Thursday, January 6, 2011

எண்ணங்கள்




கூழுக்கும் ஆசை...

மீசைக்கும் ஆசை....


அண்மையில் தமிழகம் வந்த காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலர் ராகுல் காந்திக்கு பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டது. இஸட் பிளஸ் பிரிவில் இருக்கும் அவர், தமிழகத்தில் இருந்த இரு நாள்களும் தமிழகக் காவல்துறை பலத்த முன்னேற்பாட்டுடன் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தது. ஆனால், பாதுகாப்பு விதிமுறைகளை மீறும் வகையில் பல இடங்களில் ராகுல் காந்தியே நடந்துகொண்டதால், காவல்துறையினர் சிரமத்துக்கு உள்ளாயினர்.

தமிழகத்தில் 1991-ல் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டதை யாரும் மறந்துவிட முடியாது. அந்தச் சம்பவத்தில் ராஜீவ் காந்தி மட்டுமல்லாது காவல்துறையினர் உள்பட 14 பேர் கொல்லப்பட்டனர்.
அதன்பிறகே முக்கிய அரசியல் தலைவர்களுக்குப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இதிலும் பல்வேறு பிரிவுகளில் தலைவர்களை வகைப்படுத்தி பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. இதற்கென ஆண்டுதோறும் பலகோடி ரூபாய் மத்திய அரசால் செலவிடப்படுகிறது.

இந்தப் பாதுகாப்பு, தலைவர்களின் உயிரைப் பாதுகாப்பது மட்டுமல்லாது, மக்களுக்கு ஏற்படும் தொடர் விளைவுகளையும் தடுக்கிறது. எனினும், தங்களுக்கு அளிக்கப்படும் பாதுகாவலை உறுதிப்படுத்தும் பொறுப்பு, பாதுகாக்கப்படும் தலைவருக்கும் உண்டு. இதனை ராகுல் காந்தி அடிக்கடி மறந்துவிடுகிறார்.

தமிழகத்தின் பல இடங்களில் பாதுகாப்பு வளையத்தை மீறிய ராகுல் காந்தி, மக்களிடமும் தொண்டர்களிடமும் அளவளாவினார். இதனை, ராகுலின் பெருந்தன்மையை வியந்தோதும் செய்திகளாக ஊடகங்கள் வெளியிட்டன. ஆனால், இந்த வழக்கம் கண்டிக்கத்தக்கது என்பதை இதுவரை எந்த ஊடகமும் சுட்டிக் காட்டவில்லை.

ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் காந்தியை பலிகொண்ட வெடிகுண்டுப் பெண் தனு காங்கிரஸ் நிர்வாகிகள் சிலரது உதவியுடன்தான் அங்கு வர முடிந்தது என்பது விசாரணையில் தெரியவந்தது. எனவே, முக்கிய தலைவர்களின் பாதுகாப்பைப் பொறுத்த மட்டிலும், எந்தவித சமரசத்துக்கும் இடம் அளிக்கக் கூடாது.

சொந்தக் கட்சியினரே ஆனாலும், இஸட் பிளஸ் பிரிவில் பாதுகாக்கப்படும் தலைவர்களை நெருங்க பல சோதனைகளும் கட்டுப்பாடுகளும் உள்ளன. பாதுகாக்கப்படும் தலைவரே அதை மீறுவதைவிட வேறு அபாயம் இருக்க முடியாது.

உதாரணமாக, திருப்பூரில் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் சந்திப்பு நடை பெற்ற தனியார் பள்ளியில் நடந்த நிகழ்வுகளைச் சொல்லலாம். அங்கு வந்த இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் அணிந்திருந்த பெல்டுகள் கூட பறிமுதல் செய்யப்பட்டன. யாரும் கைப்பேசி கொண்டுசெல்ல அனுமதிக்கப்படவில்லை.

ராகுலுக்கு பா.ஜ.க.வினர் கருப்புக்கொடி காட்டுவதாக அறிவித்திருந்ததால், கருப்புநிற ஆடை அணிந்து வந்த இளைஞர் காங்கிரஸாரும்கூட அரங்கினுள் அனுமதிக்கப்படவில்லை. இளைஞர் காங்கிரஸாரிடம் பறிமுதல் செய்யப்பட்ட, அரங்கினுள் அனுமதிக்கப்படாத பொருள்கள், பள்ளி வளாகத்துக்கு வெளியே கேட்பாரற்றுக் கிடந்தன. அந்த அளவுக்குக் காவல்துறையினர் கெடுபிடி செய்திருந்தனர். பத்திரிகையாளர்களுக்கும் நிகழ்ச்சியில் அனுமதி மறுக்கப்பட்டது.

பள்ளிக்கு எதிர்ப்புறம் உள்ள மைதானத்தில் அமைக்கப்பட்ட ஹெலிபேடில் இருந்து காரில் ராகுல் வந்துசெல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், நிகழ்ச்சி முடிந்து திரும்புகையில் காரிலிருந்து திடீரென இறங்கிய ராகுல் காந்தி, அங்கு சாலையில் நின்றிருந்த மக்களிடம் கைகுலுக்கினார். இந்த திடீர் நடவடிக்கையை எதிர்பாராமல் காவல்துறை அதிகாரிகள் திகைத்தனர்.

பாதுகாப்புக் கெடுபிடிகளை மீறி ராகுல் காந்தி மக்களிடம் அளவளாவியது தொண்டர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியது உண்மைதான்.
எனினும், அதிருப்தியாளர் யாரேனும் ஒருவர் சிறு கல் வீசியிருந்தாலும், அன்று தமிழகத்தின் மானம் நாடு முழுவதும் கப்பலேறி இருக்கும்.

திருப்பூரில் மட்டுமல்ல, விழுப்புரம், திருநெல்வேலி ஆகிய இடங்களிலும் ராகுல் காந்தி இவ்வாறே பாதுகாப்பு வளையத்தைவிட்டு வெளிவந்து தொண்டர்களிடம் அளவளாவியதாகச் செய்திகள் கூறுகின்றன.

ராகுல் காந்தி நாடு முழுவதிலும் இவ்வாறுதான் நடந்து வருகிறார். இதுபற்றி அடிக்கடி பத்திரிகைகளிலும் பெருமிதத்துடன் செய்திகள் வெளியாகின்றன.
பாதுகாப்பு வளையத்தை மீறி மக்களிடம் புழங்குவது, தனது எளிமையையும், இனிய அணுகுமுறையையும் காட்டுவதாக அவர் நம்புவதாகத் தெரிகிறது. அவரது எண்ணம் அதுவானால், தனக்கு இஸட் பிளஸ் பாதுகாப்பு வேண்டாம் என்று அவர் மறுத்துவிட வேண்டியதுதானே?

இஸட் பிளஸ் பாதுகாப்பு முறை அளிக்கும் படாடோபமும் வேண்டும்; மக்கள் எளிதாக அணுகக்கூடிய எளிமையின் திருவுருவம் என்ற பாராட்டும் வேண்டும் என்று எதிர்பார்க்கக் கூடாது. இது "கூழுக்கும் ஆசை; மீசைக்கும் ஆசை' என்ற பழமொழியையே நினைவுபடுத்துகிறது.

உச்சபட்ச பாதுகாப்பில் உள்ள ஒருவர் பாதுகாப்பு வளையத்தை உடைப்பது, அவருக்கு மட்டுமல்லாது பலருக்கும் நாசத்தை ஏற்படுத்தும். இதை ராகுல் காந்தி உணர வேண்டும்.

திருப்பூரில் காரில் ஏறிய ராகுல் காந்தியைப் பார்க்க ஆர்வக்கோளாறால் ஓடிவந்த இளைஞர் ஒருவரை மடக்கிய போலீஸா ர் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டதையும் காண முடிந்தது. அதேசமயம், ஆர்வக்கோளாறு காரணமாக காரிலிருந்து இறங்கி பலரிடம் கைகுலுக்கிய ராகுல் காந்தியிடம் எதுவும் சொல்ல முடியாமல் அதிகாரிகள் கையைப் பிசைந்தனர்.

வருங்காலத்திலாவது, இத்தகைய தர்மசங்கடங்கள் நிகழ்வதை, பாதுகாக்கப்படும் தலைவர்களே தவிர்க்க வேண்டும். அல்லது, பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டிய காவல்துறை அதிகாரிகளாவது, சம்பந்தப்பட்டவர்களிடம் இதுகுறித்து விளக்கி, "ஆர்வக்கோளாறு'களைத் தடுக்க வேண்டும். இல்லாவிட்டால் அசம்பாவிதங்கள் நிகழும்போது அரற்றிக் கொண்டிருக்க வேண்டியதுதான்.

---------------------------------------------------------------------

நன்றி: தினமணி (06.01.2011) தலையங்கப் பக்க துணைக் கட்டுரை

காண்க: தினமணி

..

No comments:

Post a Comment