Friday, November 20, 2009

படக் கவிதை - 1



எல்லாம் பழங்கதை


மயான பூமியின் நடுகற்களா இவை?
இல்லை -
மறந்துபோன நெசவுத் தொழிலின்
மிச்ச சொச்ச அடையாளங்கள்.

ஆங்கிலேயனை மிரட்டிய
அகிம்சை ஆயுதம்
இந்த பாவுக் கற்களில் தான்
பட்டை தீட்டப்பட்டது.

நமது தாத்தாக்களும் பாட்டிகளும்
மழலைப் பருவத்தில்
இந்தப் பாவுக் கற்களில் தாவிப் பிடித்து
விளையாடி இருக்கிறார்கள்.

ஆயுத பூஜை நேரங்களில்
இக்கற்களுக்கு கற்பூர ஆரத்தி
காட்டியதும் உண்டு.

சூரியன் சுடத் தொடங்கும் முன்
கஞ்சியுடனும் நூலுடனும்
நெசவாளர்களின் ஒட்டுமொத்தக் குடும்பமும்
இங்கு தவமாய்க் கிடக்கும்.

எத்தனை கோடி துணிகளின்
உற்பத்திக்கு உதவியவை
இந்த பாவுக் கற்கள்?

பல்லாயிரம் பேருக்கு
கஞ்சி வார்த்தவை -
கிராமப் பொருளாதாரத்தின்
கிளையாய்த் திகழ்ந்தவை -
மானம் காக்க ஆடை தந்தவை-
எல்லாம் பழங்கதை.

இன்று-
தொழில்புரட்சியின் இயந்திர மயமாதலில்
நசிந்துபோன அரிய தொழிலின்
சிதிலமான நினைவுச் சின்னங்கள்.

நாய்கள் இயற்கை உபாதைக்கு
கால்களைத் தூக்குவது
இந்தக் கற்களின் மீது தான்.
எருமைகளும் கழுதைகளும்
நமைச்சலுக்கு நாடும் இக்கற்களின்
பூர்வீகம் அவற்றுக்குத்
தெரிய நியாயமில்லை தான்.

முக்காடிட்டு தலை குனிந்திருக்கும்
பாவுக் கற்களை,
பாரதம் 'இந்தியா' ஆனதன்
பரிதாப விளைவு எனலாமா?

நன்றி: சுதேசி செய்தி (ஜூன்- ஜூலை 2002 )
& விஜயபாரதம் (23.08.2002)
படம் பிடித்த இடம்: பவானி, ஈரோடு மாவட்டம்.

No comments:

Post a Comment