பின்தொடர்பவர்கள்

Friday, November 6, 2009

வசன கவிதை - 22


சம்மட்டி

கண்ணை உறுத்தும் இரும்புக் குவியல்
தோலைவாட்டும் அனல்;
புகை, ஒரே புழுக்கம்.

அந்த 45 வயது பெரியவர்
வெற்றுடம்பாய்-
ஓங்குகிறார் சம்மட்டியை.

சம்மட்டி கீழே விழும்போது
அந்த சிவந்த இரும்பு
துவண்டு போகிறது.
இரும்பு மட்டுமல்ல-
அவரும் தான்.

சம்மட்டி அடித்ததால்
காயத்துப்போன தோள்கள்;
கந்திப்போன தசை;
முகத்தில் ஆறாய் வியர்வை.

ஒரு கையால் இடுக்கியைப் பிடித்து
மறுகையால் ஓங்கி அடி.
மீண்டும் மீண்டும் வெப்பம்;
மீண்டும் மீண்டும் அடி.
இரும்பு
வழிந்துகொண்டே இருக்கிறது-
அவரும் தான்.

மொத்தம் முப்பது
வளைத்துக் கொடுத்தால் தான்
அவர் வயிறு அரையாவது நிறையும்;
இன்னும் முப்பது
வளைத்துக் கொடுத்தால்
அவர் குடும்பம் கையை நனைக்கும்.

பாவம்
பெரியவருக்கு நல்ல தாகம்;
பசி;
பற்றாக்குறைக்கு சாராய போதை.
இரும்புத் துண்டுகள் வளையமாகி
இடம் பெயர்ந்து கொண்டிருக்கின்றன-
அவரும் தான்.

No comments:

Post a Comment