Saturday, November 28, 2009

வசன கவிதை - 28


மரித்த மனங்கள்

அமைதிக்காகப்
பறக்கவிட
அடைக்கப்பட்டிருக்கும்
கூண்டுப் புறாக்கள்.

எதிர்காலத்தை
சீட்டாய் எடுக்கும்
சிறகு முறிந்த
பச்சைக் கிளிகள்.

எடையைக் கூட்டி
விலையை ஏற்ற
ஊட்டம் ஏற்றிய
கறிக் கோழிகள்.

காவு கொடுக்க
காத்துக் கிடக்கும்
மாலையிட்ட
சாமியாடுகள்.

வாசனைத் திரவியம்
சுரப்பதற்காக
வளர்க்கப்படும்
புணுகுப் பூனைகள்.

நடுக்காட்டுக்குள்
புலியைப் பிடிக்கும்
தூண்டில் புழுவாய்
செம்மறியாடுகள்.

ஊக்க மருந்தை
செலுத்திச் செலுத்தி
ரேஸில் வென்ற
நொண்டிக் குதிரைகள்.

வாழ்நாள் முழுவதும்
வண்டியிழுத்தும்
அடிமாடாகும்
அற்பப் பிராணிகள்.

பந்தயம் கட்டி
பரவசம் எய்திட
கத்திக் காலுடன்
சிலிர்க்கும் சேவல்கள்.

பால்வினை நோயை
முறிக்கும் மருந்தின்
சோதனைச் சாலையாய்
ஜோடிக் குரங்குகள்.

வீட்டின் அழகைக்
கூட்டும் வகையில்
கண்ணாடி ஜாடியில்
நீந்தும் மீன்கள்.

மனித நேயத்தை
குத்தகைக்கு எடுத்த
மரித்துப் போன
மனித மனங்கள்.

நன்றி: விஜயபாரதம் (21.02.2003)

No comments:

Post a Comment