Friday, November 13, 2009

புதுக்கவிதை - 40


கவிதா ஜனனம்

திக்கித் திணறி,
முக்கி முனகி,
இறுதியில் பிரசவமானது
கவிதை.

எத்தனை நாட்கள்
மனக் கருவறையில்
அடை காத்து
இன்று பொரிந்திருக்கிறது
கவிதை.

ஆணும் பெண்ணும்
இணைந்தால்
இனவிருத்தி.
ஆனால் கவிதை மட்டும்
தானாய் பிரசவமாகும்
பிரபஞ்சம்.

ஆணுக்கும் பெண்ணுக்கும்
கலவி இன்பம் தரும்.
அதைவிட-
கவிதை ஜனனம்
கவிஞனுக்கு
ஜன்ம சாபல்யம்.

அந்திம நேரத்தில்
அனாதையாய்
கைவிட்டுப் போவான் பிள்ளை.
ஆனால்-
உள்ளுயிர் அற்றாலும்,
என் கவியால்
என் சிசுவால்
என் ஆன்மா
உயிர்த்து வாழும்.

கவிதை என் சிசு.
கவிதை என் ஆன்மா.

காதோர முடியைக்
கையாலே புறந்தள்ளும்
காதலி;
கண்ணிரண்டும் விற்று
சித்திரம் வாங்கும்
இந்தியன்;
தன்மான உணர்வினைத்
தனலாக உரைத்திடும்
காவியம்;
அன்றாடச் சோற்றுக்கு
எச்சிலைத் தேடிடும்
எளியவன்;
ஆன்மாவின் தேடலில்
அலைந்தாடும் படகென
கீர்த்தனை...

எல்லாம் என் சிசு;
சிசுக்கள்.
பிரசவம் வேதனை தான்.
ஆனால்-
சிசு இன்பமானது.

No comments:

Post a Comment