Thursday, November 12, 2009

மரபுக் கவிதை - 48


மனதிற்குள்ளொரு மிருகம்

மனதிற்குள்ளொரு மிருகம்- அது
மரமரமரவென உறுமும் தினமும்!
மனதிற்குள்ளொரு மிருகம்!

திரண்ட வெண்ணெய் கூழில் - புழு
செழித்து வளர்வது போல!
வறண்ட வேலா முற்கள்- பைங்
கழனியில் செறிவது போல!
மனதிற்குள்ளொரு மிருகம்
வஞ்சம் என்பது தீயாம் - அது
வருந்த வைக்கும் பேயாம்
நஞ்சும் உயிரைக் காக்கும்- மன
வஞ்சம் போலோ நஞ்சு?
மனதிற்குள்ளொரு மிருகம்
கோபம் உயிரைக் குடிக்கும் - அது
கொடியவர் களிலோர் அசுரன்!
தாபம் மிக்கிடல் வேண்டா - பின்
தடுத்தல் முள்மரம் களைதல்!
மனதிற்குள்ளொரு மிருகம்
அவசரம் ஆபத்தாகும்- தட
தடக் காரியம் தீது!
கவலை உடலைக் கரைக்கும் - கண்
கருவளை வீழ்ந்திட வைக்கும்!
மனதிற்குள்ளொரு மிருகம்
காமம் பெருகுது புனலாய் - மனக்
கற்பும் கெட்டிடலாக!
தாமம் உயர்வைத் தடுக்கும்- எனச்
சாத்திரம் சொல்லிடும் கேளாய்!
மனதிற்குள்ளொரு மிருகம்
வஞ்சம், கோபம், அச்சம், என
வதைப் பாடலாகும் பிறவி!
நெஞ்சம் முழுவதும் அவதி- முக
மதனில் கவலைக் கோடு!
மனதிற்குள்ளொரு மிருகம்
அஞ்சிட வேண்டாம் தம்பி - இவை
அனைத்தும் தூசென மாற்றிட லாகும்!
தஞ்சம் அடைந்திடு இறையை - நம்
தாபம் தீர்த்திட முடியும்!
மனதிற்குள்ளொரு மிருகம்...

No comments:

Post a Comment