருட்டு.

Post a Comment