பின்தொடர்பவர்கள்

Saturday, November 7, 2009

மரபுக் கவிதை - 46

நாம் பிறந்த மண்

நாம் பிறந்த மண் ஹிந்துஸ்தானம்
நாதியற்றுக் கிடந்திடல் தீமை!
நானிலம் மீதில் வேறொரு நாடு
நாட்டில் நமக்கிணை உண்டோ சொல்வாய்!

வேழம் உடலில் செருகிய வேலை
வேட்டையர் மேலே எறிந்த செந்நாடு
வேத மணங்கமழ் வேதியர் நாடு
வேறொன்றுண்டோ உலகம் தனிலே?

காதிலே கிடந்த கம்மலைக் கழற்றி
காகம் ஓட்டிய கன்னியர் நாடு!
காமனை எரித்த தேவனே கடவுள்!
காளையர் விரும்பும் கடமையோ வீரம்!

முறத்தால் புலியை துரத்திய பெண்டிர்
முகிலெனக் குளிர்ந்த முகங்களினாலே
முறைத்தால் போதும் எடுப்பார் ஓட்டம்
முட்டாள் கயவர் முன்னூறு காதம்!

வானியல் அறிவில் சோதிடர் வாழ்ந்த
வானைப் பழித்திடும் கோபுர தேசம்!
'வாய்மையே வெல்லும்' என்றன்று சொன்ன
வாமியை வணங்கும் வானவர் பூமி!

அன்பைப் போதித்த அவதார புத்தன்
அறிவுக்கு வியாசனென அளவற்ற முனிவர்
அருளுக்கு இறைவனின் அழகாலயங்கள்
அனைத்துமே செறிந்துள்ள அன்னையே பூமி!

நாம் பிறந்த மண் ஹிந்துஸ்தானம்
நாதியற்றுக் கிடந்திடல் தீமை!
நன்றி: நாளை நமது நாள்- 5

No comments:

Post a Comment