Sunday, January 23, 2011

உருவக கவிதை - 71



அவரவர் அரசியல்





புகார் கூறப்பட்டவர் எவரும் குற்றவாளி அல்ல.
ஊழல் புகார் கூறப்பட்டதற்காகவே எவரும்
பதவி விலகியதாக சரித்திரம் இல்லை.
குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும் வரை
யாரும் குற்றவாளி இல்லை.

பொதுஇடத்தை மானிய விலைக்கு
சொந்தக்கிரயம் செய்துகொள்வது
அரசியலில் புதிதில்லை.
பெற்றவர்களுக்கு அரசு நிலத்தை தாரை வார்ப்பதிலும்
முன்னுதாரணங்கள் இல்லாமலில்லை.

மறைத்து வாங்கியதைத் திருப்பி அளித்துவிட்டதால்
குற்றம் சாட்ட முடியாது.
குற்றம் சாட்டுபவரின் ஊழலை அமபலப்படுத்தினால்
யாரும் குற்றம் கூற முடியாது.

மறைமுக விற்பனை மோசடி அல்ல.
வாங்கியவர்களிடம் கூடுதல் தொகை வசூலித்துவிட்டால்
குறைகூற முடியாது.
தலைமைக்குத் தெரிந்தே செய்த எதுவும்
மோசடியாகிவிடாது.

எனக்கு முன் பதவி வகித்தவர்கள்
காட்டிய வழியில்தான் என் பயணம்.
அவர்கள் செய்தது ஊழல் இல்லை என்றால்
நானும் ஊழல் செய்திருக்க முடியாது.

ஆளுநர் மாளிகைகளும் நீதிமன்ற மாடங்களும்
ஆட்சியைக் கவிழ்க்கத் துடிப்பவர்களின்
ஏவலர்களாகிவிட்ட நிலையில்,
ஊழல் புகாரை யார் மீதும் கூற முடியும்.
அதற்காகவெல்லாம் பதவி விலகிக் கொண்டிருக்க முடியாது.

மத்தியில் ஆளுங்கட்சியை எதிர்க்கும் அதே கட்சியின்
மாநில அரசிலும் இதே வசனம்...
மாநிலத்தில் நேர்மை பேசும் அதே கட்சியின்
மத்திய அரசிலும் இதே வசனம்...

ஊழல் குற்றவாளி வெளிநாடு தப்ப
உதவியவருக்கு கிடைத்த உயர்மட்டப் பதவியால்
ஆளுநர் மாளிகையிலும் இதே வசனம்.
அழகிகளுடன் சல்லாபத்தால் ஊரே நாறிய
நீதிமன்ற வளாகத்திலும் அதே வசனம்.

ஆட்சியைக் கவிழ்க்கவே ஊழல் புகார்கள்
எதிரிகளால் குப்பையாகக் கொட்டப்படுகின்றன.
ஆட்சியைப் பிடிக்கவே ஊழல் புகார்கள்
ஆதாரமின்றி அலசப்படுகின்றன....

- மாநிலங்களிலும், மத்தியிலும்,
ஏன் உள்ளாட்சிகளிலும் கூட,
இந்த வசனங்கள் பொதுவாகிவிட்டன.

அரசியல் சினிமா ஆகிவிட்டது.
வசனங்கள் பொதுவாகி விட்டன.
நடிகர்கள் மாறலாம்; காட்சிகள் மாறுவதில்லை.
மேடைகள் மாறலாம்; ஒப்பனைகள் மாறுவதில்லை.
இடங்கள் மாறலாம்; வசனங்கள் மாறுவதில்லை.

அவரவர் அரசியல்... அவரவர் விருப்பம்.
பார்வையாளர்களாக மக்கள்...
அவர்களும் மாறுவதாகத் தெரியவில்லை.
...

1 comment:

Thirumalai Kandasami said...

ஹிந்தி - அறிந்தும் அறியாமலும்.

http://enathupayanangal.blogspot.com

Post a Comment