எனது நோக்கில் சுவாமி விவேகானந்தர்
ஓங்கி உயர்ந்த பலிபீடம்
கையில் கத்தியுடன்அருகிலேயே நரி.
கீழே
கழுத்தைச் சிலிர்த்துக்கொண்டு
செம்மறி ஆட்டு மந்தையாய்
இந்தியர்கள்.
எல்லோரும் பலிபீடத்தை
புகழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
தாங்கள் தான் வெட்டப் படுவோம்
என அறியாமலேயே
பலிபீடத்தை
வணங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
அனைவர் கண்ணிலும்
ஓர் ஒப்பற்ற பரவசம்.
ஒ! அடிமையாய் இருப்பதில் தான்
எத்தனை ஆனந்தம்!
செம்மறி ஆடுகள்
குழுக் குழுவாய் கூடிக் குலாவி
ஆடிக் கொண்டிருக்கின்றன.
திடீரென
இருளைக் கிழித்துக் கொண்டு
ஒரு பேரொலி:
'ஏ, அடிமைகளே!
கொஞ்சம் சிந்தியுங்கள்!
சிங்கமென சீறுங்கள்!'
செம்மறி ஆடுகள்
நிமிர்ந்து பார்க்கின்றன-
யாருக்கோ, யாரோ, சொல்வதோ?
'ஏ, சிங்கங்களே
உங்கள் மூதாதையரை
சற்றே நினைந்து பாருங்கள்!'
மந்தை மனிதர்களின்
மனம் சிறிது
சிந்திக்க ஆரம்பிக்கிறது-
நம்மிடம் தான் சொல்கிறார்கள்-
யார் சொல்கிறார்கள்?
'ஏ, இந்தியர்களே!
நீங்கள்
கடவுளின் குழந்தைகள்!
அழியாத ஆன்மாவின்
அன்பு வடிவங்கள்!
நீங்கள் ஏன்
அந்நியரை அடி பணிகிறீர்கள்?'
பேரொலி உறுமுகிறது.
ஒரு தேசபக்திச் சுழற்காற்று
எண்திசைகளிலும் விரிகிறது-
அக்னிக் குஞ்சுகள்
தம் சிறகுகளை அசைக்க,
ஒரு புதிய ஒலி எங்கும் பாய,
அந்நிய மேலாண்மை
அரண்டு போகிறது.
பேரொலியும் புரட்சி வேகமும்
பின்னிப் பிணைந்தாட
சுவாமி விவேகானந்தரின்
அசரீரி முடிந்து போகிறது;
அது முடிகிற போது,
ஒரு தேசம் ஆரம்பமாகிறது.
நன்றி: மாணவர் சக்தி
(ஜனவரி 1999 )
No comments:
Post a Comment